பாதுகாப்பான கார்களை உருவாக்கினாலும் விற்பனை இல்ல... டாடா மோட்டார்ஸ் அடுத்த கட்டத்துக்கு போக மாட்டிங்குதே!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம். மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அடுத்து, தற்போதைக்கு இந்தியாவின் 3வது பெரிய அளவிலான கார் நிறுவனமாக விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், 2வது இடத்திற்கு ஹூண்டாய் நிறுவனத்திற்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இருப்பினும், நடந்து முடிந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் டாடா கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. இது பெரிய அளவில் இல்லையென்றாலும், சில நூறு கார்கள் குறைவாகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாடா கார்கள் என்றாலே பாதுகாப்பானவை என்கிற பார்வை நம் மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கு காரணம், க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிலும், இந்தியாவின் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிலும் பல்வேறு டாடா கார்கள் முழு 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தி உள்ளன. இதன் காரணமாகவே, கடந்த சில வருடங்களில் டாடா கார்களின் விற்பனை வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது.

இதன் மூலமாக, இந்தியாவில் கார்கள் விற்பனையில் 2வது இடத்திற்கு ஹூண்டாய் நிறுவனத்திற்கு சவாலாக விளங்கிவரும் டாடா மோட்டார்ஸ் கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 44,142 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 1,373 குறைவாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 45,515 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து இருந்தது.
அதேபோல், 2024 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையிலும் ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கை 585 குறைவாகும். ஏனென்றால், இந்த ஆண்டு ஜூலையில் 44,727 கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. டாடா மோட்டார்ஸில் இருந்து தற்போதைக்கு மொத்தம் 8 விதமான கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், டாடா கர்வ் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டாடாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாடா காராக முதலிடத்தை பஞ்ச் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 15,643 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஆகஸ்ட்டில் 14,523 பஞ்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், 2024 ஜூலையில் 16,121 பஞ்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.
இந்தியாவில் டாடா காரை வாங்கும் 3இல் ஒருவர் நிச்சயமாக பஞ்ச் காரை வாங்குவதாக இந்த ரிப்போர்ட் தெரிவிக்கிறது. பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரும் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது. பஞ்ச் காருக்கு அடுத்து மக்கள் அதிகம் வாங்கும் காராக 2வது இடத்தில் டாடா நெக்ஸான் உள்ளது. கடந்த மாதத்தில் 12,289 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கையும் அடங்குகிறது.

2023 ஆகஸ்ட்டில் 8,049 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், 2024 ஜூலையில் 13,902 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. பஞ்ச் மற்றும் நெக்ஸான் இவை இரண்டும் தான் தற்போதைக்கு டாடாவின் நம்பிக்கைக்குரிய கார்களாக உள்ளன. ஏனெனில், இவற்றிற்கு அடுத்து 3வது இடத்தில் உள்ள டாடா காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவாகும். இந்த வரிசையில், 3வது இடத்தில் டியாகோ உள்ளது. கடந்த மாதத்தில் 4,733 டியாகோ மற்றும் டியாகோ இவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
4வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் லேட்டஸ்ட் காரான கர்வ் இவி உள்ளது. கடந்த மாதத்தில் 3,455 கர்வ் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல்/ டீசல் என்ஜின் உடனான கர்வ் காரின் விற்பனை இந்த செப்டம்பர் மாதத்தில் இருந்துதான் துவங்கப்பட்டது. இவை இல்லாமல், 3,031 அல்ட்ராஸ் கார்கள், 1,951 சஃபாரி கார்கள், 1,892 ஹெரியர் கார்கள், 1,148 டிகோர் கார்களையும் டாடா மோட்டார்ஸ் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸில் புதியதாக ஒரு கார் அறிமுகமாகிய போதிலும், மொத்த கார்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. இதில் இருந்து மற்ற டாடா கார்களின் விற்பனை குறிப்பிட்ட விகிதத்தில் குறைந்து வருவதை அறிய முடிகிறது. இதனை வரும் மாதங்களில் டாடா கர்வ் சரிச்செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான், பஞ்ச் கார்களை போன்று கர்வ் காரும் மார்க்கெட்டில் பெரிய வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









