4.19% சதவீத வட்டியில் ஸ்விஃப்ட் கார்! பஞ்சு மிட்டாய் கலர்ல புதுசா விட்டிருக்காங்க!
சுஸூகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரின் மூன்றாம் தலைமுறை காரை பிங்க் மற்றும் பர்பிள் நிறத்தில் வடிவமைத்து பார்க்கவே வித்தியாசமான லுக்கில் இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 14 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் எங்கு அறிமுகமாகியுள்ளது? யார் யார் இந்த காரை வாங்க முடியும் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சுஸூகி நிறுவனம் சர்வதேச அளவில் வாகனங்களை தயார் செய்து விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் குறிப்பாக இந்தியாவைப் போல தாய்லாந்து நாட்டிலும், அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டில் இந்நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரின் ஸ்பெஷல் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் கடந்த நவம்பர் 29ம் தேதி முதல் வரும் டிசம்பர் 10ம் தேதி வரை நோட்டார் எக்ஸ்போ 2024 என்ற கண்காட்சி நடந்து வருகிறது. இதில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தனித்துவமான வாகனங்களை காட்சிப்படுத்தியும் அறிமுகப்படுத்தியும் வருகிறார்கள் .அதன்படி சுஸூகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரின் ஸ்பெஷல் எடிசன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுஸூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் 4ம் தலைமுறை காராக சர்வதேச மார்க்கெட்டிலும். இந்திய மார்க்கெட்டிலும் விற்பனையாகி வரும் நிலையில், தாய்லாந்தில் தற்போது வரை மூன்றாம் தலைமுறை கார் தான் விற்பனையில் இருக்கிறது. தாய்லாந்தில் நடக்கும் இந்த கண்காட்சியில் இந்த மூன்றாம் தலைமுறை காரில் தான் ஸ்பெஷல் எடிச்சனை உருவாக்கி இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த காரின் தனித்துவமே இதில் இருக்கும் கலர் தான். இந்த காரின் முன் பகுதியில் பர்பிள் கலந்த பிங்க் நிறம் கொண்டும், பின்பகுதியில் ப்ளூ நிறம் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிராடியன்ட் கலர் லுக்கில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான கார் காலராக இல்லாமல் இது தனித்துவமாகவும் வித்தியாசமாக தெரியும் வகையிலும் இருக்கிறது. பலருக்கு இப்படியான நிறம் பிடிக்காவிட்டாலும் இப்படியான வங்கியில் பிடித்த வாடிக்கையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களை டார்கெட் செய்து சுஸூகி நிறுவனம் இந்த ஸ்பெஷாலிட்டி காரை வெளியிட்டுள்ளது. இதில் முன் பகுதியில் வெள்ளை சிவப்பு மற்றும் கருப்பு நிற டிசைன் அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இந்த காரின் அலாய் வீல் வித்தியாசமான அளவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அலாய் வீல் பகுதி அதிக இடைவெளி கொண்ட வடிவமைப்பாக இருப்பதால் உள்ளே இருக்கும் டிஸ்க் பிரேக் தெளிவாக தெரிகிறது.

மற்றபடி இந்த கார் அந்த நாட்டின் விற்பனையாகி வரும் மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் போலவே இருக்கிறது இந்தியாவில் விற்பனையான மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் காரும் இதே போல வடிவமைப்பு தான் இருந்தன. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள் எல்லாம் இதே போலவே இந்தியாவிலும் விற்பனையாகி வந்தது.
இந்நிறுவனம் இந்த காரை அந்த நாட்டில் இந்திய மதிப்பின்படி ரூபாய் 14 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த காரை இந்த கண்காட்சியில் புக்கிங் செய்பவர்களுக்கு ஏகப்பட்ட ஆஃபர்களையும் வழங்கி உள்ளது. அதன்படி இந்த காரின் விலையிலிருந்து 26.25 சதவீதம் பணத்தை முன்பணமாக செலுத்தி இந்த காரை புக்கிங் செய்ய முடியும். பாக்கியுள்ள பணத்திற்கு 4.19 சதவீதம் வட்டி செலுத்தி 99 மாதங்களில் மாதம் ரூபாய் 14,300 என்ற இந்திய ரூபாய் பணத்தை இஎம்ஐயாக செலுத்தினால் இந்த காரை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
இது மட்டுமல்லாமல் இந்த காருக்கு அந்நிறுவனம் 7 ஆண்டுகளுக்கான இலவச சர்வீஸ், 7 ஆண்டு வாரண்டி மற்றும் 7 ஆண்டு ரோடு சைடு அசிஸ்டென்ஸ் உள்ளிட்ட வசதிகளையும் வழங்குகிறது. இதனால் அந்த நாட்டில் இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கண்காட்சி வாங்குவோர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது.
சுஸூகி நிறுவனத்தின் காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் கே 12 எம் 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 83 பிஎஸ் பவரையும், 108 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸூகி நிறுவனம் இந்த காரை தாய்லாந்தில் அறிமுகப்படுத்தி இருந்தாலும் இந்திய மக்கள் மத்தியில் ஸ்விஃப்ட் காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பலர் இந்த காரை இந்தியாவில் வாங்குகிறார்கள். இருந்தாலும் இந்த கலர் பலருக்கு பிடிக்காத கலர் என்பதால் இதை ஒரு லிமிடெட் ஸ்பெஷல் எடிசன் காராக இந்தியாவிற்கு கொண்டு வந்தால் இந்த கலர் பிடித்த மக்கள் இதை வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications









