கொஞ்சம் செலவு பண்ணால் போதும்... பவர் ஃபுல்லான பிராண்ட்-நியூ டாடா காரை சொந்தமாக்கலாம்!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து புதியதாக அல்ட்ராஸ் ரேஸர் (Altroz Racer) கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் பழைய அல்ட்ராஸ் காரையும் தொடர்ந்து விற்பனை செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வடிவத்தை பொறுத்தவரையில் இரண்டிற்கும் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், தோற்றத்திலும், என்ஜின் ஆப்ஷன்களிலும் இரண்டும் நிறைய வேறுப்படுகின்றன. வழக்கமான டாடா அல்ட்ராஸ் மற்றும் புதிய அல்ட்ராஸ் ரேஸர் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகள் என்னென்ன? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
வெளிப்புற தோற்றம்: ஏற்கனவே வடிவத்தில் இரண்டும் ஒரே மாதிரியானவையே. அதாவது, இரண்டும் ஹேட்ச்பேக் ரக கார்களாகும். ஆனால், புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரை ட்யூயல்-டோன் பெயிண்ட்டில் பெறலாம். ஆனால், ரெகுலர் அல்ட்ராஸ் காரை சிங்கிள்-டோன் பெயிண்ட்டில் மட்டுமே பெற முடியும். புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரில் வெள்ளை நிறத்திலான இரு கோடுகள் பொனெட்டில் இருந்து மேற்கூரை வரை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த புதிய காரில் டாடா மோட்டார்ஸின் லோகோ தனியாக தெரியாத வகையில் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், அல்ட்ராஸ் ரேஸர் காரின் 16-இன்ச் அலாய் சக்கரங்கள் கூட டார்க் ஃபினிஷிங்கில் கிடைக்கும். புதுமையான அல்ட்ராஸ் கார் என்பதை வெளிக்காட்டும் வகையில் புதிய அல்ட்ராஸ் ரேஸரின் முன்பக்க ஃபெண்டரில் 'ரேஸர்' பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், டர்போ என்ஜின் உள்ளதை குறிக்கும் வகையில் 'ஐ-டர்போ' பேட்ஜ் காருக்கு பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
உட்பக்க தோற்றம் & தொழிற்நுட்ப அம்சங்கள்: காருக்குள் டேஸ்போர்டின் வடிவத்தில் பழைய அல்ட்ராஸுக்கும், புதிய அல்ட்ராஸ் ரேஸர் காருக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், அல்ட்ராஸ் ரேஸரில் ஆரஞ்சு நிறத்தை டேஸ்போர்டில் கூடுதலாக டாடா நிறுவனம் கொடுத்துள்ளது. அதேபோல், இந்த புதிய காரின் கேபினுக்குள் நிறைய இடங்களில் ஆரஞ்ச் மற்றும் வெள்ளை நிறங்களை பார்க்க முடிகிறது. ஆனால், அல்ட்ராஸில் கேபின் முழுவதுமாக கருப்பு & பழுப்பு நிறத்தில் கிடைக்கிறது.
தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரில் மட்டுமே உங்களால் வெண்டிலேட்டட் இருக்கைகளை பெற முடியும். இந்த புதிய காரை அறிமுகம் செய்திருப்பதுடன், அல்ட்ராஸ் காரிலும் சில வசதிகளை புதியதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அவற்றுள் முக்கியமானது, அளவில் பெரிய 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். மேலும், வயர்லெஸ் போன் சார்ஜர், காற்று சுத்திகரிப்பான் போன்றவையும் இரு கார்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

பவர்டிரெயின்: புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரின் அறிமுகத்திற்கு முன்பு வரையில், அல்ட்ராஸ் காரில் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களை டாடா நிறுவனம் வழங்கிவந்தது. ஆனால், அல்ட்ராஸ் ரேஸர் காரை சிறப்பானதாக காட்டும் முயற்சியாக அல்ட்ராஸ் காரில் இருந்து ஐ-டர்போ என்ஜின் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. அந்த டர்போ என்ஜின் ஆப்ஷன் அப்படியே புதிய அல்ட்ராஸ் ரேஸர் காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதேநேரம் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரில் பெற முடியாது. இவற்றை ரெகுலர் அல்ட்ராஸ் காரில் மட்டுமே பெற முடியும். அல்ட்ராஸ் ரேஸர் காரில் கிடைக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 118 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இதே டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் தான் டாடா நெக்ஸான் காரிலும் கொடுக்கப்படுகிறது.
விலை: எக்ஸ்.இ, எக்ஸ்.எம், எக்ஸ்.எம்+, எக்ஸ்.டி, எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட்+ என மொத்தம் 6 விதமான வேரியண்ட்களில் டாடா அல்ட்ராஸ் கார் கிடைக்கிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.65 லட்சத்தில் இருந்து ரூ.10.80 லட்சம் வரையில் உள்ளன. மறுப்பக்கம், புதிய அல்ட்ராஸ் ரேஸர் காரை ஆர்1, ஆர்2 மற்றும் ஆர்3 என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.49 லட்சம் - ரூ.10.99 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்க்கெட்டில் பிரபலமான ஹேட்ச்பேக் ரக கார்களுள் ஒன்றான டாடா அல்ட்ராஸ் காரை பவர்ஃபுல்லான என்ஜின் உடன் வாங்க நினைப்பவர்களுக்கு புதிய அல்ட்ராஸ் ரேஸர் ஏற்றதாக இருக்கும். என்னால் அவ்வளவு பணத்தை செலவு செய்ய முடியாது என இருப்பவர்கள் ரெகுலர் டாடா அல்ட்ராஸ் காரை வாங்கலாம். ஏனெனில், இதன் விலை ரூ.6.65 லட்சத்தில் இருந்தே துவங்குகிறது.


Click it and Unblock the Notifications








