வேகன்ஆர் காரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த புதிய கார்! 25.75 கிமீ மைலேஜ் தருவது தான் காரணமா?
இந்தியாவிலேயே மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாருதி நிறுவனம் தான் இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான கார்களை இந்நிறுவனம் தான் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் டிசையர், வேகன்ஆர், பலேனோ ஆகிய கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்த கார் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில் மாருதி நிறுவனம் தான் முதலிடத்தை பெறும். இந்நிலையில் கடந்த மே மாத விற்பனையில் எப்பொழுதும் முதலிடம் பெறும் வேகன்ஆர் கார் இந்த முறை முதலிடத்தை தவற விட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் மாருதி நிறுவனம் முதலிடத்தில் இருக்கும் நிலையில், அந்நிறுவனம் தயாரிக்கும் வேக்ன் ஆர் கார் தான் மக்கள் அதிகம் விரும்பும் காராக இருந்தது. இதனால் அதிக எண்ணிக்கையிலான கார்கள் விற்பனை பட்டியலில் வேகன் ஆர் கார் தான் எப்பொழுதும் முதலிடம் பெறும்.

இந்நிலையில் கடந்த மே மாத விற்பனை விபரங்களை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. வழக்கம் போல இந்த முறையும் மாருதி நிறுவனம்தான் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து வாகன தயாரிப்பு நிறுவனங்களின் டாப் 10 பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால் நிறுவனம் தயாரிக்கும் வேகன் ஆர் கார் தான் இதுவரை அதிக எண்ணிக்கையில் விற்பனையில் முதலிடத்தில் இருந்த நிலையில் அந்த கார் தற்போது அந்த இடத்தை தவற விட்டுள்ளது.
கடந்த மே 9ம் தேதி மாருதி நிறுவனம் தனது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்காக இந்தியாவில் ஏகப்பட்ட மக்கள் காத்திருந்தார்கள். இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு வெளியான உடன் உடனடியாக வாங்க வேண்டும் என பலர் காத்திருந்தார்கள். கடந்த மாதமே இந்த காருக்கான புக்கிங் மற்றும் டெலிவரி துவங்கிய நிலையில் ஒரே மாதத்தில் 19,339 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இதுவே அந்நிறுவனம் விற்பனை செய்யும் வேகன் ஆர் காரை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் 17,850 கார்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருந்தது. தற்போது வேகன் ஆர் காரை பின்னுக்கு தள்ளி மாருதி ஸ்விஃப்ட் கார் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய ஸ்விஃப்ட் காரில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இதன் இஞ்சின், விலை, உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காண்போம்.
அப்டேட் செய்யப்பட்ட மாருதி ஸ்விப்ட் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் 3-சிலிண்டர் இஸட் சீரிஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 பிஎச்பி பவரையும் 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் நேரடியாக 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது.

இந்த கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவதற்கு முக்கியமான காரணம் இதன் மைலேஜ் தான். மாருதி நிறுவனம் இந்த காரின் மேனுவல் கியர் வேரியண்ட் 24.8 கிலோமீட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர் வேரியன்ட் கார் 25.75 கிலோமீட்டர் மைலேஜையும் வழங்கும் திறன் கொண்டதாக உருவாக்கியுள்ளது. அதிக மைலேஜ் தருவதால் பெட்ரோல் செல்ல செலவு குறைவாக இருக்கும் என கருதி மக்கள் பலர் இந்த காரை வாங்கி வருகிறார்கள்.
இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரில் ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜிங், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இதுபோக இந்த காரில் பாதுகாப்பு அம்சத்திற்காக 6 ஏர் பேக்குகள், பின்பக்க பார்க்கிங் சென்சார், பின்பக்க பார்க்கிங் கேமரா உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மாருதி ஸ்விப்ட் கார் மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 6.49 லட்சம் முதல் ரூபாய் 9.64 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. விலையும் குறைவாக இருப்பதால் இந்த கார் மீது மக்கள் அதிக மோகம் கொண்டு உள்ளார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் இந்த புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் மீது மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்ததால் ஏகப்பட்ட நபர்கள் இந்த காரை புக் செய்துள்ளார்கள். ஒரே மாதத்தில் 50 ஆயிரம் பேர் இந்த காரை புக் செய்து இருக்கிறார்கள். அதன் காரணமாக இந்த காரின் விற்பனை என்பது அதிகரித்துள்ளது. இந்த காரை சாலையில் பார்த்தவுடன் புக்கிங் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









