கூடிய விரைவில் மார்க்கெட்டை கலக்க உள்ள புது டாடா எலக்ட்ரிக் கார் - மஹிந்திராவுக்கு இப்போவே பயம் வந்திருக்கும்!
மற்ற வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் வேகமாக விரிவடைந்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கும் கார் நிறுவனங்களுள் ஒன்று டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகும். ஏனெனில், தற்போதைக்கு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விலை குறைவான எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. குறிப்பாக, டாடா பஞ்ச் இவி ஆனது இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான கேம் சேஞ்சராக இருக்கும் என்கிற அளவிற்கு பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதேநேரம், அப்பர்-மிடில் கிளாஸ் கஸ்டமர்களையும் கவர வேண்டும் என்பதற்காக கர்வ் இவி மற்றும் ஹெரியர் இவி என 2 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் தயார் செய்து வருகிறது.
இந்த நிலையில், அறிமுகத்திற்கு முன்னதாக டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் பகிரப்பட்டுள்ள படங்களில், இந்த சோதனை ஓட்டத்தின்போது ஹெரியர் இவி கார் முற்றிலுமாக மறைக்கப்பட்டு இருப்பதை காணலாம். காரின் சக்கரங்கள் கூட மறைப்புகளால் மறைக்கப்பட்டுள்ளன.

அதாவது அந்த அளவிற்கு, புதிய ஹெரியர் இவி காரின் டிசைன் வெளியே கசிந்துவிட கூடாது என்பதற்காக டாடா மோட்டார்ஸ் கவனமாக உள்ளது. இருப்பினும், ஹெரியர் இவி காரில் வழங்கப்படும் எலக்ட்ரிக் மோட்டார் குறித்த விபரங்கள் தற்போது கிடைத்துள்ள ஸ்பை படங்கள் மூலமாக நமக்கு தெரியவந்துள்ளன. டாடா ஹெரியர் இவி காரின் இந்த சோதனை ஓட்டம் ஆனது ஜம்மூ & காஷ்மீரில் உள்ள லே லடாக் என்கிற பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயரமான பகுதிகளில் இயங்கும்போது கார் என்ன மாதிரியான சவால்களை சந்திக்கிறது என்பதை அறிவதற்காக இவ்வாறான ஒரு இடத்தில் இந்த சோதனை ஓட்டத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கொண்டிருக்கலாம். இந்த ரோடு டெஸ்ட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று ஹெரியர் இவி காரின் அடிப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட படத்தில், காரின் பின் சக்கரங்களுக்கு மத்தியில் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருப்பதை காண முடிகிறது.

அதாவது, இந்த காரில் மோட்டாரின் இயக்க ஆற்றல் ஆனது பின் சக்கரங்களுக்கு செல்கிறது. அனைத்து 4 சக்கரங்களுக்கும் இயக்க ஆற்றல் செல்லும் வகையிலான எலக்ட்ரிக் கார்களிலும் எலக்ட்ரிக் மோட்டார் பின் சக்கரங்களுக்கு இடையே தான் பொருத்தப்படுகிறது. ஆதலால், டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் ரியர்-வீல்-டிரைவ் அல்லது ஆல்-வீல்-டிரைவ் வெர்சன்களில் விற்பனை செய்யப்படலாம்.
ஆல்-வீல்-டிரைவ் வெர்சனில் காரின் முன் சக்கரங்களுக்கு இடையேயும் எலக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்படும். மேலும், தற்போது நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களின் மூலம், முழுவதுமாக சுதந்திரமாக செயல்படக்கூடிய சஸ்பென்ஷன் செட்-அப்பை ஹெரியர் இவி பெற்றுவர உள்ளதையும் அறிய முடிகிறது. இவ்வாறான சஸ்பென்ஷன் செட்-அப் டாடா கார்களில் வழங்கப்படுவது ஒன்றும் புதியது கிடையாது. இண்டிகா காரில் இருந்து இவ்வாறான சஸ்பென்ஷனை டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகிறது.

ஹெரியர் இவி கான்செப்ட் மாதிரியை கடந்த 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிக்கு நிறுத்தியது. கிட்டத்தட்ட அதேபோன்றதான தோற்றத்தில் தான் ஹெரியர் இவி உருவாக்கப்படும். ஹெரியர் இவி காரின் உள்ளே வெண்டிலேட்டட் இருக்கைகள், ட்யூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், லெவல்-2 அடாஸ், 360-டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்களை எதிர்பார்க்கிறோம்.
மேலும், பனோராமிக் சன்ரூஃப், சாஃப்ட்-டச் பிளாஸ்டிக்ஸ், 19-இன்ச் ஏரோ அலாய் சக்கரங்கள், 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 10.2-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை, எலக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் டிரைவர் சீட், டெலிமேட்டிக்ஸ் போன்றவற்றையும் ஹெரியர் இவி காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கலாம். முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 500கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக டாடா ஹெரியர் இவி காரை எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், பணக்காரர்களை கவரும் விதமாக ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. சோதனை ஓட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால், டாடா ஹெரியர் இவி நாம் எதிர்பார்பதை காட்டிலும் முன்னதாகவே அறிமுகம் செய்யப்பட்டாலும், ஆச்சிரியப்படுவதற்கில்லை.
Source: CarDekho


Click it and Unblock the Notifications









