டாடா எலக்ட்ரிக் கார்களில் லட்சங்களில் காசை சேமிக்கலாம்! மிச்சப்படுத்தும் பணத்தில் பைக் வாங்க வேண்டியதுதான்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யும் டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் பண்டிகை நாட்களை சலுகை & தள்ளுபடிகள் உடன் கொண்டாட எப்போதும் மறந்ததே இல்லை. அதிலிலும், நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளிக்கு டாடா மட்டுமின்றி, மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் சலுகை தள்ளுபடிகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த தீபாவளியை முன்னிட்டும் டாடா மோட்டார்ஸ் சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்காக, டாடா நிறுவனம் அறிவித்துள்ள 'ஃபெஸ்டிவல் ஆஃப் கார்ஸ்' (Festival of Cars) திட்டத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் 3வது பெரிய நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் சமீபத்தில்தான் அதன் சில பெட்ரோல்/ டீசல் கார்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு சலுகைகளை அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது டாடா எலக்ட்ரிக் கார்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டாடா மோட்டார்ஸில் இருந்து பல்வேறு விதமான எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் கூட கர்வ் இவி என்கிற புத்தம் புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு சலுகைகளை பெற்றிருக்கும் டாடா எலக்ட்ரிக் கார்கள் நெக்ஸான் இவி மற்றும் பஞ்ச் இவி ஆகும்.
இதற்காக, 'ஃபெஸ்டிவல் ஆஃப் கார்ஸ்' என்கிற திட்டத்தை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி, நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காருக்கு ரூ.3 லட்சம் வரையிலான சலுகைகளும், பஞ்ச் இவி எலக்ட்ரிக் காருக்கு ரூ.1.20 லட்சம் வரையிலான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையினால், நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவி கார்களின் விலைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக வந்துள்ளன.

அதேபோல், பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் விலையும் பெட்ரோல்/ டீசல் என்ஜின் உடனான பஞ்ச் காரின் விலைக்கு இணையாக வந்துள்ளது. ரூ.3 லட்சம் வரையிலான சலுகையினால், டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.49 லட்சத்தில் இருந்தும், பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்போது ரூ.9.99 லட்சத்தில் இருந்தும் ஆரம்பிக்கின்றன.
பெட்ரோல்/ டீசல் என்ஜின் உடனான டாடா பஞ்ச் மற்றும் நெக்ஸான் கார்களின் விலைகளும் கிட்டத்தட்ட இதே அளவிற்கு உள்ளதால், பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி என எலக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவர் என டாடா மோட்டார்ஸ் எதிர்பார்க்கிறது. இந்த பணம் தள்ளுபடி சலுகை மட்டுமின்றி, பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்களை வாங்குபவர்கள் அடுத்த 6 மாத காலக்கட்டத்திற்கு டாடா பவர் இவி சார்ஜிங் நிலையங்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

டாடா பவர் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 5500க்கும் அதிகமான பொது இவி சார்ஜிங் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவை இல்லாமல், வீடுகளில் இவி சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவி கொடுக்கும் பணிகளையும் டாடா பவர் மேற்கொள்கிறது. இவ்வாறு வீடுகளில் இவி சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவுவதில் 1 லட்சம் மைல்கல்லை கடந்துள்ளதாக சமீபத்தில்தான் டாடா பவர் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல்/ டீசல் என்ஜினை கொண்ட டாடா கார்களை பொறுத்தவரையில், டாடா டியாகோ காரின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.65,000 வரையில் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், டியாகோவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4,99,900 ஆக குறைந்துள்ளனது. அதேபோல், டிகோர் காரின் ஆரம்ப விலையும் ரூ.5,99,900 ஆகவும், அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை ரூ.6,49,900 ஆகவும், நெக்ஸானின் ஆரம்ப விலை ரூ.7,99,990 ஆகவும் குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தான் நம்ம ஊர் மக்கள் புதிய வாகனங்களை அதிகளவில் வாங்குவது வழக்கம். இதனால்தான், வருடத்தில் முக்கியமாக தீபாவளி சமயத்தில் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ள சலுகைகள் இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையை அதிகரிக்கும் என்பது மட்டுமல்லாமல், எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கிய இந்தியாவின் முயற்சிகளுக்கும் சிறிய உந்துதலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









