எத்தனை முறை டெஸ்ட் செய்தாலும் ஸ்கோர் பண்ணும் டாடா கார்!! மேட்-இன்-இந்தியா கார் என்றால் சும்மாவா...!
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon Facelift) கார் க்ளோபல் என்சிஏபி கிராஸ்ட் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை அறுவடை செய்துள்ளது. நெக்ஸான் ஏற்கனவே க்ளோபல் என்சிஏபி-இல் 5 ஸ்டார்களை பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் 5 ஸ்டார்களை அள்ளியுள்ளது. இதுகுறித்தும், டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் கார் குறித்தும் விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகவே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எஸ்யூவி காராக நெக்ஸானை சொல்லலாம். அப்படிப்பட்ட டாடா நெக்ஸான் கார் கடந்த ஜனவரி மாதத்தில் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு அப்கிரேட் செய்யப்பட்டது. அதாவது, காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, நெக்ஸான் கார் புத்துணர்ச்சியான தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

நெக்ஸான் காரின் மிக முக்கிய சிறப்பம்சமாக, இந்தியாவின் பாதுகாப்பான கார் என்ற பட்டத்தை பெற்ற முதல் டாடா கார் என்பதை சொல்லலாம். டாடா மோட்டார்ஸின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான நெக்ஸான் முதன்முதலாக 2017இல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், 2018இல் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் டாடா நெக்ஸான் உட்படுத்தப்பட்டது.
அப்போது, பாதுகாப்பிற்காக நெக்ஸானுக்கு முழு 5 நட்சத்திரங்களை க்ளோபல் என்சிஏபி வழங்கி இருந்தது. க்ளோபல் என்சிஏபி-இல் 5 ஸ்டார்களை பெற்ற முதல் இந்திய கார் நெக்ஸான் ஆகும். இந்த நிலையில், ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்ற டாடா நெக்ஸான் கார் தற்போது மீண்டும் க்ளோபல் என்சிஏபி-இல் 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தியுள்ளது.

2024 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு பெரியவர்கள் பாதுகாப்பில் 34க்கு 32.22 மதிப்பெண்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 44.52 மதிப்பெண்களையும் க்ளோபல் என்சிஏபி அமைப்பு வழங்கியுள்ளது. மோதல்களின் போது, காரின் பாடிஷெல்லும், தரைப்பகுதியும் நிலையானதாக இருந்ததாக க்ளோபல் என்சிஏபி பாராட்டு தெரிவித்துள்ளது. நெக்ஸான் காரில் கதவுகளுக்கான பாதுகாப்பும் கிடைக்கிறது.
முன் இருக்கை பயணிகளின் தலை மற்றும் கழுத்து பகுதிக்கான பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாகவும், முன் இருக்கை பயணிகளின் மார்பு பகுதிக்கு போதுமான பாதுகாப்பு கிடைப்பதாகவும் க்ளோபல் என்சிஏபி தெரிவித்துள்ளது. ஓட்டுனர் மற்றும் பயணிகளின் கால் முட்டிக்கு சிறப்பான பாதுகாப்பும், டிரைவரின் கணுக்காலுக்கு போதுமான பாதுகாப்பும், முன் இருக்கை பயணியின் கணுக்காலுக்கு சிறப்பான பாதுகாப்பும் கிடைக்கப்பதாக இந்த கிராஷ் டெஸ்ட் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காருக்கு சைடில் ஏற்படும் மோதல்களின்போது, பயணிகளின் தலை, வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கிறது. ஆனால், இத்தகைய மோதல்களின்போது டிரைவர் உள்பட பயணிகளின் மார்பு பகுதிக்கு போதுமான பாதுகாப்பு கிடைக்கவில்லை எனவும் க்ளோபல் என்சிஏபி சுட்டிக்காட்டி உள்ளது. சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 2024 நெக்ஸான் கார் யு.என்127 மற்றும் ஜிடிஆர்9 தேவைகளை பூர்த்தி செய்துள்ளது.
க்ளோபல் என்சிஏபி-இல் அதிக மதிப்பெண்களை பெற வேண்டுமெனில், காரில் இருக்க வேண்டிய எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (ESC) நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ளது. அத்துடன், இந்த டாடா காரில் அனைத்து இருக்கை பயணிகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர், அதாவது பயணி சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அதுகுறித்து எச்சரிக்கும் கருவி உள்ளது. இவற்றுடன், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸானின் பாதுகாப்பு தரத்தை இவ்வாறான என்சிஏபி அமைப்புகளின் சான்றிதழ்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன என்றாலும், டாடா கார்களின் தரத்தை பல்வேறு விபத்துகளின்போதும் பார்த்துள்ளோம். அதாவது, விபத்துகள் பலவற்றின்போது டாடா கார்கள் அவற்றின் வலிமையான உடலமைப்பினால் பயணிகளின் உயிரை காப்பாற்றி உள்ளன.


Click it and Unblock the Notifications









