மினி தியேட்டர் அளவுக்கு இருக்கு... டாடா உருவாக்கியுள்ள பிரம்மாண்ட கார்!! இதுக்காகவே இந்த காரை வாங்கலாம்!
டாடா கர்வ் இவி (Tata Curvv EV) எலக்ட்ரிக் கார் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபலமான டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும் சற்று அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டுள்ள கர்வ் இவி எலக்ட்ரிக் கார் பார்ப்பதற்கே சற்று பிரம்மாண்டமாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை வெளிக்காட்டும் வகையில், டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் ஒன்று சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், சாலையில் மற்ற கார்களை காட்டிலும் கர்வ் இவி எந்த அளவிற்கு பெரியதாக உள்ளது என்பதை காணலாம்.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் கூடுதல் ஆர்வமாக இருக்கும் நிறுவனம். டாடா நிறுவனத்தின் நெக்ஸான் இவி மற்றும் பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில்தான், கர்வ் இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு டாடா எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் சற்று விலைமிக்கதாக கர்வ் இவி கொண்டுவரப்பட்டுள்ளது.

கூடுதலான விலைக்கு ஏற்ப கர்வ் இவி பிரீமியம் தரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், நெக்ஸான் இவி காரை காட்டிலும் கர்வ் இவி எலக்ட்ரிக் கார் அளவில் சற்று பெரியதாக உள்ளது. இதனை வெளிக்காட்டும் வகையில், கர்வ் இவி எலக்ட்ரிக் கார் ஒன்று சாலையில் கொண்டு செல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரை சாலையில் சிலமுறை பார்த்துள்ளோம்.
அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் சோதனைகளுக்காக சாலைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த சமயங்களில் கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தது. அறிமுகத்திற்கு முந்தைய நாளில், ஷோரூமுக்கு கொண்டு செல்லப்பட்ட போது டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் ஒன்று எந்தவொரு மறைப்பும் இல்லாமல் காட்சியளித்து இருந்தது. இருப்பினும், அதுகுறித்த வீடியோவில் கார் அந்த அளவிற்கு பிரம்மாண்டமானதாக தெரியவில்லை.

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்ட கர்வ் இவி எலக்ட்ரிக் கார் எந்த அளவிற்கு பெரியதாக காட்சியளிக்கிறது என்பதை காண முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், காரின் வெள்ளை நிற பெயிண்ட் ஆகும். மழை பெய்த ஈரமான சாலையில் வெள்ளை நிறத்திலான கர்வ் இவி கார் தனியாக தெரிகிறது. மேலும், வெள்ளை நிறத்தில் கார் பார்ப்பதற்கு இன்னும் சூப்பராக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுகுறித்த வீடியோவில், ஹோண்டா சிட்டி செடான் கார் ஒன்றிற்கு பின்னால் இந்த டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டி உடன் பார்த்தால், டாடா கர்வ் இவி எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளது என்பதை காணலாம். அதேபோல், சாலையில் கியா சொனெட் கார் ஒன்றிற்கு அருகே செல்லும்போது இரண்டிற்கும் உயரத்தில் பெரியதாக வித்தியாசம் இல்லை. ஏனெனில், கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார் என்பதால், கர்வ் இவி காரை சற்று தாழ்வாக டாடா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஆனால், அகலத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு இணையானதாக டாடா கர்வ் இவி உள்ளது. டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் நீளம் 4310மிமீ, அகலம் 1810மிமீ, உயரம் 1630மிமீ மற்றும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2560மிமீ ஆகும். டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரை 45kWh அல்லது 55kWh திறன் கொண்ட பேட்டரி பேக் உடன் வாங்கலாம்.
இதில் 45kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 502கிமீ தொலைவிற்கும், 55kWh பேட்டரியில் 585கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இது ARAI சான்றளித்த ரேஞ்ச் அளவுகள் ஆகும். ஆனால், நிஜ உலகில் இதனை விட சற்று குறைவான ரேஞ்சையே பெற முடியும். இந்த எலக்ட்ரிக் காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 8.6 வினாடிகளில் எட்டிவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காலம் செல்ல, செல்ல கார்களின் அளவுகளும் பிரம்மாண்டமானதாக பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. 20 வருடங்களுக்கு முன் விற்பனையில் இருந்த மாருதி 800 காருடன் ஒப்பிட்டால், கர்வ் இவி எலக்ட்ரிக் கார் டபுள் மடங்கு அளவில் பெரியதாக உள்ளது. இதன் காரணமாக, இதற்கேற்ப சாலைகளையும் அகலமானதாக போட வேண்டியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications









