மீண்டும் இந்தியா வருது சூப்பர் ஸ்டார் மாதிரியான கார்! இது மட்டும் மார்கெட்ல கால் வச்சுது பலருக்கு அடி விழும்
ஸ்கோடா (Skoda) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைலாக் (Kylaq) கார் மாடலை சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதனை யாரும் நம்ப முடியாத குறைவான விலையிலேயே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரூ. 7.89 லட்சம் என்கிற மிக மிக குறைவான விலையிலேயே இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது எஸ்யூவி காரின் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த நிலையிலேயே ஸ்கோடா நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்பு ஒன்று கம்பேக் (மீண்டும் வருகை) கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் முன்னதாக இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்த கார் மாடல்களில் யெட்டி (Yeti)-யும் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும்.

Source: auto motor und sport இந்த கார் புதிய பரிணாமம் பெற்ற வாகனமாகவே நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. அதாவது, இன்றைய கால தலைமுறையினர்களைக் கவரும் வகையில் அதிக அம்சங்களைத் தாங்கிய வாகனமாகவே யெட்டி அதன் மறு வருகையை பதிவு செய்ய இருக்கின்றது. இந்த காரின் தோற்றம் மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது.
ஆனால், யெட்டி அதிக ஹெட்ரூம் மற்றும் கால்களுக்கான அதிக இட வசதியைக் கொண்ட எஸ்யூவி ரக காராக இருக்கும். இத்தகைய காரை இந்தியாவில் மீண்டும் கம்பேக் கொடுக்க இருப்பதாக நிறுழனத்தின் மூத்த அதிகாரியான கிளாஸ் ஜெல்மர் சமீபத்திய தனியார் ஊடகம் ஒன்றுடனான உரையாடலின்போது தெரிவித்தார்.
சமீப காலமாக இந்தியாவில் கடந்த காலங்களில் விற்பனையில் இருந்த வாகனங்கள் புதிய முகத்துடன் தங்களின் மறு வருகையை பதிவுச் செய்து வருகின்றன. அந்தவகையில், டாடா சஃபாரி, மாருதி சுஸுகி ஜிப்ஸி மற்றும் மஹிந்திரா தார் உள்ளிட்ட கார் மாடல்கள் மீண்டும் மார்க்கெட்டில் களமிறங்கி தற்போது விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையிலேயே ஸ்கோடா யெட்டியும் அதன் மறுகை பதிவு செய்து நாட்டில் மிக அமோகமான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரில் முன்பு விற்பனையில் இருந்தபோது அதிக இட வசதி, 4X4 தொழில்நுட்பம் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆகியவற்றிற்காக அறியப்பட்டது.
தன்னுடைய இந்த தன்மைகளை புதிய அவதாரத்தின்போதும் யெட்டி மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், டீசல் எஞ்சின் அதில் வழங்கப்படுமா என்பது மட்டும் சந்தேகமே. அதேநேரத்தில் இந்தியர்களின் எதிர்பார்ப்பையும், தேவையையும் பூர்த்திச் செய்யக் கூடிய அம்சங்கள் பலவற்றை இது தாங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், பெரிய தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கார் இணைப்பு வசதி, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி உள்ளிட்டவையும் ஸ்கோடா யெட்டி எஸ்யூவி காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதுமட்டுமில்லைங்க, காற்றோட்டத்தை உறுதிச் செய்யும் திறன் கொண்ட இருக்கை, ஆம்பியன்ட் லைட் போன்ற பிரீமியம் தர அம்சங்கள் பலவற்றை இது தாங்கியிருக்கும் என கூறப்படுகின்றது. குறிப்பாக, சமீபத்தில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த கைலாக் கார் மாடலில் காணப்படும் அம்சங்கள் பலவற்றை இதில் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா ஸ்கோடாவிற்கு முக்கிய சந்தையாக மாறி இருக்கின்றது. குறிப்பாக, நிறுவனம் கையாண்டு வரும் 2.0 திட்டம் அதற்கு மிகப் பெரிய அளவில் கை கொடுத்திருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய யெட்டி காருக்கு கம்பேக் கொடுக்கும் பணியில் ஸ்கோடா நிறுவனம் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எப்போது வரும் என்கிற விபரம் வெளியாகவில்லை. விரைவில் அதுபற்றிய தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








