டீசலில் லாரி இயங்குவது எல்லாம் அந்த காலம்! இப்போது எல்லாமே கேஸ் தான்... டாடாவின் புதிய தயாரிப்பு!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம். கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் அதேநேரம், கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதிலும் பல நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், கமர்ஷியல் வாகனங்களை தான் ஆரம்பத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்தது. அதன்பின்னரே, கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் இறங்கியது. இந்த நிலையில், எல்.என்.ஜி (LNG)-இல் இயங்கக்கூடிய அதன் லாரிகளை டெலிவிரி செய்யும் பணிகளை டாடா மோட்டார்ஸ் துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
கனரக லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் உலகளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் டாடா க்ரூப்பும் ஒன்றாகும். ஒவ்வொரு விதமான கனரக வாகனத்திற்கும் என தனியாக ஒரு பிரிவை கொண்டுள்ளது. அதில் ஒரு பிரிவு தான் டாடா டிரக்ஸ் (Tata Trucks) ஆகும்.

டாடா லாரிகளிலும் லைட்-வெயிட், ஹெவி-வெயிட் என சில வகைகள் உள்ளன. அதேபோல், லாரிகளில் வழங்கப்படும் பவர்டிரெயின்களிலும் வேறுப்பாடுகள் உள்ளன. அதாவது, சில டாடா லாரிகள் சிஎன்ஜி-யிலும், சில லாரிகள் ஹைட்ரஜன் பேட்டரிகளிலும், சில லாரிகள் எல்.என்.ஜி-யிலும் இயங்கக்கூடியவை ஆக உள்ளன. இதில், எல்.என்.ஜி-இல் இயங்கக்கூடிய டாடா லாரி தான் டாடா பிரிஸ்மா 5530.எஸ் (Tata Prisma 5530.S) ஆகும்.
இந்த எல்.என்.ஜி லாரியின் டெலிவிரிகள் தான் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இதன்படி, முதற்கட்டமாக 150 டாடா பிரிஸ்மா 5530.எஸ் லாரிகளை க்ளீன் க்ரீன் ஃப்யுல் & லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு டாடா க்ரூப் டெலிவிரி செய்துள்ளது. க்ளீன் க்ரீன் ஆனது பசுமை எரிபொருளை சில்லறை விற்பனை செய்வதிலும், ஏற்றுமதி & இறக்குமதி செய்வதிலும் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது.
இத்தகைய நிறுவனத்திற்கு டாடா பிரிஸ்மா 5530.எஸ் எல்.என்.ஜி லாரிகள் டெலிவிரி செய்யப்படும் நிகழ்ச்சி கேரளாவின் கொச்சியில் நடைபெற்றுள்ளது. 150 லாரிகள் முதற்கட்டமாக டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. அதாவது, வரும் நாட்களில் க்ளீன் க்ரீன் நிறுவனத்திற்கு மேலும் சில கூடுதல் எல்.என்.ஜி லாரிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. மொத்தமாக, 350 டாடா பிரிஸ்மா 5530.எஸ் எல்.என்.ஜி லாரிகளுக்கு க்ளீன் க்ரீன் நிறுவனம் ஆர்டர் செய்துள்ளது.
இந்த டாடா எல்.என்.ஜி லாரியை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதில் 6.7 லிட்டர் கேஸ் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 280 எச்பி மற்றும் 1100 என்.எம் வரையிலான டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த லாரியில் டிரைவரின் உதவிக்காக நிறைய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், கியர் ஷிஃப்ட் அட்வைசரை சொல்லலாம்.
இந்த கியர் ஷிஃப்ட் அட்வைசர் டெக்னாலஜி லாரியின் அதிக ரேஞ்ச்சிற்கும், குறைந்த எரிபொருள் செலவிற்கும் வழிவகுக்கக்கூடியது ஆகும். இந்த எல்.என்.ஜி லாரியை சிங்கிள் அல்லது டபுள் க்றையோஜெனிக் டேங்க் உடன் வாங்கலாம். இதில் டபுள் டேங்கை தேர்வு செய்வதன் மூலம், டேங்கை முழுவதுமாக நிரப்பிக் கொண்டால் 1,000கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பயணிக்கலாம்.
டாடா மோட்டார்ஸ் ஒவ்வொரு லாரியையும் விர்டியுவலாக இணைக்கும் விதத்தில் 'ஃப்ளீட் எட்ஜ்' என்கிற கனெக்டட் வைகல் பிளாட்ஃபாரத்தை அதன் புதிய லாரிகளில் வழங்கி வருகிறது. அதன்படி, டாடா பிரிஸ்மா 5530.எஸ் லாரியிலும் இந்த சாஃப்ட்வேர் வழங்கப்படுகிறது. பல லாரிகளை கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு இந்த சாஃப்ட்வேர் உதவிகரமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக, சிஎன்ஜி, ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருள்களில் இயங்கக்கூடிய வாகனங்களை மத்திய அரசில் இருந்து மாநில அரசாங்கங்கள் வரையில் ஊக்கப்படுத்தி வருகின்றன. அதற்கு தனது முழு ஆதரவை வழங்கிவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் எல்.என்.ஜி லாரிகளை வெற்றிக்கரமாக அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications