இந்த ஆண்டோடு ஜிம்னி காரின் விற்பனையை நிறுத்த சுஸுகி திட்டம்.. அதிர்ச்சியில் மூழ்க வைக்கும் தகவல்கள்!
காற்று மாசுபாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான விதியின் காரணமாக சுஸுகி ஜிம்னி (Suzuki Jimny) விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு மத்தியில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் கார் மாடலே ஜிம்னி ஆகும். குறிப்பாக, மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV) காருக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இத்தகைய கார் மாடலுக்கா இப்படி ஒரு நிலைமை என்றே நம்மில் பலரை இந்த தகவல் புலம்ப செய்திருக்கின்றது.
ஆனால், இந்த வெளியேற்றமானது இந்தியாவிற்கானது அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐரோப்பிய நாடுகளிலேயே இந்த அதிர்ச்சியான செயல் அரங்கேற்றம் செய்யப்பட இருக்கின்றது. அங்கு காற்று மாசைக் கருத்தில் கொண்டு மிகக் கடுமையான விதிகள் வாகனங்கள் விஷயத்தில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நெருக்கடியின் காரணமாகவே ஜிம்னியை அங்கு விற்பனையில் இருந்து அகற்ற இருப்பதாக சுஸுகி அறிவித்து இருக்கின்றது.

நம் ஊரில் பயணிகள் வாகன பிரிவில் விற்கப்படும் இந்த ஜிம்னி கார், அங்கு வர்த்தக கார்கோ வேனாக விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதன் விற்பனையே தற்போது நிறுத்தப்பட உள்ளது. மேலும், இதன் வெளியேற்றத்தை முன்னிட்டு அந்த காருக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக ஜிம்னி ஹொரைசன் எடிசன் (Jimny Horizon Edition) எனும் சிறப்பு பதிப்பு இங்கிலாந்து நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த சிறப்பு பதிப்பு அங்கு விற்கப்பட இருக்கின்றது. சுமார் 900 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்காக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஜிம்னி ஹொரைசன் எடிஷன், லைட் கிரே நிறத்தில் கருப்பு நிற டீக்கேல்களுடன் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதில், அலுமினியம் ஸ்கிட் பிளேட் மற்றும் அதற்கு மேட்சான சைட் ஸ்கர்ட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன், ஸ்டைலிஷான மட் ஃபிளேப்ஸ், நீக்கக்கூடிய டிரெய்லர் ஹிட்ச் மற்றும் சுஸுகி பிராண்டட் ஸ்பேர் வீல் கவர் ஆகியவையும் இந்த சிறப்பை பதிப்பை அலங்கரிக்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், அதன் பக்கவாட்டில் உள்ள கறுப்பு நிற தகடு மற்றும் ஹொரைசன் எழுத்துகள் அதன் தனித்துவத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
இதுதவிர, இந்த சிறப்பை பதிப்பை அலங்கரிக்கும் விதமாக கருப்பு எஃகு சக்கரங்கள், ஹாலோஜன் ஹெட்லைட்டுகள், சுஸுகியின் கிளாசிக் கிரில் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்களை ஜிம்னி ஹொரைசன் பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனவே சீக்கிரமே அந்நாட்டில் ஜிம்னி விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், தற்போது இந்த கார் விற்பனையில் இருந்து அகற்றப்படுவதற்கான இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதால் 5 கதவுகள் கொண்ட ஜிம்னி ஐரோப்பிய நாடுகளில் விற்பனக்குக் களமிறக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழும்பி இருக்கின்றது. அதுவே இந்த கார் மின்சார வெர்ஷனில் உருவாக்கப்படும் எனில், அதன் அறிமுகத்திற்கு இங்கிலாந்தில் எந்த தடையும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் விற்கப்படும் ஜிம்னியில் இருக்கும் அதே கே15பி 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியுடன் ஐரோப்பாவிற்கான ஜிம்னியிலும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த கார் ஒரு கிமீட்டருக்கு 154 கிராம் அல்லது 170 கிராம் வரையில் கார்பனை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது.
இதுவே அந்த காரின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக மாறி இருக்கின்றது. புதிய யூரோ மாசு உமிழ்வு விதியானது ஒரு கிமீட்டருக்கு 95 கிராமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது. இதைக் கடைபிடிக்கும் கார்கள் மட்டுமே இனி இங்கிலாந்தில் விற்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனையில் இருந்து விரைவில் அகற்றப்பட இருப்பதன் விளைவாக ஜிம்னிக்கான ஆர்டரை ஏற்கும் பணிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த சுஸுகி கார் விற்பனையாளர்கள் நிறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளில் இந்த நிலையே தற்போது நிலவுவதாகக் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








