ரூ.8.45 லட்சத்தில் கிடைக்கும் புதிய டாடா கார் பார்க்க இப்படித்தான் இருக்கும்!! ஷோரூம்களுக்கு வந்தாச்சு!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் பஞ்ச் (Punch) எஸ்யூவி காரில் புதியதாக கேமோ எடிசன் (Camo Edition)-ஐ அறிமுகம் செய்ததை சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டு நடைபெற்றுவரும் நிலையில், புதிய பஞ்ச் கேமோ எடிசன் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோவையும், டாடா பஞ்ச் கேமோ காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் அதன் கார்களில் அவ்வப்போது ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிப்பதற்காக இவ்வாறான கார்களை டாடா அறிமுகம் செய்கிறது. அதிலிலும், பஞ்ச் ஆனது டாடா மோட்டார்ஸின் மிகவும் முக்கியமான காராக விளங்குகிறது.

ஏனெனில், டாடாவில் இருந்து தற்சமயம் அதிகம் விற்பனையாகும் கார் பஞ்ச் ஆகும். அதுமட்டுமின்றி, கடந்த மாதங்களில் சிலமுறை ஒட்டுமொத்த இந்திய அளவில் அதிக பேரால் வாங்கப்பட்ட காராக பஞ்ச் முதலிடத்தை பிடித்தது. இத்தகைய காரின் விற்பனையை மேலும் பெருக்கும் விதமாக கேமோ எடிசனை டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
பண்டிகை காலத்தை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டுள்ள புதிய பஞ்ச் கேமோ எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.45 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் பஞ்ச் கார் குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், பஞ்ச் கேமோ எடிசன் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன.

டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் மற்ற பஞ்ச் கார்கள் உடன் காட்சித்தரும் இந்த பஞ்ச் கேமோ எடிசன் கார் சீவீட் பச்சை நிறத்திலும், அதன் மேற்கூரை வெள்ளை நிறத்திலும் இருப்பதை காணலாம். இதற்கேற்ப, காரின் 16-இன்ச் அலாய் சக்கரங்கள் சார்கோல் க்ரே நிறத்தில் உள்ளன. காருக்கு உள்ளே, கேமோ-தீம் பேட்டர்னில் இருக்கை கவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
டாடா பஞ்ச் கார் இந்த ஆண்டில் புதியதாக அப்டேட்களை பெற்றது. இதன்படி, ஏகப்பட்ட புதிய வசதிகள் 2024 பஞ்ச் காரில் அறிமுகம் செய்யப்பட்டன. அவை அனைத்தும், பஞ்ச் கேமோ எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் பெரிய அளவில் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி காற்று துளைகள் உள்ளிட்டவை பஞ்ச் கேமோ எடிசனில் வழங்கப்படுகின்றன.

இவற்றுடன், டைப் சி சார்ஜிங் பாயிண்ட் மற்றும் முன் இருக்கை பயணிகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் போன்றவையும் கொடுக்கப்படுகின்றன. மற்றப்படி, என்ஜின் & கியர்பாக்ஸில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, பஞ்ச் காரின் மற்ற வேரியண்ட்களில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தான் கேமோ எடிசனிலும் கொடுக்கப்படுகிறது.
மார்க்கெட்டில் டாடா பஞ்ச் கார் சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்புக்கு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஐசோஃபிக்ஸ் மற்றும் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. டாடாவின் அளவில் சிறியதான 5-சீட்டர் எஸ்யூவி காரான பஞ்ச் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பஞ்ச் கார்களின் விற்பனை ஏற்கனவே சிறப்பாக இருந்து வருகிறது. இருப்பினும், பண்டிகை காலத்தில் கஸ்டமர்களை மேலும் அதிக எண்ணிக்கையில் பெறலாம் என்கிற நோக்கத்தில் டாடா மோட்டார்ஸ் உள்ளது. பஞ்ச் கேமோ எடிசன் கார்கள் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், இந்த காரை புக் செய்தவர்கள் டெலிவிரி எடுக்க தயாராகுங்கள்.


Click it and Unblock the Notifications









