அடுத்து பந்தயம் அடிக்க போகும் புது டாடா கார்!! மாருதி, ஹூண்டாய்க்கு சவால் காத்துக்கிட்டு இருக்கு!
பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo 2024) கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் கர்வ் (Curvv) எஸ்யூவி காரை காட்சிக்கு நிறுத்தி உள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களின் மூலம் இந்த புதிய டாடா காரை பற்றி தெரியவந்துள்ள விபரங்களை இனி பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் மற்றும் பஞ்ச் எஸ்யூவி கார்கள் கஸ்டமர்ஸ் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படிப்பட்ட தற்போதைய சூழலில், மற்றொரு புதிய எஸ்யூவி காரை மார்க்கெட்டில் களமிறக்க டாடா நிறுவனம் தயாராகி வருகிறது. அதுதான் கர்வ் எஸ்யூவி கார் ஆகும்.

டாடா கர்வ் கார் கான்செப்ட் இதற்குமுன் பல்வேறு கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிலும் கர்வ் கான்செப்ட் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது, பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் முழுவதுமாக வடிவமைக்கப்பட்ட கர்வ் கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.
2023 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கர்வ் கான்செப்ட்டில் இருந்து பெறப்பட்டதே இந்த கர்வ் எஸ்யூவி கார் ஆகும். பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் ஆப்ஷனிலும் விற்பனைக்கு வர உள்ள கர்வ் காரின் படங்களை சமீபத்தில்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டு இருந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக, கர்வ் எஸ்யூவி கார் விளம்பரப்படுத்தப்பட்டு வருவதால், இதன் அறிமுகத்தை இன்னும் சில மாதங்களில் எதிர்பார்க்கிறோம்.
டாடா கர்வ் எஸ்யூவி காரின் முன்பக்கம் ஆனது நன்கு ஷார்ப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய முன்பக்கத்திற்கு ஏற்ப நேர்த்தியாக கூபே ஸ்டைலில் ரூஃப்லைனை இந்த கார் கொண்டுள்ளது. இது மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களில் இருந்து டாடா கர்வ் காரை தனித்து காட்டும். காரின் முன்பக்கத்தில் எல்இடி லைட் பார் இன்னும் அதிகமாக பின்னோக்கி வளைக்கப்பட்டுள்ளது. இத்தகைய லைட் பாரை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் காண முடியும்.
அதேபோல், காரின் முன்பக்க க்ரில் பகுதியில் கருப்பு நிறத்தை பார்க்க முடிகிறது. ஆனால், 2023 ஆட்டோ எக்ஸ்போவின் போது காரின் முன்பக்க கிரில் முழுவதுமாக காரின் உடல் நிறத்தில் வழங்கப்பட்டு இருந்தது. காரின் முன்பக்க பம்பர் புதிய ஹெட்லேம்ப் மற்றும் ஃபாக் விளக்குகளை கொண்டுள்ளது. முன்பக்க கிரில் மற்றும் லைசன்ஸ் பிளேட்டிற்கு இடையே கூடுதல் காற்று துளைகள் உள்ளன.

இந்த காற்று துளைகளை கர்வ் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் மட்டுமே டாடா நிறுவனம் வழங்கும். தற்போது கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கர்வ் காரின் முன்பக்கத்தில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டையும் காண முடிகிறது. காரின் சைடில் விங் மிரர்கள் கதவுகளில் பொருத்தப்பட்டுள்ளன. டோர் ஹேண்டில்கள் பறித்து இழுக்கக்கூடியவை ஆக உள்ளன.
காருக்கு பின்பக்கத்தில் எல்இடி லைட் பார் டார்க் டின்ட்டை கொண்டுள்ளது. பின்பக்க பம்பரில் ஒளி பிரதிப்பலிப்பான்கள் உள்ளன. இவற்றை எல்லாம் கடந்த ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போவின் போது கர்வ் கான்செப்ட்டில் காண முடியவில்லை. அதாவது இவை எல்லாம் அதன்பின் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன், 360-டிகிரி கேமரா மற்றும் 18-இன்ச் அலாய் சக்கரங்களையும் கண்காட்சியில் கர்வ் காரில் காண முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது சாலைகளில் பலமுறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு இருந்தாலும், தற்போது கண்காட்சியில் நேரில் டாடா கர்வ் காரை பார்த்தது சற்று வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், டாடா கர்வ் விற்பனைக்கு வர அனைத்து விதங்களிலும் தயாராகி விட்டதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








