ரூ.10 லட்சத்தில் கிடைக்கும் டாடா கார் பார்க்க இப்படித்தான் இருக்குமா? ஷோரூமுக்கு போகும் முன் இதை பார்க்கவும்!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் புதிய மாடர்ன் காராக கர்வ் (Curvv) மாடலை கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. அதிகளவில் விற்பனையாகும் டாடா கார்களான பஞ்ச், நெக்ஸான் உடன் ஒப்பிடுகையில் கர்வ் ஆனது சற்று விலைமிக்க டாடா காராக விளங்குகிறது. டாடா கர்வ் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் கிடைக்கக்கூடிய டாடா கர்வ் கார் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை காட்டும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இணையத்திலும், செய்தித்தாள்களிலும் நாம் பார்ப்பது டாடா கர்வ் காரின் டாப் வேரியண்ட் அல்லது மிட் வேரியண்ட் ஆகும். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விளம்பரங்களில் விலைமிக்க கர்வ் கார்களின் படங்களையே டாடா மோட்டார்ஸ் பயன்படுத்துகிறது. டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி, எல்லா கார் நிறுவனங்களும் இந்த யுக்தியை தான் கையாள்கின்றன.

இதனால், ஆரம்ப விலையில் கிடைக்கக்கூடிய காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பது டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு சென்றால்தான் தெரியவருகிறது. சில நேரங்களில், காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் படங்கள், வீடியோக்கள் அரிதாக இணையத்தில் வெளியாகின்றன. அவ்வாறு, டாடா கர்வ் காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.
இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது, கர்வ் காரின் இந்த எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் முன்பக்கத்தில் பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் டிசைன் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் இடம்பெற்றுள்ளன. க்ரில் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் கருப்பு நிறத்தில் உள்ளன. விலை குறைவான கர்வ் காராக இருப்பினும் மாடர்ன் தரத்தில் பறித்து இழுக்கக்கூடிய கதவு கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அலாய் சக்கரங்களுக்கு பதிலாக இரும்பு சக்கரங்கள் காரில் உள்ளன. இரும்பு சக்கரங்களில் வீல் கவர்கள் எதுவும் இல்லை. காரின் முன் கதவுகள், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் மேற்கூரையில் 'Curvv' எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. கர்வ் காரின் மற்ற வேரியண்ட்களில் கிடைக்கக்கூடியது, இந்த வேரியண்ட்டில் கிடைக்காதது என்று பார்த்தால், ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்களை இணைக்கக்கூடிய எல்இடி லைட் பார்கள் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாகவே, இந்த கர்வ் காரை பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக உள்ளது. காருக்குள் கேபின் இரு நிறங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களில் கிடைப்பதை போன்று, இந்த வேரியண்ட்டில் 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரத்தை ஒளிரக்கூடிய டாடா லோகோ உடன் பெறலாம். இவற்றுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், டிரைவ் மோட்கள், மேனுவல் ஹேண்ட்பிரேக், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்டவை இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

ஏசி-ஐ கண்ட்ரோல் செய்வதற்கு வழக்கமான பட்டன்களே கொடுக்கப்பட்டுள்ளன. காருக்குள் ஏ-பில்லரில் ட்விட்டர்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கர்வ் காரில் இல்லாத வசதிகள் என்று பார்த்தால், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ADAS, வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், சைகை மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய டெயில்கேட், பனோராமிக் சன்ரூஃப், தானாக டிம் ஆகக்கூடிய IRVM மற்றும் 360-டிகிரி கேமரா உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
டாடா கர்வ் காரின் விலை குறைவான வேரியண்ட்டை 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் வாங்கலாம். ஆனால், இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை மட்டுமே பெற முடியும். பெட்ரோல் என்ஜினில் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்.எம் டார்க் திறனையும், டீசல் என்ஜினில் 116 பிஎச்பி மற்றும் 260 என்.எம் டார்க் திறனையும் காரில் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கர்வ் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. டெலிவிரிகள் செப்டம்பர் 12ஆம் தேதியில் துவங்கப்பட உள்ளன. ஆடம்பரம் இல்லாத, போதுமான அடிப்படை வசதிகளுடன் டாடா கர்வ் காரை வாங்க நினைப்பவர்களுக்கு எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









