உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய டாடா... மேட்-இன்-இந்தியா கார்கள் என்றால் இனி இதுதான் ஞாபகம் வரனும்!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு க்ளோபல் என்சிஏபி (Global NCAP) பாதுகாப்பான தேர்வு விருது (Safer Choice Award)-ஐ வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்ட டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி கார்கள் முழு 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தியதை அடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு டாடா மோட்டார்ஸின் பதில் என்ன என்பதையும், டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களை பற்றியும், அவற்றில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
பொது மக்கள் மத்தியில் விற்பனைக்கு வரும் கார்களின் தரத்தை வெளியுலகிற்கு தெரியப்படுத்த, அவை பல்வேறு விதமான கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்காகவே பல்வேறு கிராஷ் டெஸ்ட் அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், க்ளோபல் என்சிஏபி ஆகும். இது ஒரு உலகளாவிய கிராஷ் டெஸ்ட் அமைப்பு என்பதால், உலகெங்கிலும் உள்ள கார்கள் இங்கு மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், நமது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சில கார்களும் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த டெஸ்ட்டில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா கார்கள் 5க்கு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸின் கார்கள் பல க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன.
அந்த வகையில், டாடா மோட்டார்ஸின் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்கள் கடந்த 2023ஆம் ஆண்டில் க்ளோபல் என்சிஏபி-இல் பெரியவர்கள் பாதுகாப்பு மற்றும் சிறியவர்கள் பாதுகாப்பு என இரண்டிலும் அதிக மதிப்பெண்களை பெற்று, 5க்கு 5 நட்சத்திரங்களை அள்ளின. இதற்காக, சேஃபர் சாய்ஸ் விருதை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் அமைப்பு தற்போது வழங்கியுள்ளது.

க்ளோபல் என்சிஏபி-க்கு பின்னரும் வேறு சில சோதனைகளில் இந்த டாடா கார்கள் உட்படுத்தப்பட்டன. அந்த சோதனைகளில், காரில் இருந்த தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங், ஸ்பீடு அசிஸ்டன்ஸ் மற்றும் டிரைவர் பிளைண்ட் ஸ்பாட் மானிடரிங் சிஸ்டம் உள்ளிட்டவை விரிவாக சோதனை செய்து பார்க்கப்பட்டன.
க்ளோபல் என்சிஏபி 2018ஆம் ஆண்டில் சேஃபர் சாய்ஸ் விருதை அறிமுகம் செய்தது. இந்த விருதை பெறுவதற்கான தகுதிகளை கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் க்ளோபல் என்சிஏபி அப்டேட் செய்தது. அதன்படி இந்த விருதை பெற வேண்டுமெனில், வாகனம் கட்டாயமாக பெரியவர்கள் மற்றும் குழந்தை பயணிகள் பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களை பெற வேண்டும். வேகமாக செல்லும்போது தேவையான உதவிகளை வழங்கக்கூடிய சிஸ்டம் இருக்க வேண்டும்.

தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டத்தை ஐக்கிய நாடுகள் நிர்ணயித்த தரத்தில் கொண்டிருக்க வேண்டும். அதேபோல், காருக்குள் இருந்து டிரைவரால் பார்க்க முடியாத பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கும் அம்சமும் வாகனத்தில் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் அனைத்தையும் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்கள் பூர்த்தி செய்தமையால் டாடா மோட்டார்ஸ் இந்த விருதை பெற்றுள்ளது.
விருது பெற்று இருப்பது குறித்து டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவனத்தின் துணை தலைவரும், முதன்மை உற்பத்தி அதிகாரியுமான மோகன் சாவர்கர் கூறுகையில், "எங்கள் டாடா சஃபாரி மற்றும் டாடா ஹெரியர் ஆகியவற்றிற்காக பாதுகாப்பான தேர்வு விருதை பெறுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். பாதுகாப்பில் எங்களின் கவனம், நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு வாகனத்திலும் பிரதிபலிக்கிறது. இது தொழில்துறையில் ஒரு அளவுகோலை அமைக்கிறது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை மற்றும் மைலேஜை பார்த்து கார் வாங்கிக் கொண்டிருந்த மக்களை, காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பார்த்து வாங்க வைத்த பெருமை டாடா மோட்டார்ஸையே சேரும். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் டாடா கார்கள் பாதுகாப்பானவைகளாக கருதப்படுகின்றன. இதனை க்ளோபல் என்சிஏபி வெளியுலகிற்கு காட்டியது.


Click it and Unblock the Notifications









