மாருதி சாம்ராஜ்யத்தை அடியோடு சரிக்க போகும் டாடா! இப்படி ஒரு காரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்ததில்ல!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய வெர்ஷன்களில் கிடைத்து வருகிறது. ஆனால் டாடா நெக்ஸான் காரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷன் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாரத் மொபிலிட்டி ஷோ 2024 வாகன திருவிழாவில், டாடா நெக்ஸான் சிஎன்ஜி வெர்ஷன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இன்னும் ஒரு சில மாதங்களில், டாடா நெக்ஸான் சிஎன்ஜி இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG) மாடலுக்கு நேரடி போட்டியாக டாடா நெக்ஸான் சிஎன்ஜி விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில் டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.
இந்தியாவில் கிடைக்க கூடிய முதல் டர்போ பெட்ரோல் சிஎன்ஜி கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் சிஎன்ஜி பெறவுள்ளது என்பதுதான் அது. பெட்ரோல் மூலமாக இயங்கும்போது டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரின் இன்ஜினின் பவர் அவுட்புட் 118 பிஹெச்பி மற்றும் 170 என்எம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது பவர் அவுட்புட் சற்று குறைவாக இருக்கலாம். எனினும் சிஎன்ஜி என்பதால், சிறப்பான மைலேஜ் கிடைக்கும் என்பது உறுதி. மறுபக்கம் இதன் நேரடி போட்டி மாடலான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில், 1.5 லிட்டர் கே15சி நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில், ட்வின் சிலிண்டர் செட்-அப் வழங்கப்படவிருப்பது, அதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். இதன் மூலம் நீங்கள் லக்கேஜ்களையும் தாராளமாக வைத்து கொள்ள முடியும். இந்த ட்வின் சிலிண்டர்களின் கொள்ளளவு 60 லிட்டர்களாக இருக்கும். அதே நேரத்தில் பூட் ஸ்பேஸ் 230 லிட்டர்களாக இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், டாடா நெக்ஸான் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய கார் டாடா நெக்ஸான்தான். இப்படிப்பட்ட ஒரு கார் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனுடன் வரவிருப்பது சிறப்பான ஒரு விஷயம்.
அதிக பாதுகாப்பான, அதே நேரத்தில் சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, டாடா நெக்ஸான் சிஎன்ஜி மாடல் மிகவும் ஏற்றதாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இதன் வருகைக்கு பின்னர், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடல், விற்பனையில் கடும் சவாலை சந்திக்க நேரிடலாம்.


Click it and Unblock the Notifications








