டாடா எலெக்ட்ரிக் கார்களும்.. அதன் ரேஞ்ச் திறனும்! ஏசியை ஃபுல்லா வச்சிட்டு போனாலும் இவ்ளோ ரேஞ்ச் தருதா!
இந்திய எலெக்ட்ரிக் கார்கள் (Electric Car) உலகின் அறிவிக்கப்படாத மன்னனாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றது, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம். இந்த பிராண்டே மிக மிக அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி டாடா மோட்டார்ஸ்-இன் கீழ் பஞ்ச் இவி (Punch.ev), டிகோர் இவி (Tigor.ev), டியாகோ இவி (Tiago.ev), நெக்ஸான் இவி (Nexon.ev) மற்றும் கர்வ் இவி (Curvv.ev) ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களே விற்பனையில் இருக்கின்றன.
இவற்றின் திருத்தப்பட்ட ரேஞ்ச் திறன்கள் பற்றிய விபரங்களையே டாடா மோட்டார்ஸ் தற்போது வெளியிட்டு இருக்கின்றது. சமீபத்தில் எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் திறனை அறிவிக்கும் விஷயத்தில் புதிய விதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சேர்த்தது. அதாவது, புதிய எம்ஐடிசி (New MIDC) விதிகளை அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கிடைத்த ரேஞ்ச் பற்றிய புள்ளி விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

கர்வ் இவி: நிறுவனத்தின் புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவாகும். இந்தியாவில் இந்த கார் மாடல் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 55 kWh மற்றும் 45 kWh ஆகியவையே அவை ஆகும். இதில் முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 585 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 502 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்திருந்தது.
ஆனால், புதிய எம்ஐடிசி விதியின்கீழ் செய்யப்பட்ட சோதனையில் இந்த காரின் 55 kWh பேட்டரி பேக் 502 கிமீ ரேஞ்சையும், 45 kWh பேட்டரி பேக் 430 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர, டாடா மோட்டார்ஸ்-ம் தன்னுடைய தனிப்பட்ட சோதனைகளுக்கு இந்த எலெக்ட்ரிக் கார்களை உட்படுத்தி இருக்கின்றது.

அந்தவகையில், அது மேற்கொண்ட சோதனையில் இந்த எலெக்ட்ரிக் கார்கள் இன்னும் குறைவாகவே ரேஞ்ச் திறனை வெளியேற்றும் என்பது தெரிய வந்திருக்கின்றது. 55 kWh பேட்டரி பேக் 400 கிமீ - 425 கிமீ ரேஞ்சையும், 45 kWh பேட்டரி பேக் 330 கிமீ - 350 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 17.49 லட்சம் ஆகும்.
நெக்ஸான் இவி: கர்வ் இவி-யைபோலவே நாட்டின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலான நெக்ஸான்.இவி-யையும் டாடா மோட்டார்ஸ் புதிய எம்ஐடிசி விதிகளின்கீழ் சோதனைக்கு உட்படுத்தி இருக்கின்றது. இந்த கார் மாடலில் 40.5 kWh மற்றும் 30 kWh ஆகிய திறன் கொண்ட பேட்டரி பேக்குகளே இந்த கார் மாடலில் வழங்கப்படுகின்றது.

