டாடா மோட்டார்ஸின் தலையில் இடியை இறக்கிய மஹிந்திரா!! கார் விற்பனை இப்படி ஆகும்னு நெனச்சே பார்க்கல!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. மாதத்திற்கு கிட்டத்தட்ட 40,000இல் இருந்து 50,000 கார்களை அசால்ட்டாக விற்பனை செய்கிறது. நடந்து முடிந்த கடந்த செப்டம்பர் மாதத்திலும் 41 ஆயிரம் டாடா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றாலும், வழக்கத்தை காட்டிலும் இது சற்று குறைவாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை கவலையுற செய்துள்ள இந்த விஷயத்தை பற்றிய கூடுதல் விபரங்களையும், செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்கள் எண்ணிக்கையையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனத்திற்கு அடுத்து 3வது மிக பெரும் கார் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. கடந்த ஆண்டுகளில் 2வது இடத்திற்கு ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே போட்டிகள் கூட நடந்தன. ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் 4வது இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் தள்ளப்பட்டுள்ளது. மஹிந்திரா 2வது இடத்தை பிடித்துள்ளது.

அதாவது அந்த அளவிற்கு அதிக கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் மொத்த எண்ணிக்கை 41,065 ஆகும். ஆனால், 2023 செப்டம்பரில் 44,810 கார்களை டாடா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், டாடா கார்களின் விற்பனை 8.4% குறைந்துள்ளது. முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 44,142 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.
இது செப்டம்பரை காட்டிலும் 7% அதிகமாகும். ஆனால் உண்மையில், 44 ஆயிரம் விற்பனை எண்ணிக்கை கூட அதற்கு முன் பதிவாகிய விற்பனை எண்ணிக்கைகளை விட குறைவாகும். ஏனெனில், அதற்கு முன்பு மாதத்திற்கு கிட்டத்தட்ட 50 ஆயிரம் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கார் வாங்கிய 10இல் ஒருவர் டாடா காரை தேர்வு செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா காராக முதலிடத்தில் டாடா பஞ்ச் உள்ளது. டாடா மோட்டார்ஸின் மைக்ரோ-எஸ்யூவி காரான பஞ்ச் கடந்த மாதத்தில் மொத்தம் 13,711 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் மாதத்திலும் 13 ஆயிரத்திற்கும் அதிகமான பஞ்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இருப்பினும், அப்போது 675 குறைவாகும்.
கடந்த சில மாதங்களில் ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிக பேரால் வாங்கப்பட்ட காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்தது. பஞ்ச் காருக்கு அடுத்து கடந்த செப்டம்பரில் அதிகம் விற்பனையான டாடா காராக 2வது இடத்தில் நெக்ஸான் உள்ளது. டாடா மோட்டார்ஸின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான நெக்ஸான் 11,470 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 2023 செப்டம்பர் மாதத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டாடா மோட்டார்ஸின் புதிய அறிமுகமான கர்வ் இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 4,763 கர்வ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 4வது இடத்தை விலை குறைவான ஹேட்ச்பேக் காரான டாடா டியாகோ 4,225 கார்கள் விற்பனை உடன் பிடித்துள்ளது.
டாடா அல்ட்ராஸ் 2,758 கார்கள் விற்பனை உடன் 5வது இடத்தில் உள்ளது. ஆனால், டியாகோ & அல்ட்ராஸ் இரண்டின் விற்பனை எண்ணிக்கையும் 2023 செப்டம்பரில் 6,700ஆக பதிவாகி இருந்தது. இதற்கடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் விலைமிக்க டாடா கார்களான சஃபாரி மற்றும் ஹெரியர் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,644 மற்றும் 1,600 ஆகும். கடந்த செப்டம்பரில் குறைவாக விற்பனையான டாடா காராக கடைசி இடத்தில் டிகோர் என்கிற செடான் கார் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 10 வருடங்களில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் அடைந்திருக்கும் உயரம் பெரியது. ஆனால், கடந்த 1 வருடமாக டாடா கார்கள் விற்பனை குறைந்துக் கொண்டே வருகிறது. ஹூண்டாயை முந்தி 2வது இடத்தை பிடித்த டாடா நிறுவனம் இப்போது மஹிந்திராவை விடவும் குறைவாக கார்களை விற்பனை செய்து 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications









