இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் டாடா நிறுவனத்தால் இதை மறக்க முடியாது!! மக்கள் கிட்ட இருந்து செம்ம ரெஸ்பான்ஸ்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் முன்னணி கார் நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மார்க்கெட் டிரெண்டிற்கு ஏற்ப கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவி கார்களை புதுசு புதுசாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. நெக்ஸான், ஹெரியர், சஃபாரி மற்றும் பஞ்ச் என தற்சமயம் சந்தையில் விற்பனை செய்யப்படும் டாடா எஸ்யூவி கார்கள் அனைத்தும் கடந்த 10 வருடங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மாடர்ன் எஸ்யூவி கார்கள் ஆகும். இந்த நிலையில் எஸ்யூவி கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. அது என்ன என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் மக்கள் பலரால் வாங்கப்படும் காராக டாடா பஞ்ச் விளங்குகிறது. இந்த நிலை இப்போதில் இருந்து இல்லை, கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்தியாவின் நம்பர் ஒன் காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்து வருகிறது. கடந்த ஜூன் மாத விற்பனையிலும் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் டாடா பஞ்ச் ஆகும்.

இந்த அளவிற்கு, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் பஞ்ச் டாடா மோட்டார்ஸின் சமீப கால ஹிட் மாடலாக விளங்குகிறது. பஞ்ச் மட்டுமின்றி, நெக்ஸானும் டாடா மோட்டார்ஸின் வெற்றிக்கரமான கார் ஆகும். டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களின் விலைகள் சற்று அதிகமாக இருப்பினும், அவற்றின் விற்பனையும் சிறப்பாகவே உள்ளது.
இவ்வாறு டாடா மோட்டார்ஸின் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதன் மூலமாக, 20 லட்சம் எஸ்யூவி கார்கள் விற்பனை என்கிற மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் விரைவாகவே தற்போது எட்டியுள்ளது. ஆம், டாடா எஸ்யூவி கார்களின் விற்பனை எண்ணிக்கை 20 இலட்சத்தை வெற்றிக்கரமாக கடந்துள்ளது.

தற்சமயம் விற்பனையில் இருக்கும் மேலே குறிப்பிடப்பட்ட 4 எஸ்யூவி கார்களுக்கு முன்பு சியார்ரா, சஃபாரி (பழைய ஜென்ரேஷன்) போன்ற எஸ்யூவி ரக கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்தது. இந்த 20 இலட்சம் கார்கள் விற்பனையில் அவற்றின் பங்கும் அடங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், டாடா மோட்டார்ஸின் எஸ்யூவி கார்கள் இந்த அளவிற்கு அதிக வாடிக்கையாளர்களை பெறுவதற்கு சியாரா மற்றும் பழைய சஃபாரி கார்கள் அமைத்து கொடுத்த அடித்தளம் முக்கியமானது ஆகும்.
டாடா சியாரா, டாடா மோட்டார்ஸின் முதல் எஸ்யூவி கார் கான்செப்ட்டாக 1991ஆம் ஆண்டில் பொது பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. அதன்பின் 2014 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் நெக்ஸான் கான்செப்ட் காட்சிக்கு நிறுத்தப்பட்டது. இந்தியாவின் முதல் காம்பெக்ட் எஸ்யூவி கார் கான்செப்ட் நெக்ஸான் கான்செப்ட் ஆகும். அதன்பின், மைக்ரோ-எஸ்யூவி கார் என்கிற பிரிவையும் இந்திய கார்கள் மார்க்கெட்டில் பஞ்ச் மூலமாக ஆரம்பித்து வைத்த பெருமை டாடா மோட்டார்ஸையே சேரும்.
டாடா நெக்ஸான், பஞ்ச், ஹெரியர், சஃபாரி என அனைத்தும் பாதுகாப்பு விஷயத்தில் 5க்கு முழு 5 ஸ்டார்களை பெற்ற கார்களாகும். இதன் காரணமாகவே, டாடா கார்கள் என்றாலே பாதுகாப்பு மிக்கவை என்கிற கருத்து மார்க்கெட்டில் உள்ளது. சமீபத்தில் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்ட நெக்ஸான் இவி மற்றும் பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார்களும் முழு 5 ஸ்டார்களை பெற்று ஆச்சிரியப்படுத்தியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இதுகுறித்து டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் முதன்மை கமர்ஷியல் அதிகாரி விவேக் ஸ்ரீவஸ்தாவா கூறுகையில், "எஸ்யூவி பிரிவை புரிந்துக் கொண்டு ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கும் சரியான தயாரிப்பை வழங்குவதற்கான எங்களது திறன், நிலைத்தன்மையையும் மேலாதிக்கத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்க எங்களுக்கு பெரிதும் உதவுகிறது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் 3வது முன்னணி கார் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. 2வது இடத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்துக்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி நீடித்து வருகிறது. இந்த அளவிற்கு டாடா நிறுவனம் வளர்ந்திருப்பதற்கு முக்கிய காரணங்கள் ஒன்று, அதன் எஸ்யூவி கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாகும். இதனை வெளிக்காட்டும் வகையில், எஸ்யூவி கார்கள் விற்பனையில் இமாலய மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் கடந்துள்ளது.


Click it and Unblock the Notifications








