1 மாதத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் வாங்கிட்டாங்க! ஃபோக்ஸ்வேகன் கார்களை வாங்க இந்தியாவிலும் ஆள் இருக்கு!
இந்தியாவில் கடந்த 2024 ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான கார் நிறுவனங்களின் விற்பனை சிறப்பாகவே பதிவாகி உள்ளது. மஹிந்திரா, டொயோட்டா, கியா போன்ற சில கார் நிறுவனங்கள் மட்டுமே எதிர்மறையான எண்ணிக்கையில் விற்பனையை பதிவு செய்துள்ளன. அந்த வரிசையில், ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் விற்பனையும் 2023 ஜூலை உடன் ஒப்பிடுகையில் குறைவாக பதிவாகி உள்ளது. இந்த நிறுவனங்களில் இருந்து இந்தியாவில் கடந்த மாதத்தில் அப்படி எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், வழக்கத்தை காட்டிலும் அவை எவ்வளவு குறைவு என்பதையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் கூட்டணியில் உள்ளன. இந்திய மக்களின் இரசனைக்கும், நம் ஊர் சாலைகளுக்கும் ஏற்ற கார்களை இந்த இரு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து தயாரிக்கின்றன. இதன் காரணமாக, இந்த நிறுவனங்களுக்கு கார்கள் உற்பத்தி செலவு குறைகிறது. இந்த நிறுவனங்களில் இருந்து இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் அவ்வாறான யுக்தியில் உருவாக்கப்பட்டவையே ஆகும்.

தற்சமயம் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து குஷாக், ஸ்லாவியா, கோடியாக் மற்றும் சூப்பர்ப் என மொத்தம் 4 விதமான கார்களும், ஃபோக்ஸ்வேகனில் இருந்து விர்டுஸ், டைகுன், டிகுவான் என 3 விதமான கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்கோடாவில் இருந்து கடந்த 2024 ஜூலை மாதத்தில் மொத்தம் 2,103 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டில் இதே ஜூலை மாதத்தில் 4,207 கார்களை ஸ்கோடா விற்பனை செய்து இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள 2,103 ஸ்கோடா கார்கள் எண்ணிக்கை ஆனது 50% குறைவாகும். அதாவது, 2023 ஜூலையில் விற்பனை செய்த கார்களில் பாதி எண்ணிக்கையிலான கார்களை மட்டுமே இந்த ஆண்டு ஜூலையில் ஸ்கோடா விற்பனை செய்துள்ளது.

கடந்த 2024 ஜூன் மாதத்திலும் இதனை காட்டிலும் 463 கார்கள் அதிகமாக 2,566 கார்களை ஸ்கோடா விற்பனை செய்து இருந்தது. கடந்த 2024 ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கார் குஷாக் ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் 1,070 ஸ்கோடா குஷாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஜூலையில் விற்பனை செய்யப்பட்டிருந்த ஸ்கோடா கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் இது சுமார் 1,324 குறைவாகும்.
ஏனெனில், அந்த மாதத்தில் 2,394 குஷாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல், கடந்த ஜூன் மாதத்திலும் 1,198 குஷாக் கார்களை ஸ்கோடா விற்பனை செய்திருந்தது. குஷாக்கிற்கு அடுத்து, கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கார் ஸ்லாவியா ஆகும். ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் செடான் ரக காரான ஸ்லாவியா கடந்த மாதத்தில் மொத்த 793 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 ஜூலையில் 1,654 ஸ்லாவியா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இவற்றுடன், கடந்த மாதத்தில் 240 கோடியாக் கார்களையும் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஸ்கோடாவின் அதிக விலை கொண்ட எஸ்யூவி காரான கோடியாக் 2023 ஜூலையில் 159 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தது. இவை இல்லாமல், சூப்பர்ப் என்கிற லக்சரி செடான் காரையும் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது. கடந்த 2024 ஜூன் மாதத்தில் ஒரேயொரு சூப்பர்ப் கார் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் அந்த ஒரு சூப்பர்ப் கார் கூட விற்பனையாகவில்லை.
ஃபோக்ஸ்வேகன் கார்களை பொறுத்தவரையில், கடந்த மாதத்தில் மொத்தம் 3,407 ஃபோக்ஸ்வேகன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஜூலையில் இதனை காட்டிலும் 407 கார்கள் அதிகமாக 3,814 கார்களை ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. ஃபோக்ஸ்வேகனில் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் 1,766 விர்டுஸ் கார்கள், 1,564 டைகுன் கார்கள், 77 டிகுவான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை ஓரளவிற்கு பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், ஸ்கோடா நிறுவனத்தின் கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. இதற்கு உடனடியாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரும் மாதங்களில் ஸ்கோடா கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறையலாம்.


Click it and Unblock the Notifications









