இந்த டாடா கார் நிறைய பேர் கிட்ட இருக்காது!! ஷோரூமில் கேட்டு பாருங்க... விலை எல்லாம் வாங்க கூடியதுதான்!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் நெக்ஸான் உள்பட அதன் பிரபலமான எஸ்யூவி கார்களில் புதியதாக டார்க் எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இவற்றிற்கு அறிவிக்கப்பட்டு உள்ள விலைகள் உள்பட இந்த புதிய டாடா கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று டாடா மோட்டார்ஸ். கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் கார்கள் விற்பனையில் ஹூண்டாயை முந்தி 2வது இடத்தை பிடித்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், டாடா நிறுவனத்தில் இருந்து சில புதிய கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. டாடா மோட்டார்ஸ் அதன் பிரபலமான கார்களில் புதிய டார்க் எடிசனை அறிமுகம் செய்வது வழக்கம்.

பின்னர் சில மாதங்கள் கழித்து டார்க் எடிசன் கார்கள் விற்பனை நிறுத்தப்படும். பின் மீண்டும் அவை அறிமுகம் செய்யப்படும். இப்படித்தான் 2019ஆம் ஆண்டில் இருந்து டார்க் எடிசன் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும், டாடா மோட்டார்ஸின் பிரபலமான நெக்ஸான், நெக்ஸான் இவி, ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களில் புதியதாக டார்க் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
பெயருக்கு ஏற்ப முழுக்க முழுக்க அடர் கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய டாடா டார்க் எடிசன் கார்களின் விலைகள் ரூ.11.45 லட்சத்தில் இருந்து ரூ.20.69 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளவைகளில் விலை குறைவானது என்று பார்த்தால், நெக்ஸான் டார்க் எடிசன் ஆகும். இதன் விலை ரூ.11.45 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய டாடா எடிசன் கார்களின் தோற்றத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், கார் முழுவதுமாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. கார்களின் அலாய் சக்கரங்கள் கூட அடர்ந்த கருப்பு நிறத்தில் உள்ளது. ஆங்காங்கே டார்க் எடிசன் என்பதை குறிக்கும் வகையில் முத்திரைகள் இடம்பெறுள்ளன. காரில் பளிச்சென்று தெரியும் பாகம் என்றால் அவை, ஹெட்லைட்ஸும், எல்இடி டிஆர்எல்-களும் தான். மற்றப்படி, கார்களின் தோற்றத்தில் எந்த அப்டேட்டும் இல்லை.
இந்த கார்களை டார்க் எடிசன் இல்லாமல் வாங்கினால் என்னென்ன கிடைக்குமோ அவைதான் புதிய டார்க் எடிசனிலும் கிடைக்கும். கார்களின் வெளிப்பக்கத்திற்கு ஏற்ப உட்பக்கமும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் சில வசதிகள் புதியதாக இந்த டார்க் எடிசன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

மடிக்கும் வரையில் மறைவாக இருக்கக்கூடிய டச் க்ளைமேட் கண்ட்ரோல் பேனல், 6 வெவ்வேறு விதமான மொழிகளில் 200க்கும் அதிகமான வாய்ஸ் கமெண்ட்ஸை ஏற்கக்கூடிய அமேசான் அலெக்ஸா மற்றும் டாடா வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆகியவை அவை ஆகும். இவற்றுடன், வயர்லெஸ் போன் சார்ஜர் வசதியையும் இந்த டார்க் எடிசன்களில் டாடா மோட்டார்ஸ் புதியதாக அறிமுகம் செய்துள்ளது.
நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரில் முழுவதும் கருப்பு நிறத்தில் லெதரேட் இருக்கைகள், டார்க் எடிசன் முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. விலையுயர்ந்த ஹெரியர் மற்றும் சஃபாரி டார்க் எடிசன் கார்களில் வெளிப்பக்க கருப்பு நிறத்திற்கும், உட்பக்க கருப்பு நிறத்திற்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது. ஹெரியர் டார்க் எடிசனின் விலை ரூ.19.99 லட்சமாகவும், சஃபாரி டார்க் எடிசனின் விலை ரூ.20.69 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணங்களுள் ஒன்று, இவ்வாறு அவ்வப்போது புது, புது ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகம் செய்வது ஆகும். வழக்கம்போல் இல்லாமல், டாடா நெக்ஸானில் புதிய டார்க் எடிசன் நடுத்தர-அளவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், முன்பை காட்டிலும் அதிக பேர் நெக்ஸான் டார்க் எடிசன் காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









