ஷோரூமில் குப்பை மாதிரி கிடப்பதற்கு பதில் இது பெஸ்ட்! மக்கள் எல்லாரும் எதிர்பார்க்குறது இதைதான்!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. இந்த நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் காராக நெக்ஸான் (Nexon) விளங்குகிறது. ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கிலான டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், நெக்ஸான் கார்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக ஒரு நடவடிக்கையை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தரமான கார்களுள் நெக்ஸானும் ஒன்றாகும். கடந்த 2017ஆம் ஆண்டில் துவங்கிய நெக்ஸான் காரின் பயணம் இப்போதுவரையில் நிற்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், நெக்ஸானின் தோற்றம் அந்த அளவிற்கு ஸ்டைலானதாக இருப்பது மட்டுமின்றி, நெக்ஸானில் அவ்வப்போது ஏதேனும் ஒரு அப்டேட்டை டாடா மோட்டார்ஸ் கொண்டுவந்துவிடுகிறது.

அந்த வகையில், நெக்ஸானில் தற்போதும் பனோராமிக் சன்ரூஃப் காரின் புதிய வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பெரியதாக எந்தவொரு அறிவிப்பும் இன்றி டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது. இதன்படி, பனோராமிக் சன்ரூஃப் உடன் நெக்ஸான் காரின் பல்வேறு வேரியண்ட்களை வாங்கலாம். முக்கியமாக நெக்ஸான் சிஎன்ஜி காரில் தான் நிறைய வேரியண்ட்களுக்கு பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.
டாடா நெக்ஸானின் டாப் வேரியண்ட்டான ஃபியர்லெஸ் வேரியண்ட்டில் பனோராமிக் சன்ரூஃப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெக்ஸானின் டாப் வேரியண்ட்டாக இருப்பதால், பெட்ரோல் & டீசல் என்ஜின் மற்றும் மேனுவல், ஏஎம்டி மற்றும் டிசிடி என அனைத்து விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் ஃபியர்லெஸ் வேரியண்ட் கிடைக்கிறது. பெட்ரோல் என்ஜின் உடன் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.60 லட்சம் & ரூ.14.80 லட்சம், டீசல் என்ஜின் உடன் ரூ.15 லட்சம் & ரூ.15.60 லட்சம் ஆகும்.

நெக்ஸான் ஃபியர்லெஸ் வேரியண்ட்டில் முழு-அளவு பனோராமிக் சன்ரூஃப், 8-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன. இதற்கு கீழ் வேரியண்ட்டின் விலை இதனை காட்டிலும் ஏறக்குறைய ரூ.1.3 லட்சம் குறைவாக உள்ளது. நெக்ஸான் சிஎன்ஜி காரை பொருத்தவரையில், இதனை சில மாதங்களுக்கு முன்னர் தான் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்திருந்தது.
நெக்ஸான் சிஎன்ஜி காரில் கிரியேட்டீவ், கிரியேட்டீவ் ட்யூயல் டோன் மற்றும் ஃபியர்லெஸ் ட்யூயல் டோன் என 3 விதமான வேரியண்ட்களில் பனோராமிக் சன்ரூஃப் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.12.80 லட்சம், ரூ.13 லட்சம் மற்றும் ரூ.14.60 லட்சம் ஆகும்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்ஸான் சிஎன்ஜி காரில் டாப் ஃபியர்லெஸ்+ எஸ் வேரியண்ட்டில் மட்டுமே பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நெக்ஸான் சிஎன்ஜி காரில் அதனை காட்டிலும் ரூ.1.8 லட்சம் குறைவான வேரியண்ட்டிலும் இனி பனோராமிக் சன்ரூஃப்-ஐ பெறலாம். சிஎன்ஜி காரில் பனோராமிக் சன்ரூஃப்-ஐ வழங்கும் ஒரே கார் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், நெக்ஸான் கார்களை வாங்க ஏற்கனவே நிறைய கூட்டம் உள்ளது. அப்படியிருக்கையில், நெக்ஸானில் பனோராமிக் சன்ரூஃப்-ஐ பெறுவதை டாடா மோட்டார்ஸ் மேலும் எளியதாக்கி உள்ளது. இந்த நடவடிக்கை நிச்சயமாக நெக்ஸான் கார்களின் விற்பனையை அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









