இந்த நாளுக்குதான் நாடே காத்து கிடந்துச்சு! இன்னைக்கு நைட்டே ஷோரூம் வாசல்ல எல்லாரும் இடம் பிடிக்க போறாங்க!
இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. எனவே இந்த செக்மெண்ட்டில் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டுள்ளன. இந்த வரிசையில் இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிதாக நுழைந்துள்ள ஒரு நிறுவனம் ஸ்கோடா (Skoda). இந்த நிறுவனம் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) என்ற பெயரில் புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை வெகு சமீபத்தில் விற்பனைக்கு களமிறக்கியது.
இந்த காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Official Bookings) ஏற்கும் பணிகள் நாளை (டிசம்பர் 2) முதல் தொடங்கப்படவுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் நாளையில் இருந்து ஸ்கோடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது ஸ்கோடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ கைலக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஸ்கோடா கைலக் காருக்கு நாளை முதல் முன்பதிவுகள் தொடங்கும் அதே நேரத்தில், நாளைதான் இந்த காரின் முழுமையான விலை பட்டியலும் (Full Price List) அறிவிக்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.89 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான கார் ஆகும். இன்னும் சொல்லப்போனால் 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் ஒரே ஸ்கோடா கார் கைலக்தான்.

இதன் காரணமாகவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஸ்கோடா கைலக் ஏற்படுத்தியுள்ளது. இந்த காரின் எஞ்சிய வேரியண்ட்களின் விலை எவ்வளவு? என்பதும் நாளை நமக்கு தெரிந்து விடும். ஆரம்ப நிலை வேரியண்ட்களை போல், எஞ்சிய வேரியண்ட்களுக்கும் சவாலான விலை நிர்ணயமே செய்யப்படும் என தெரிகிறது.
ஸ்கோடா கைலக் காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. மிகவும் விலை குறைவான கார் என்பதால், ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இது மிகவும் சக்தி வாய்ந்த டர்போ பெட்ரோல் இன்ஜின் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவர் மற்றும் 178 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது விலை குறைவான கார் என்றாலும் கூட, பல்வேறு வசதிகள் (Features) நிரம்பியதாகவே இருக்கிறது.
சன்ரூஃப், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன்பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ட்ராக்ஸன் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் ஸ்கோடா கைலக் காரின் முக்கியமான வசதிகள் ஆகும்.
ஸ்கோடா கைலக் காருக்கு நாளை முன்பதிவுகள் தொடங்கப்படும் சூழலில், முதல் நாளிலேயே முன்பதிவில் சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா கைலக் காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும் ஜனவரி 27ம் தேதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகிய கார்களுக்கு எல்லாம், ஸ்கோடா கைலக் வடிவில் மிகப்பெரிய சவால் காத்து கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








