டாடா காரா இது! பாலைவனத்தையே ஒரு கை பாத்திருச்சே! விலை உயர்ந்த கார்களால்கூட இதை செய்ய முடியுமா தெரியல!
அதிக பாதுகாப்பான கார்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக டாடா மோட்டர்ஸ் (Tata Motors) உருவெடுத்து உள்ளது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் பாதுகாப்பு தரத்தில் அதிக ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன. ஏதோ, ஒன்றிரண்டு கார் மாடல்கள் இந்த மாதிரியான ரேட்டிங்கைப் பெற்றிருக்கவில்லை. இதுவரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட அனைத்து கார்களும் பாதுகாப்பு விஷயத்தில் உச்சபட்ச ரேட்டிங்கையேப் பெற்றிருக்கின்றன. உதாரணமாக, நெக்ஸான், பஞ்ச், அல்ட்ராஸ், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்கள் ஐந்திற்கு ஐந்து பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று ஒட்டுமொத்த வாகன உலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே டாடா மோட்டார்ஸ் பாதுகாப்பைத் தொடர்ந்து தன்னுடைய தயாரிப்புகளை அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டதாக தயாரிக்கும் பணியில் களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் விரைவில் கர்வ் (Curvv) எனும் கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இதை அறிமுகம் செய்வதற்கான பணியிலேயே நிறுவனம் தற்போது மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகவே அக்கார் மாடலைக் கடுமையான சோதனையோட்டத்திற்கு டாடா உட்படுத்தி வருகின்றது. அந்தவகையில் டாடா நிறுவனம் புதிய கர்வ் கார் மாடலின் ஆஃப்-ரோடு திறனை சோதித்து பார்த்திருக்கின்றது.
இதற்காக முறையான சாலை வசதி இல்லாத ஓர் பகுதியை தேர்வு செய்து அங்கு வைத்தே அந்த காரை டாடா சோதித்து பார்த்திருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த கார் ராஜஸ்தானில் உள்ள பாலைவன பகுதியில் வைத்தே இந்த சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரிய வந்திருக்கின்றது.
இந்த ஆஃப்-ரோடு (Off-Road) பயணத்தில் சிறிதும் திணறாமல் டாடா கர்வ் திறம்பட செயல்பட்டு இருக்கின்றது. இதுகுறித்த வீடியோவையே தற்போது டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கின்றது. மேலும், இந்த சோதனையோட்டத்தில் கர்வ்-இன் எரிபொருள் வெர்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் இரண்டும் உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் டாடா கர்வ் செயல்பட்டு இருக்கும் விதம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது.
பெரிய எஸ்யூவி ரக கார்கள் அல்லது ஆஃப்-ரோடு திறன் கொண்ட கார்களால் மட்டுமே இந்த மாதிரியான சாலைகளைச் சமாளிக்க முடியும் என பலரால் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த எஸ்யூவி கூபே வகை கார் மிக மோசமான சாலையை அசால்டாக சமாளித்திருக்கின்றது. இதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
டாடா கர்வ் ஐசிஇ (எரிபொருளில் இயங்கும்) வெர்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் என இரண்டு அவதாரங்களிலும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதனால்தான் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. டாடா கர்வ் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலேயே சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஆகையால், காரின் சுயவிபரத்தை முழுமையாக விளக்க முடியவில்லை. அதேவேளையில், முதலில் டாடா கர்வ் கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனே நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கு பின்னரே சற்று தாமதமாக கர்வ்-இன் ஐசிஇ வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டிலேயே டாடா கர்வ் இவி வெளியீடு செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெகுவிரைவிலேயே அந்த தகவல்கள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் கர்வ் இவி-யை ஆக்டி.இவி ஆர்கிடெக்சரை பயன்படுத்தி உருவாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது.
மின்சார வாகனங்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஓர் ஆர்கிடெக்சரே இதுவாகும். இதன் வாயிலாகவே முன் வீல் இயக்கம், பின் வீல் இயக்கம் மற்றும் அனைத்து வீல் இயக்கம் என பலதரப்பட்ட திறன்களைக் கொண்ட எலெக்ட்ரிக் கார்களை டாடா தயார் செய்ய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா குட்டியான எஸ்யூவி ரக கார் மாடலான பஞ்ச்-ம் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கு உகந்த கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இதனால் மலைப் பாங்கான சாலையைக்கூட சமாளிக்க முடியும். குறிப்பாக, கரடு-முரடான பாதையை அசால்டு செய்கின்ற திறன் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே நிறுவனம் தயாரித்து வரும் கர்வ் கார் மாடலிலும் இதே மாதிரியான தனித்துவமான திறன்கள் பல வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








