ஹூண்டாயிடம் அடி பணியும் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ்! தீபாவளி பெருசா கை கொடுக்கல!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், 2வது இடத்திற்கு ஹூண்டாய் நிறுவனத்துக்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக பலத்த போட்டி நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் நமக்கு கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 10 வருடங்களில் நெக்ஸான், பஞ்ச் என தரமான கார்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதனால், டாடா கார்கள் விற்பனை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்றாலும், கடந்த சில மாதங்களாக ஏனோ டாடா கார்களின் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் வெறும் 41 ஆயிரம் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்தது நிறைய பேருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால், நடந்து முடிந்த அக்டோபர் மாதத்தில் டாடா கார்கள் விற்பனை ஓரளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 48 ஆயிரத்து 133 கார்களை டாடா விற்பனை செய்துள்ளது. இருப்பினும், 50 ஆயிரம் என்கிற பெஞ்ச்மார்க்கை தொடாதது டாடாவுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கும். 2023ஆம் ஆண்டில் இதே அக்டோபர் மாதத்தில் இதனை காட்டிலும் 210 கார்களை டாடா மோட்டார்ஸ் அதிகமாக விற்பனை செய்திருந்தது.
இந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபரில் 7 ஆயிரத்து 68 கார்களை டாடா மோட்டார்ஸ் அதிகமாக விற்பனை செய்துள்ளது. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாடா காராக முதலிடத்தில் பஞ்ச் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 740 பஞ்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இதில், பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனையும் அடங்குகிறது.

அதுவே, 2023 அக்டோபர் மாதத்தில் 15 ஆயிரத்து 317 பஞ்ச் கார்களையும், இந்த ஆண்டு செப்டம்பரில் 13 ஆயிரத்து 711 பஞ்ச் கார்களையும் மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து 2வது இடத்தில் நெக்ஸான் 14 ஆயிரத்து 759 கார்கள் விற்பனை உடன் உள்ளது. இதில் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனையும் அடங்குகிறது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் 16 ஆயிரத்து 887 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு, அந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட டாடா காராக இருந்தது.
இந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெறும் 11 ஆயிரத்து 470 நெக்ஸான் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இவற்றிற்கு அடுத்து 3வது இடத்தில், டாடா மோட்டார்ஸின் லேட்டஸ்ட் அறிமுகமான கர்வ் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 351 கர்வ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனையும் அடங்குகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 4 ஆயிரத்து 763 கர்வ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதற்கடுத்து, டியாகோ கார்களை டாடா மோட்டார்ஸ் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இந்தியாவின் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றாக விளங்கும் டியாகோ கடந்த மாதத்தில் 4 ஆயிரத்து 682 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் டியாகோ இவி எலக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கையும் அடங்குகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் குறைவான டியாகோ கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், 2023 அக்டோபரில் 5 ஆயிரத்து 356 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
டியாகோவுக்கு அடுத்து, 5வது மற்றும் 6வது இடங்களில் அல்ட்ராஸ் மற்றும் சஃபாரி கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 2 ஆயிரத்து 642 மற்றும் 2 ஆயிரத்து 86 ஆகும். இதில் அல்ட்ராஸ் 2023 அக்டோபரில் 5 ஆயிரத்து 984 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் 7வது இடத்தில் ஹெரியர் ஆயிரத்து 947 கார்கள் விற்பனை உடன் உள்ளது. இவை இல்லாமல், 926 டிகோர் கார்களையும் டாடா மோட்டார்ஸ் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் விற்பனையில் எலக்ட்ரிக் கார்களும் முக்கிய பங்காற்றுகின்றன. ஏனெனில், மொத்தம் 5 விதமான எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்கிறது. இருப்பினும், டாடா கார்கள் விற்பனை கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் அதிகமாக இல்லை. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை டாடா மோட்டார்ஸ் பெரிதும் நம்பியிருந்தது. இந்த நவம்பர் மாதத்திலாவது டாடா கார்கள் விற்பனை உயருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









