இவ்ளோதான் இந்த காரோட விலையா!.. போட்டியாளர்களுக்கு இந்நேரம் வயித்த கலக்க ஆரம்பிச்சு இருக்கும்!
இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, சப்-கம்பேக்ட் எஸ்யூவி (Sub Compact SUV) ரக கார்களுக்கு இந்தியர்கள் மிக அமோகமான வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த பிரிவின் மிக சிறந்த கார் மாடல்களாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Brezza), ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகியவை இருக்கின்றன.
இத்தனை கார் மாடல்கள் இருப்பதை வைத்தே நாம் தெரிந்துக் கொள்ளலாம் இந்த பிரிவில் எந்த அளவிற்கு கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது என்று. இருப்பினும், இந்த பிரிவை மையப்படுத்தி கார்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் சில பிராண்டுகள் மிக ஆர்வமாக உள்ளன.

அந்தவகையில், டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்ற ஜாம்பவான் கார் மாடல்களுக்கு போட்டியளிக்கும் விதமாக விரைவில் ஸ்கோடா நிறுவனம் கைலாக் எனும் புதுமுக கார் மாடலை இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
வெகுசீக்கிரமே இந்த காரை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த நிலையிலேயே கைலாக் காரின் பக்கம் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கின்ற வேலைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றது ஸ்கோடா. அந்தவகையில், கைலாக்கின் டீசர் படங்களை வெளியிடுதல் மற்றும் கார் பற்றிய விபரங்களை அறிவித்தல் போன்றவற்றையே அது செய்து வருகின்றது.
ஆகையால், கார் ஆர்வலர்களின் கவனத்தை இப்போதே கைலாக் கார் கவர்ந்துவிட்டது. இந்த நிலையிலேயே இதன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கச் செய்யக் கூடிய மற்றுமொரு புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. ஸ்கோடா நிறுவனம் இந்த காருக்கு சற்று குறைவான விலையேயே நிர்ணயம் செய்ய இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரூ. 8 லட்சம் - ரூ. 12 லட்சம் இதற்குள்ளாகவே புதிய கைலாக் காரின் விலை இருக்கும் என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் ஜனேபா தெரிவித்து இருக்கின்றார். சமீபத்தில் எக்ஸ்சேஞ்ச்4மீடியா-விற்கு அவர் அளித்த பேட்டியின் வாயிலாக இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது.
இந்த தகவல் ஸ்கோடா கார் காதலர்களை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. பலர் புதிய கைலாக் காருக்கு ரூ. 8 லட்சமே நிர்ணயிக்கப்படும் என்கிற நம்பிக்கையில் உள்ளனர். ஸ்கோடா நிறுவனம் தன்னுடைய 2.0 திட்டத்தின்கீழ் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கும் மூன்றாவது தாயரிப்பே இந்த கைலாக் ஆகும்.
இந்த காரை வைத்து மிகப் பெரிய பிளானை ஸ்கோடா போட்டுக் கொண்டிருக்கின்றது. ஆண்டுக்கு 1 லட்சம் யூனிட்டுகள் வரை இந்த காரை விற்பனைச் செய்ய அது திட்டமிட்டுள்ளது. இதனால்தான், புதிய கைலாக் கார் மாடலுக்கு ரூ. 8 லட்சம் என்கிற குறைவான விலை நிர்ணயிக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கருதப்படுகின்றது.
கைலாக் காரின் வருகை முன்னதாக பார்த்த கார் மாடல்களுக்கு மட்டுமல்ல ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகியவற்றிற்கும் போட்டியாக அமைய இருக்கின்றது. இந்த கார் மாடல் பற்றிய முக்கிய விபரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவிலே அதுபற்றிய அனைத்து விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் இந்த காரின் வருகையை முன்னிட்டு ஓர் போட்டியை தொடங்கி வைத்தது. இப்புதிய காரின் பெயரைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அந்த கார் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டியில் கேரளாவைச் சேர்ந்த ஓர் ஆசியர் வென்றிருக்கின்றார். அவருக்கு விரைவில் கைலாக் பரிசாக வழங்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








