டாடா - ஹூண்டாய் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிடுச்சு!! பிப்ரவரியில் நடந்த அதிசயம்...
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கடந்த 2024 பிப்ரவரி மாத கார்கள் விற்பனையில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தை முந்தியுள்ளது. இதுகுறித்தும், கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா மற்றும் ஹூண்டாய் கார்கள் குறித்தும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளவில் பெரிய கார் சந்தை நம் இந்தியா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, மாருதி சுஸுகி என்ற ஒற்றை நிறுவனம் மட்டும் மாதத்திற்கு ஏறக்குறைய 2 லட்ச கார்களை விற்பனை செய்கிறது. இதன் மூலமாக இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக மாருதி சுஸுகி விளங்குகிறது.

மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடம் யாருக்கு என்பதில்தான் சமீப காலமாக ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சில மாதங்களில் முந்தியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான மாதங்களில் ஹூண்டாய் தான் 2வது இடத்தை பிடித்தது.
இந்த நிலையில், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா மோட்டார்ஸ் முந்தியுள்ளது. இந்திய கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கடந்த மாதத்தில் மொத்தம் 51,267 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால், தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து 50,201 கார்கள் மட்டுமே கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுமார் 3,200 ஹூண்டாய் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் கார்களின் விற்பனை இந்த அளவிற்கு வளர்ச்சி கண்டிருக்கும்போது, 2வது இடத்திற்கு முன்னேறியுள்ள டாடா கார்களின் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்திருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.
2023 பிப்ரவரியை காட்டிலும், இந்த 2024 பிப்ரவரியில் சுமார் 8,405 ஹூண்டாய் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், 2024 ஜனவரி மாதத்தில் விற்பனையான டாடா கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிட்டால், கடந்த பிப்ரவரி மாதத்தில் டாடா கார்கள் கொஞ்சம் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், இந்த ஆண்டின் முதல் ஜனவரி மாதத்தில் சுமார் 53,633 கார்களை இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

ஒரு மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த அதிகப்பட்ச கார்கள் விற்பனை எண்ணிக்கை 53,633 இதுவாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டு விற்பனையை மட்டுமே நம்பியுள்ளது. அதாவது, டாடா கார்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தமாகவே வெறும் 54 டாடா கார்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அதுவே, ஹூண்டாய் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 10,300 கார்களை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆக, உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால், டாடா மோட்டார்ஸை காட்டிலும் ஹூண்டாயின் விற்பனை சில ஆயிரம் யூனிட்கள் அதிகமாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் - ஹூண்டாய் இடையேயான விற்பனை போட்டி இந்தியா vs தென் கொரியா என்கிற அளவுக்கு பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தியர்கள் மேட்-இன்-இந்தியா கார்களை வாங்க விரும்புவதினால்தான் டாடா கார்களின் விற்பனை அதிகரித்து வருவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஹூண்டாய் நிறுவனமும் நிறைய கார்களை இந்தியாவில் மேட்-இன்-இந்தியா கார்களாக விற்பனை செய்கிறது.


Click it and Unblock the Notifications









