பக்கா மேட்-இன்-இந்தியா கார் என்பதால் டாடா கார்களை மக்கள் வாங்கி குவிக்கிறாங்க!! இந்த காருக்கே மவுசு அதிகம்...
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. மாருதி சுஸுகிக்கு அடுத்து இந்தியாவின் 2வது பெரிய கார் நிறுவனம் யார் என்பதில் ஹூண்டாய் நிறுவனத்துடன் பலத்த போட்டி போட்டு வரும் டாடா மோட்டார்ஸ், கடந்த 2024 மார்ச் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் குறித்த விற்பனை எண்ணிக்கைகள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஓர் பக்கா உள்நாட்டு கார் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் ஆகும். அதாவது, இதனை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி ஓர் இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனம் ஆகும். ஹூண்டாய் ஓர் தென்கொரிய நாட்டை சேர்ந்த கார் நிறுவனம் ஆகும். இந்திய கார் நிறுவனம் என்பதன் காரணமாகவே, சமீப காலத்தில் நிறைய பேர் டாடா கார்களை அதிகமாக வாங்க ஆரம்பித்துள்ளனர்.

இதன் விளைவாக, மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடிப்பது யார் என்பதில் ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே சமீப ஆண்டுகளாக பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் சிலமுறை ஹூண்டாயை டாடா மோட்டார்ஸ் முந்தியுள்ளது என்றாலும், கடந்த 2024 மார்ச் மாத விற்பனையில் ஹூண்டாய் 2வது இடத்தில் இருக்க, டாடா மோட்டார்ஸ் 3வது இடத்தில் உள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 50,105 ஆகும். ஆனால், கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் வெறும் 44,047 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், டாடா கார்களின் விற்பனை 13.75% அதிகரித்துள்ளது. ஆனால், 29 நாட்களை மட்டுமே கொண்ட 2024 பிப்ரவரி மாதத்தில் 51,270 கார்கள் விற்பனை உடன் ஹூண்டாயை டாடா விற்பனையில் முந்தி இருந்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் மொத்தம் 7 விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் கடந்த மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாடா காராக முதலிடத்தில் பஞ்ச் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பஞ்ச் கார்களின் எண்ணிக்கை 17,547 ஆகும். ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 10,894 பஞ்ச் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
ஒட்டுமொத்தமாகவே, கடந்த மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார் டாடா பஞ்ச் ஆகும். பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமின்றி, சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் வெர்சனிலும் பஞ்ச் கிடைக்கிறது. ஆனால், டீசல் என்ஜினுடன் பஞ்ச் கிடைப்பதில்லை. பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது. பஞ்ச் காருக்கு அடுத்து, கடந்த மாதத்தில் டாடாவில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்பட்ட 2வது காராக நெக்ஸான் உள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 14,058 ஆகும். 2023 மார்ச் மாதத்திலும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 711 நெக்ஸான் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. பஞ்ச் காரை போல் இல்லாமல், டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் நெக்ஸான் கார்கள் கிடைக்கின்றன.
இந்த இரு எஸ்யூவி கார்களுக்கு அடுத்து, டாடா பிராண்டில் இருந்து டியாகோ, அல்ட்ராஸ் என்கிற இரு ஹேட்ச்பேக் ரக கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் 6,381 டியாகோ கார்களும், 5,985 அல்ட்ராஸ் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி 2,063 சஃபாரி கார்கள், 2,054 ஹெரியர் கார்கள் மற்றும் 2,017 டிகோர் கார்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீப காலங்களில் டாடா மோட்டார்ஸின் சிறப்பான கண்டுப்பிடிப்புகளாக நெக்ஸான் மற்றும் பஞ்ச் எஸ்யூவி கார்கள் விளங்குகின்றன. குறிப்பாக, டாடா பஞ்ச் ஆனது இன்றைய கால மாருதி 800 என சொல்லும் அளவிற்கு காம்பெக்ட்டான உடலமைப்புடன், எல்லாராலும் வாங்கக்கூடிய விலையை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications









