எல்லாரும் ஆஹா, ஓஹோனு சொல்லும் சுஸுகி காரின் தரம் இவ்வளவு தானா? ஓப்பனாக போட்டுடைத்த கிராஷ் டெஸ்ட் முடிவுகள்!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களுள் ஒன்றாக ஸ்விஃப்ட் (Swift) விளங்குகிறது. மாதத்திற்கு 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ஸ்விஃப்ட் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் அசால்ட்டாக விற்பனை செய்து வருகிறது. இருப்பினும், ஸ்விஃப்ட் காரின் தரம் குறித்து மக்களிடையே எப்போதும் ஒருவித சந்தேகம் உள்ளதை மறுப்பதற்கு இல்லை. அந்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கார்களின் பாதுகாப்பு தரத்தை சுட்டிக்காட்டும் வகையில் உலகம் முழுவதிலும் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய அரசாங்கம் தனக்கான பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் அமைப்பை கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ததை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதேபோல், ஆஸ்திரேலியா நாட்டில் ஆஸ்திரேலியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் நடத்தப்படுகிறது.

இந்த ஆஸ்திரேலியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 2024 சுஸுகி ஸ்விஃப்ட் கார் சமீபத்தில் உட்படுத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன. ஏனெனில், ஆஸ்திரேலியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் வெறும் 1 ஸ்டாரை சுஸுகி ஸ்விஃப்ட் கார் பெற்றுள்ளது. இத்தனைக்கும், இந்த கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2024 சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஆகும்.
ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்தில் விற்பனையில் உள்ள 2024 சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஆஸ்திரேலியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சோதனை செய்யப்பட்ட 2024 ஸ்விஃப்ட் காரில் அடாஸ் (ADAS) வசதியும் உள்ளது. அடாஸ் ஆனது கார்களில் அத்தியாவசியமான தொழிற்நுட்பமாக மாறி வருகிறது. இருப்பினும், இந்தியாவில் இன்னமும் சற்று விலைமிக்க கார்களில் மட்டுமே அடாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

அடாஸ் மூலமாக, டிரைவரால் பார்க்க முடியாத பகுதியை கண்காணிக்கும் வசதி, சாலையில் ஒரே பாதையில் விலகாமல் செல்ல உதவி உள்பட சில அட்வான்ஸான உதவிகளை பெற முடிகிறது. இத்தகைய வசதிகளை வழங்கக்கூடிய அடாஸை கொண்டிருந்த போதிலும் 2024 ஸ்விஃப்ட் கார் 5க்கு வெறும் 1 நட்சத்திரத்தை பெற்றிருப்பது பெரிதும் அதிர்ச்சியளிக்கிறது. இதே ஸ்விஃப்ட் கார் ஐரோப்பிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு 3 நட்சத்திரங்களை பெற்றிருந்தது.
ஆஸ்திரேலியன் என்சிஏபி கிராஸ் டெஸ்ட்கள் 4 விதமான பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. பெரியவர்கள் பாதுகாப்பு, குழந்தை பயணிகள் பாதுகாப்பு, சாலை பாதசாரிகளுக்கான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உதவிகள் என்பன அந்த 4 பிரிவுகள் ஆகும். ஆஸ்திரேலியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் மட்டுமின்றி, பெரும்பாலும் எல்லா என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களும் இந்த 4 பிரிவுகளில் தான் நடத்தப்படுகின்றன.

இதில், ஆஸ்திரேலியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் 40க்கு 18.88 மதிப்பெண்களை 2024 ஸ்விஃப்ட் கார் பெற்றுள்ளது. அதாவது, பெரியவர்களுக்கு 100க்கு 47 சதவீத பாதுகாப்பை 2024 ஸ்விஃப்ட் வழங்கும் என கிராஷ் டெஸ்ட் முடிவுகள் தெரிவிக்கின்றன. குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 49க்கு 29.24 மதிப்பெண்களை ஸ்விஃப்ட் கார் பெற்றுள்ளது. அதாவது, 100க்கு 59%.
சாலையை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 63க்கு 48.40 மதிப்பெண்களையும், பாதுகாப்பு உதவி அமைப்பில் 18க்கு 9.78 மதிப்பெண்களையும் 2024 சுஸுகி ஸ்விஃப்ட் கார் பெற்றுள்ளது. ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் காருக்கும், ஆஸ்திரேலிய ஸ்விஃப்ட் காருக்கும் இயந்திர நுட்பங்களில் வித்தியாசம் உள்ளதால் ஆஸ்திரேலிய மாடலை இன்னும் கூடுதலாக சோதனை செய்ய விரும்பியதாக ஆஸ்திரேலியன் என்சிஏபி-இன் சிஇஓ தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் காரில் அடாஸ் வசதிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. அப்படியென்றால், நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் காரின் தரம் மீது இன்னும் கேள்வி எழுகிறது. ஆஸ்திரேலியன் என்சிஏபி மட்டுமின்றி, க்ளோபல் என்சிஏபி அமைப்பும் ஸ்விஃப்ட் காருக்கு வெறும் 1 நட்சத்திரத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









