டாடா கார் என்றால் தான் எல்லாரும் கவனிக்குறாங்க... கர்வ் இவி காரின் விலையில் கிடைக்கும் மற்ற கார்கள்!!
டாடா கர்வ் இவி (Tata Curvv EV) எலக்ட்ரிக் கார் புதியதாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் புதிய எலக்ட்ரிக் காராக விளங்கும் இதற்கு விற்பனையில் போட்டியளிக்கும் விதமாக மஹிந்திரா எக்ஸ்யூவி400, எம்ஜி இசட்.எஸ் இவி, பிஒய்டி ஆட்டோ 3 மற்றும் டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உள்ளன. இந்த 5 எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகள் என்னென்ன என்பதையும், இந்த எலக்ட்ரிக் கார்கள் விலையில் ஒன்றுக்கு ஒன்று எந்த அளவிற்கு வேறுப்படுகின்றன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாடா கர்வ் இவி vs மஹிந்திரா எக்ஸ்யூவி400: டாடா கர்வ் இவி காரின் நேரடி போட்டியாக விளங்குவது மஹிந்திரா எக்ஸ்யூவி400 ஆகும். மஹிந்திராவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி400-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.74 லட்சம் மற்றும் ரூ.17.69 லட்சம் ஆக உள்ளன. இதில், முதல் விலையில் 34.5kWh பேட்டரி உடனும், இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள விலையில் 39.4kWh பேட்டரி உடனும் எக்ஸ்யூவி400 கார் கிடைக்கும்.

மறுப்பக்கம், டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் அளவில் பெரியதான 45kWh மற்றும் 55kWh பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், தோற்றத்திலும் எக்ஸ்யூவி400 காரை காட்டிலும் டாடா கர்வ் இவி ஆனது அளவில் பெரியதாக உள்ளது. டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.49 லட்சத்தில் இருந்து ரூ.21.99 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
டாடா கர்வ் இவி vs எம்ஜி இசட்.எஸ் இவி: டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் வழங்கப்படும் அடாஸ், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் இன்னும் சில வசதிகள் எம்ஜி இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் காரிலும் வழங்கப்படுகின்றன. இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரில் ஒரேயொரு 50.3kWh பேட்டரி பேக் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. இந்த பேட்டரி மூலம் ஆற்றலை பெறும் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 174 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அதேநேரம் டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக 165 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். விலையை பொறுத்தவரையில், எம்ஜி இசட்.எஸ் இவி சற்று விலைமிக்கதாக உள்ளது. ஏனெனில், இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.19 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. அதிகப்பட்சமாக ரூ.25.44 லட்சம் வரையில் உள்ளன.
டாடா கர்வ் இவி vs பிஒய்டி ஆட்டோ 3: டாடா கர்வ் இவி-ஐ காட்டிலும் இந்த பிஒய்டி எலக்ட்ரிக் கார் சற்று விலைமிக்கதாக விளங்குகிறது. ஆனால், பிஒய்டி அட்டோ 3 எலக்ட்ரிக் காரில் சமீபத்தில் விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 49.92kWh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்ட அவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.24.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இந்த ஆட்டோ 3 எலக்ட்ரிக் கார்களை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 468கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

அதேநேரம், பிஒய்டி அட்டோ 3 எலக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்களில் பெரிய அளவில் 60.48kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. அதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் 521கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். ஆனால், இந்த அளவிற்கு பெரிய பேட்டரியை பெறும் அட்டோ 3 எலக்ட்ரிக் காருக்கும் டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காருக்கும் விலையில் கிட்டத்தட்ட ரூ.12 லட்சம் வித்தியாசம் உள்ளது.
டாடா கர்வ் இவி vs டாடா நெக்ஸான் இவி: இவை இரண்டுமே டாடா மோட்டார்ஸின் தயாரிப்புகள் தான். கர்வ் இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும், நெக்ஸான் இவி விலை குறைவானதாக உள்ளது. டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.99 லட்சத்தில் இருந்து ரூ.19.29 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான தேவை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் இவி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இதற்கு விற்பனையில் போட்டியளிக்கும் விதமாக ஏற்கனவே சில எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் விற்பனையில் உள்ளன. அவற்றின் போட்டியை டாடா கர்வ் இவி சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