இதன் பழைய எம்ஐசிடி ரேஞ்ச் திறன் 465 கிமீ மற்றும் 325 கிமீ ஆகும். ஆனால், புதிய எம்ஐடிசி-இன் கீழ் இந்த கார் ஓர் முழு சார்ஜில் 390 கிமீ மற்றும் 275 கிமீ ரேஞ்சையே வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இதேபோல், டாடா மோட்டார்ஸ் மேற்கொண்ட கடுமையான சோதனைகளின்கீழ் 40.5 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 290 கிமீ முதல் 310 கிமீ ரேஞ்சையும், 30 kWh ஓர் முழு சார்ஜில் 210 கிமீ முதல் 230 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
பஞ்ச் இவி: இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் கார் 10.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரில் 35 kWh மற்றும் 25 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
இந்த பேட்டரி பேக்குகள் பழைய எம்ஐடிசி-யின் கீழ் 421கிமீ மற்றும் 315கிமீ ரேஞ்சையே வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போதைய புதிய எம்ஐடிசி விதிகளின்கீழ் 35 kWh ஓர் முழு சார்ஜில் 365 ரேஞ்சையும், 25 kWh ஓர் முழு சார்ஜில் 265 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. டாடா-வின் தனிப்பட்ட சோதனையில் இவை ஓர் முழு சார்ஜில் 290கிமீ முதல் 210கிமீ வரையில் ரேஞ்சை வழங்கி இருக்கின்றன.
டியாகோ இவி: இந்த காரிலும் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளே வழங்கப்படுகின்றன. 24 kWh மற்றும் 19.2 kWh ஆகியவையே அவை ஆகும். இவை புதிய எம்ஐடிசி விதிகளின்கீழ் ஓர் முழு சார்ஜில் 275 கிமீ மற்றும் 221 கிமீ ரேஞ்சை வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
பழைய எம்ஐடிசி ரேஞ்ச் திறன் 315 கிமீ மற்றும் 250 கிமீ என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடாவின் தனிப்பட்ட சோதனையில் இந்த கார் மாடல் 210 கிமீ முதல் 160 கிமீ வரையில் ரேஞ்ச் தரும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கார் இந்தியாவில் ரூ. 7.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவே ஆகும்.
டிகோர் இவி எலெக்ட்ரிக் கார் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில், இந்த காரின் புதிய எம்ஐடிசி விதிகளின்கீழ் மேற்கொள்ளப்பட்ட ரேஞ்ச் திறன் பற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பழைய எம்ஐடிசி ஆனது நகர்ப்புற ரேஞ்ச் சோதனையை மட்டுமே ஆதரித்தது. ஆனால், புதியது நகர்ப்புறம் மற்றும் கூடுதல் நகர்ப்புறம் என இரண்டு விதமான சோதனைகளை ஆதரிக்கின்றது.
அதாவது, பழைய விதியின்கீழ் குறைந்தபட்ச வேகம் 19 கிமீ என்றும் அதிகபட்ச வேகம் 50 கிமீ என்கிற வீதங்களிலும் சோதனைச் செய்ய வழிவகுத்தது. இதன் வாயிலாக கிடைக்கும் ரேஞ்ச் திறன் பற்றிய விபரங்களையே வாகன உற்பத்தியாளர்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தற்போதைய புதிய விதி ஆரம்ப நிலை வேகமே மணிக்கு 31 கிமீ என கூறுகின்றது.
இதேபோல், உச்சபட்ச வேகம் 90 கிமீட்டராக அதிகரிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலையிலும் வாகனம் பயணித்திருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகின்றது. இத்தகைய விதிகளின்கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்கீழ் கிடைத்த ரேஞ்ச் திறனையே இனி வரும் நாட்களில் வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
புதிய எம்ஐடிசி விதி கூறுவதைவிட மிகக் கடுமையான சோதனையின்கீழே டாடா தன்னுடைய தனிப்பட்ட சோதனையை மேற்கொண்டிருக்கின்றது. இதனால்தான் அதில் எலெக்ட்ரிக் கார்கள் குறைவான ரேஞ்ச் திறனை வழங்கி இருக்கின்றன. குறைந்தபட்ச வேகமே மணிக்கு 40 கிமீ என்றும் டாப் ஸ்பீடு 120 கிமீ என்கிற வீதத்திலும் தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை அது ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது.
இதுதவிர, ஏசியை ஆன் செய்தும், அதிகபட்சமாக 250 கிலோ எடையை ஏற்றியும், நகரம் - நெரிசல் மிகுந்த சாலை - தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் இயக்கியும் அது சோதனை மேற்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தன்னுடைய இந்த சோதனைக்கு நிறுவனம் சி75 என பெயரிட்டிருக்கின்றது. அதாவது, தன்னுடைய 75 சதவீத வாடிக்கையாளர்கள் நிச்சயம் இந்த ரேஞ்சைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதையே இந்த சி75 வாயிலாக டாடா குறிப்பிடுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விலை குறைவு, அதிக பலன் மற்றும் சிறந்த சேவை உள்ளிட்ட காரணங்களாலேயே டாடாவின் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனையில் அவை கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications









