ஓசூரில் உருவாகும் புது கேம் சேஞ்சர் வாகனம்... சாலை முழுக்க இனி இந்த எலக்ட்ரிக் வாகனத்தை பார்க்கலாம்!!
ஸ்விட்ச் மொபைலிட்டி (Switch Mobility) நிறுவனம் மிகுந்த சோதனைகள் & ஆய்வுகளுக்கு பின் அதன் முதல் எடை குறைவான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களை கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. ஸ்விட்ச் எல்.இ.வி3 (Switch leV3) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த வாகனங்களில் ஒன்றின் உற்பத்தி பணிகள் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் துவங்கப்பட்டது. இந்த நிலையில், ஸ்விட்ச் மொபைலிட்டி உருவாக்கிய முதல் எல்இவி3 வாகனம் உற்பத்தி பணிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு, தொழிற்சாலையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு உள்ளது.
பெரிய, பெரிய லாரிகள் பேருந்துகள் போன்ற கனரக வாகனங்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமாக ஸ்விட்ச் மொபைலிட்டி விளங்குகிறது. இந்த நிறுவனம் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு எல்இவி4 மற்றும் எல்இவி3 என்கிற இரு எடை குறைவான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களை கடந்த ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதில், ஸ்விட்ச் எல்இவி4 வாகனத்தின் உற்பத்தி பணிகள் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கப்பட்டன. அதன்பின், முதல் எல்இவி4 வாகனம் அடுத்த சில நாட்களில் தொழிற்சாலையில் இருந்து விற்பனைக்கு வெளியேற்றப்பட்டது. முதல் எல்இவி4 வாகனம் தொழிற்சாலையில் இருந்து தற்போது வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், எல்இவி3 வாகனம் அடுத்த 3 மாதங்களில் வெளியேற்றப்படும் எனவும் அப்போது ஸ்விட்ச் மொபைலிட்டியின் சிஇஓ தெரிவித்து இருந்தார்.
அதன்படி, முதல் எல்இவி3 வாகனம் தற்போது ஸ்விட்ச் மொபைலிட்டியின் ஓசூர் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்துள்ளது. தொழிற்சாலையில் இருந்து முதல் எல்இவி3 வாகனம் விற்பனைக்கு அனுப்பப்படுவதை கொடியசைத்து ஸ்விட்ச் மொபைலிட்டியின் தொழிற்சாலையில் கொண்டாடி உள்ளனர். பிரபலமான அசோக் லேலண்டின் துணை நிறுவனம் தான் ஸ்விட்ச் மொபைலிட்டி என்பது உங்களில் சிலருக்கு தெரிந்து இருக்கலாம்.
அசோக் லேலண்டின் 75ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகவே ஸ்விட்ச் மொபைலிட்டி அதன் முதல் எடை குறைவான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களை அறிமுகம் செய்தது. இந்த கமர்ஷியல் வாகனங்களின் பின்பக்க லோடு பகுதியானது 9.7 அடி நீளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகப்பட்சமாக 1.7 டன் வரையிலான சுமையை ஏற்ற முடியும். அதேபோல், உட்பக்க கேபினும் நன்கு விசாலமான இடவசதி உடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஸ்விட்ச் எல்இவி4 மற்றும் எல்இவி3 எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களில் 25.6kWh-இல் இருந்து 32.2kWh வரையில் திறன் கொண்ட பேட்டரிகள் வேரியண்ட்களை பொறுத்து வழங்கப்பட்டுள்ளன. மேலும், 20க்கும் அதிகமான கஸ்டமைசேஷன் வசதிகளும் இந்த வாகனங்களில் வழங்கப்படுகின்றன. ஹில் ஹோல்ட் அசிஸ்ட், எலக்ட்ரிக் பவர் ஸ்டேரிங், ரிவர்ஸ் பார்க் அலார்ட் என ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகள் இந்த வாகனங்களில் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், எலக்ட்ரிக் பேருந்துகளை உற்பத்தி செய்யும் பணிகளிலும் ஸ்விட்ச் நிறுவனம் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. இஐவி12 என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விட்ச் மொபைலிட்டியின் எலக்ட்ரிக் பேருந்து 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. டபுள்-டக்கர் பேருந்தாக உருவாக்கப்படும் ஸ்விட்ச் இஐவி12 எலக்ட்ரிக் பேருந்துகள் ஐஐடி மெட்ராஸின் சொந்த பயன்பாட்டிற்கும், பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் தீவிரமாக இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று, ஸ்விட்ச் மொபைலிட்டி ஆகும். கனரக வாகனங்களை எலக்ட்ரிக் மோட்டார் உடன் கொண்டுவரும் அதேநேரம், இவ்வாறான புது, புது எடை குறைவான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்வதும் அவசியமானது ஆகும். இதன்படி, வெற்றிக்கரமாக எல்இவி3 மற்றும் எல்இவி4 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய ஸ்விட்ச் மொபைலிட்டி ஆரம்பித்துவிட்டது.


Click it and Unblock the Notifications








