இன்னும் சில வருடங்களுக்கு மார்க்கெட்டை கலக்க போகும் டாடா கார்... ஷோரூம்களுக்கு வந்தாச்சு!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கர்வ் இவி (Curvv EV) எலக்ட்ரிக் காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த நிலையில், அதனை தொடர்ந்து விரைவில் பெட்ரோல்/ டீசல் என்ஜின் உடனான டாடா கர்வ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் உடனான டாடா கர்வ் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. டாடா கர்வ் காரை பற்றிய விபரங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. செப்.2ஆம் தேதியில் கர்வ் காரின் விலைகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில், கர்வ் கார்களை டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டுவரும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் கடந்த சில வருடங்களில் பல்வேறு தரமான கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. நெக்ஸான், பஞ்ச் உள்ளிட்டவற்றை அவற்றில் ஒன்றாக சொல்லலாம். அந்த வரிசையில், கர்வ் காரை டாடா நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

கர்வ் இவி எலக்ட்ரிக் கார் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அன்றைய தினத்தில் பெட்ரோல்/ டீசல் என்ஜின் உடனான கர்வ் காரின் விபரங்கள் வெளியிடப்பட்டன. மேலும், செப்டம்பர் 2ஆம் தேதி கர்வ் காரின் விலைகள் அறிவிக்கப்படும் என்று அப்போதே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால், ஷோரூம்களில் நிறுத்தி வைப்பதற்காக டாடா கர்வ் கார்கள் தொழிற்சாலையில் இருந்து ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்தில், சிவப்பு நிறத்திலான டாடா கர்வ் கார் ஒன்று ஷோரூம் ஒன்றினுள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம். மேலும் இந்த படத்தில், கர்வ் காரின் பொனெட்டிற்குள் வயர்கள் நுழைக்கப்பட்டு இருப்பதையும் காணலாம். அந்த வயர்கள் ஒரு மெஷின் உடன் இணைக்கப்பட்டுள்ளன.

டாடா கர்வ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.10 லட்சத்தில் இருந்து எதிர்பார்க்கிறோம். ஸ்மார்ட், ப்யூர், க்ரியேட்டிவ் மற்றும் அக்கம்ப்ளீஷ்டு என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் டாடா கர்வ் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. கர்வ் இவி மற்றும் கர்வ் இவை இரண்டும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், சில வித்தியாசங்களை கொண்டுள்ளன. குறிப்பாக, பெட்ரோல்/ டீசல் கர்வ் காரில் என்ஜினை குளிர்விப்பதற்காக முன்பக்க கிரில் பகுதியில் துளைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், டாடா கர்வ் காரில் 18-இன்ச்சில் தனித்துவமான டிசைனில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில் 'கர்வ் இவி' லோகோவிற்கு பதிலாக, வெறும் 'கர்வ்' லோகோ மட்டுமே இருக்கும். பெட்ரோல்/ டீசல் என்ஜின் உடனான கர்வ் காரிலும் டோர் ஹேண்டில்களை மறைவாக காரினுள் டாடா மோட்டார்ஸ் வழங்கியுள்ளது. இது காரின் ஏரோடைனாமிக்ஸை, அதாவது எதிர்காற்றுக்கு ஏற்ப கார் செயல்படும் பண்பை மேம்படுத்தும்.

இரு பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் டாடா கர்வ் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில், ஹைப்பரியன் என அழைக்கப்படும் புத்தம் புதிய 1.2 லிட்டர் ஜிடிஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினும் ஒன்றாகும். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 124 பிஎச்பி மற்றும் 225 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
அதேநேரம், நெக்ஸானில் வழங்கப்படும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடனும் கர்வ் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 119 பிஎச்பி மற்றும் 170 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது ஆகும். 3வது என்ஜின் ஆப்ஷனான 1.5 லிட்டர் க்றையோடெக் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 117 பிஎச்பி மற்றும் 260 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஷோரூம்களுக்கு கர்வ் கார்கள் அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கப்பட்டு இருப்பதில் இருந்து கர்வ் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுப்பட ஆரம்பித்துள்ளதை அறிய முடிகிறது. இதனால், வரும் நாட்களில் இருந்து கர்வ் காரை டாடா ஷோரூம்களில் காணலாம். டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரை கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









