தமிழகத்தில் 9 ஆயிரம் கோடியை முதலீடு செய்யும் டாடா.. எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கபோகுது தெரியுமா?..
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தமிழக அரசுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செய்திருக்கின்றது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கின்றது. டாடாவின் இந்த முதலீட்டால் மாநிலத்தால் மிகப் பெரிய அளவில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.
இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி சுமார் 5 ஆயிரம் பேருக்கு இந்த முதலீட்டால் வேலை வாய்ப்பு கிடைக்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையிலேயே டாடா மோட்டார்ஸ் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கின்றது. நிகழ்வின்போது அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட முக்கிய அரசுகள் அதிகாரிகள் மற்றும் டாடா மோட்டார்ஸின் மூத்த அதிகாரிகள் பலரும் இருந்தனர்.

தமிழக அரசு சமீபத்தில்தான் 'உலக முதலீட்டார்கள் மாநாட்டை' சென்னையில் நிகழ்த்தியது. இந்த மாநாடு நடைபெற்று சில வாரங்களே ஆகின்றநிலையில், தற்போது டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கின்றது. இது முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் டாடா மோட்டார்ஸை போலவே இன்னும் பல நிறுவனங்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழகத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு இருக்கின்றனர். அந்தவகையில், வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமும் இந்தியாவில், தமிழகத்தில் அதன் கால் தடத்தைப் பதித்து இருக்கின்றது. வின்ஃபாஸ்ட் நிறுவனமே அது ஆகும்.
இந்த நிறுவனம் தென்தமிழகத்தி (தூத்துக்குடியி)-லேயே அதன் உற்பத்தி ஆலையை அமைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கான பணிகளும் சமீபத்திலேயே தூத்துக்குடியில் தொடங்கின. இதிலும், முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்குபெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. வின்ஃபாஸ்ட் தமிழகத்தில் அமைத்துக் கொண்டிருக்கும் ஆலையின் வாயிலாக எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி மின்சார இரண்டு சக்கர வாகனங்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
இந்த நிலையிலேயே டாடாவும் அதன் முதலீட்டை தமிழகத்தில் செய்ய முன் வந்திருக்கின்றது. எனவே விரைவில் டாடா மோட்டார்ஸ் தமிழகத்தில் அதன் புதிய ஆலையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் உலக அளவில் 7 அசெம்பிள் ஆலைகளையும், 8 ஆர்&டி மையங்களையும் மற்றும் 3 டிசைனிங் லேப்களையும் செயல்படுத்தி வருகின்றது.
இத்துடன், 23 உற்பத்தி ஆலைகளையும் நிறுவனம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தமிழகத்தில் புதிய ஆலையை டாடா மோட்டார்ஸ் அமைக்க இருக்கின்றது. அங்கு டாடாவின் முன்னணி கார் மாடல்கள் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா மோட்டார்ஸ் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
அந்தவகையில் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகளாக டியாகோ, டியாகோ.இவி (எலெக்ட்ரிக் கார்), டிகோர், டிகோர் இவி (எலெக்ட்ரிக் கார்), எக்ஸ்பிரஸ்-டி இவி (எலெக்ட்ரிக் கார்), நெக்ஸான், நெக்ஸான் இவி(எலெக்ட்ரிக் கார்), பஞ்ச், பஞ்ச் இவி (எலெக்ட்ரிக் கார்), ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவை இருக்கின்றன.
இவற்றின் வரிசையில் விரைவில் ஹாரியர் இவி, சஃபாரி இவி, அவின்யா மற்றும் கர்வ் ஆகிய கார் மாடல்களும் இணைக்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் உற்பத்தி பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புதிய முதலீட்டின் கீழ் உற்பத்தி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகம் வாகன உலகின் மிகப் பெரிய மையமாகக் மாறிக் கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் நிஸான், பாரத் பென்ஸ், ராயல் என்பீல்டு, டிவிஎஸ் என முன்னணி நிறுவனங்கள் தங்களின் வாகன உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையிலேயே வின்ஃபாஸ்ட் போன்ற உலக புகழ்பெற்ற பிராண்டுகளும் நம்முடைய தமிழகத்தில் கால்தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








