டாடாவின் இந்த கார் இன்டிகாவையே விஞ்சிடும் போலையே! இப்பவே 4 லட்சம் யூனிட் தயாரிச்சுட்டாங்களா!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தரமான கார் மாடல்களில் பஞ்ச் (Punch)-ம் ஒன்றாகும். இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாகவும் இது உள்ளது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் நிகழ்வே தற்போது இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இந்த கார் தற்போது உற்பத்தியில் மிக முக்கியமான மைல்கல்லை எட்டியிருக்கின்றது. அதாவது, 4 லட்சமாவது யூனிட் பஞ்ச் கார் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அது விற்பனைக்காக ஆலையில் வெளியேற்றப்படும் புகைப்படத்தையும் அது பகிர்ந்திருக்கின்றது.
இந்த நிகழ்வு பஞ்ச் காருக்கு இந்தியாவில் நிலவும் டிமாண்டை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. இந்தியாவில் இந்த கார் முதன் முதலில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி பார்த்தால், இந்த கார் விற்பனைக்கு வந்து 34 மாதங்களே ஆகின்றன.

இத்தகைய குறுகிய காலக்கட்டத்திலேயே மிகப் பெரிய வரவேற்பை இந்தியர்கள் மத்தியில் பஞ்ச் பெற்றிருக்கின்றது. இதற்கு சான்றாகவே 4 லட்சமாவது யூனிட் உற்பத்தி என்கிற சாதனை மைல்கல்லையும் அது எட்டியிருக்கின்றது. இது அவ்வளவு சுலபமான விஷயமல்ல என்பது நாம் இங்கு கவனிக்க வேண்டிய தகவல் ஆகும்.
பஞ்ச் காருக்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானதாக அதன் மலிவு விலையும், தரமுமே ஆகும். மிக மிக அதிக பாதுகாப்பான கார் மாடலாக பஞ்ச் காட்சியளிக்கின்றது. இதற்கான சான்றையே குளோபல் என்சிஏபி-யிடமிருந்து அது பெற்றிருக்கின்றது.
உச்சபட்ச ரேட்டிங்கான ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களையே அது பெற்றிருக்கின்றது. இதுதவிர, இந்தியாவில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என பன்முக அவதாரங்களிலும் பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்தே விற்பனையில் மட்டுமின்றி உற்பத்தியிலும் இந்த காரை சாதனைப் படைக்கச் செய்திருக்கின்றது.
குறிப்பாக, பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் இதன் ஒவ்வொரு அவதாரத்தையும் அடுத்தடுத்து என இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி டாடா மோட்டார்ஸ் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை இதன் பக்கம் வளைத்துப் போட்டு இருக்கின்றது. மேலும், இந்த காரை சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்குமான வாகனமாகவே டாடா மோட்டார்ஸ் தயார் செய்திருக்கின்றது.
அந்தவகையில், 90 டிகிரி திறக்கும் வசதிக் கொண்ட கதவுகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மழை பொழிந்தால் தானாகவே வைப் ஆகும் வைப்பர்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 187 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
எனவே மிகவும் கரடு-முரடான குறிப்பாக மலைப் பாங்கான சாலையையும் கூட இந்த கார் மாடல் சமாளித்துவிடும். இந்த காரில் டாடா மோட்டார்ஸ் டிராக்சன் கன்ட்ரோலுடன் கூடிய 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷனை வழங்குகின்றது. இதுவே அக்காருக்கு அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறனை வழங்குகின்றது.
இதுதவிர, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், இரட்டை ஏர் பேக்குகள், பனி மின் விளக்கு, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா வசதி, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவ்வளவு தரமான காரை டாடா நிறுவனம் ரூ. 6.13 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வழங்குகின்றது.
இதன் அதிகபட்ச விலை ரூ. 10.20 லட்சம் ஆகும். இந்த காரில் தொழில்நுட்ப வசதிகளாக குரல் வாயிலாக கன்ட்ரோல் செய்யக் கூடிய எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 அங்குல ஹர்மன் இன்ஃபோடெயின்மென்ட் திரை, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி மற்றும் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பஞ்ச் விற்பனையாகிக் கொண்டிருக்கும் வேகத்தை வைத்து பார்த்தால், அந்த கார் வரும் நாட்களில் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலான இன்டிகாவை போல முன்னணி கார் மாடலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அளவிற்கு அதிக அளவில் இந்தியர்களை இந்த கார் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








