இதுக்கு பைக்கை வாங்கிடலாமே! எப்படி எல்லாம் யோசிக்குறாங்க - 2 பேருக்கு மட்டும்தான் அனுமதி!!
ஜீப் (Jeep) நிறுவனத்தின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களை பல்வேறு விதமான உடலமைப்புகளில் பார்த்திருப்பீர்கள். இருப்பினும், இந்த மாதிரி பார்த்திருக்க மாட்டீர்கள் என சொல்லும் அளவிற்கு மிகவும் மெல்லியதான உடலமைப்புடன் இங்கு ஒரு ஜீப் வாகனம் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. மிகவும் ஒல்லிய, இருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய வகையில் இருக்கும் இந்த ஜீப் வாகனம் இந்தியாவை சேர்ந்தது கிடையாது. இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஜீப் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
வாகனங்களை தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்பவர்கள் உலகம் முழுக்கவே பரவலாக இருக்கின்றனர். இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால், வாகனங்களை மாடிஃபை செய்வது நம் நாட்டில் தான் சற்று குறைவு என சொல்ல வேண்டும். மற்றப்படி, சில நாடுகளில் மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்கள் சர்வ சாதாரணமாக சாலைகளில் உலா வருகின்றன.

ஏனெனில், சில வெளிநாடுகளில் வாகனங்களை மாடிஃபை செய்வது குற்றமற்றதாக உள்ளது. இருப்பினும், எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான ஒரு ஜீப் வாகனத்தை பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில், அந்த அளவிற்கு ஓர் விசித்திரமான தோற்றத்தை இந்த ஜீப் வாகனம் கொண்டுள்ளது. வாகனங்களில் ஓனர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பொருத்திக் கொள்வதற்காக பல்வேறு பாகங்கள் உதிரி பாக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால், இந்த ஜீப் வாகனத்தை மொத்தமாக அகலம் குறைவானதாக மாற்றியுள்ளனர். அதாவது, வாகனத்தின் அடிப்படை சேசிஸில் கை வைத்துள்ளனர். வாகனத்தின் பக்கவாட்டில் இருந்து பார்த்தால், வாகனத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை அறிய முடியாது. அதுவே, வாகனத்திற்கு முன்னாலும், பின்னாலும் இருந்து பார்த்தால்தான் இந்த வாகனம் எந்த அளவிற்கு உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியும். உலகத்திலேயே மிகவும் மெல்லியதான ஜீப் வாகனமாக இது கருதப்படுகிறது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஜீப் வாகனம் மொராகோவை சேர்ந்தது ஆகும். இந்த வாகனத்தில் எங்களை கவர்வது என்னவென்றால், அகலம் பெரிய அளவில் குறைக்கப்பட்ட போதிலும் இந்த வாகனம் அதன் எஸ்யூவி நிலைப்பாட்டில் உள்ளது. அதாவது, எஸ்யூவி ரக கார்களுக்கே உண்டான கம்பீரமான தோற்றத்தில் நிற்கிறது மற்றும் இயங்குகிறது.
குறிப்பாக, இந்த மாடிஃபை வாகனம் இயங்குவதை பார்க்கும்போது அவ்வளவு பிரம்மிப்பாக உள்ளது. ஏனெனில், இவ்வாறான வாகனத்தை ஓட்டுவதற்கே தனி தைரியம் வேண்டும். வாகனத்தின் உயரம் அதிகரித்து, எடை குறைந்திருப்பதால், வாகனம் கவிழ்வதற்கு வாய்ப்புள்ளது. கவிழாமல் தடுக்க, வாகனத்தினுள் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் இல்லை.

மணல் நிறைந்த பரப்பில் இவ்வாறான வாகனங்களை ஓட்டுவது கடினம். இருப்பினும், அதனையும் இவர் சாத்தியமாக்கி உள்ளார். சாதாரணமாக காரை ஓட்டுவதுபோல் இதனை ஓட்டுகிறார். இந்த வாகனத்தின் முன்பக்கத்தில் இரு ஹெட்லைட்களும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக உள்ளதை காணலாம். பார்ப்பதற்கு 4 சக்கரங்களை கொண்ட பைக் போன்று உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஜீப் வாகனத்தை என்னதான் பாதுகாப்பாக உருவாக்கி இருந்தாலும், இவ்வாறான வாகனங்கள் ஆபத்தானவை. வாகனங்களை மாடிஃபை செய்வதே முதலில் நம் நாட்டில் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. அத்துடன், இந்த அகலம் குறைவான வாகனம் சிறந்த பாதுகாப்பு தரத்தில் இருக்கும் என உறுதியளிக்க முடியாது. இந்தியாவில் இவ்வாறான வாகனத்தை சாலையில் பயன்படுத்தவே முடியாது; உடனே போலீசார் தூக்கிவிடுவர்.


Click it and Unblock the Notifications









