சம்மருல ஜூஸ் சேலாகுறதபோல டாடா சிஎன்ஜி கார்கள் போன 24மாசத்துல சேலாகிருக்கு! போண்டா-டீயையே ஓவர்டேக் பண்ணிருச்சு!
இந்தியாவில் சிஎன்ஜி (CNG) கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதிலும், சமீப சில காலமாக இந்தியர்கள் சிஎன்ஜி கார்களை வெறிக்கொண்டு வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும், டாடா (Tata)வின் சிஎன்ஜி கார்களுக்கு மிக அமோகமான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது.
அதாவது, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பிராண்டின் கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள் குறைந்த காலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி எவ்வளவு யூனிட்டுகள் டாடாவின் சிஎன்ஜி கார்கள் விற்பனையாகி இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இப்போதைய நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் (Tata Motors), டியாகோ (Tiago), டிகோர் (Tigor), அல்ட்ராஸ் (Altroz) மற்றும் பஞ்ச் (Punch) ஆகிய கார் மாடல்களிலேயே சிஎன்ஜி ஆப்ஷனை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே நிறுவனம் கடந்த 24 மாதங்களில், அதாவது, கடந்த இரண்டே ஆண்டுகளில் நிறுவனத்தின் சிஎன்ஜி கார்கள் 1.3 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.
இதன் வாயிலாகவே டாடாவின் சிஎன்ஜி கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் தன்னுடைய சிஎன்ஜி தயாரிப்பின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்தவகையில், ட்வின் சிலிண்டர் (Twin Cylinder) செட்-அப்பை நாட்டில் அறிமுகப்படுத்தியது மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை அறிமுகம் செய்தது என பல்வேறு நடவடிக்கைகளை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டிருக்கின்றது.
இந்த நடவடிக்கைகளே டாடாவின் சிஎன்ஜி கார்களுக்கு வரவேற்பை இரட்டிப்பாக்கி இருக்கின்றது. அதேவேளையில், டாடா சிஎன்ஜி கார் மாடல்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை அறிமுகம் செய்த நிகழ்வுகூட சமீபத்தில்தான் அரங்கேறியது. ஆகையால், டாடா சிஎன்ஜி கார்களுக்கு அது டாடாவின் தயாரிப்பு என்கிற காரணத்தினாலேயே கிடைத்தது என்பதை நம்மால் உணர முடிகின்றது.
மேலும், டாடாவே இந்தியாவில் சிஎன்ஜி கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. டாடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து சிஎன்ஜி கார்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த கார்களில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சிஎன்ஜி சிலிண்டர்களே வழங்கப்பட்டு இருக்கின்றன.
டாடா அதன் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார் மாடல்களின் சிஎன்ஜி ஆப்ஷன்களிலேயே வழங்குகின்றது. பஞ்ச் மற்றும் அல்ட்ராஸ் சிஎன்ஜி ஆப்ஷன்களிலும் விரைவில் ஏஎம்டி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், எந்த நேரத்திலும் டாடா இந்த தேர்வுகளை விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்ட டாடா சிஎன்ஜி கார்கள் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28.06 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. டாடா டியாகோ சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் ரூ. 7.90 லட்சம் தொடங்கி ரூ. 8.80 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதேபோல், டாடா டிகோர் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் ரூ. 8.85 லட்சம் தொடங்கி ரூ. 9.55 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ் ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார்களில் பிரீமியம் அம்சங்கள் சற்று அதிகம் என்பதாலேயே சற்று அதிக விலையில் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் சிஎன்ஜி கார்களின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மேற்கொண்ட அனைத்து வேலைகளும் அதற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது என்பதையே இப்போது வெளியாகி இருக்கும் சேல்ஸ் புள்ளி விபரங்கள் பற்றிய தகவல் அமைந்திருக்கின்றது. வரும் நாட்களில் அதன் சிஎன்ஜி கார்களின் விற்பனை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








