பாதுகாப்பா டிராவல் பண்ணனும்னு நினைக்கிறவங்க எல்லாரும் இந்த காரை வாங்கிட்டு இருக்காங்க!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பரான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக டாடா பஞ்ச் இவி இருக்கின்றது. இந்த காரை டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் அவதாரத்தில் மட்டுமல்ல பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி ஆகிய வெர்ஷன்களிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு மிக சிறப்பான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே பஞ்ச் இவி-க்கும் நாட்டு மக்கள் மத்தியில் மிக அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இந்த கார் தற்போது அடைந்திருக்கின்றது.
இத்தனைக்கும் இந்த கார் மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சென்ற ஜனவரி மாதத்திலேயே அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆறு மாதங்களே ஆகின்ற நிலையிலேயே அது 10 ஆயிரம் வாடிக்கையாளர்களை அதற்குள்ளாக பெற்றிருக்கின்றது. இது ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

டாடா பஞ்ச் இவி இந்தியாவில் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 25 kWh பேட்டரி பேக் மற்றும் 35 kWh பேட்டரி ஆகிய ஆப்ஷன்களே அவை ஆகும். இதில், முதல் ஒன்று 300 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜையும், இரண்டாவது ஒன்று 400 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜையும் வழங்கும்.
டாடா மோட்டார்ஸ் பஞ்ச் இவி-யை தனது புதிய ஆர்கிடெக்சர் ஆக்டி.இவி (Acti.EV architecture)-யை பயன்படுத்தியே தயார் செய்து இருக்கின்றது. வேரியண்டைப் பொருத்த வரை ஐந்து விதமான வேரியண்டுகள் அதில் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட் (Smart), ஸ்மார்ட் பிளஸ் (Smart Plus), அட்வென்சர் (Adventure), எம்பவர்டு (Empowered) மற்றும் எம்பவர்டு பிளஸ் (Empowered Plus) ஆகியவையே அவை ஆகும்.
இதேபோல், நிறத்திலும் ஐந்து விதமான ஆப்ஷன்கள் பஞ்ச் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட இருக்கின்றன. இந்த கார் ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையிலேயே பலதரப்பட்ட முக்கிய தொழில்நுட்ப அம்சங்களை இந்த காரில் டாடா மோட்டார் வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி சரவுண்ட் வியூ வசதிக் கொண்ட கேமிரா, வென்டிலேட்டட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 10.25 தொடுதல் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் ஏர் ப்யூரிஃபையர், சிங்கிள் பேன் பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிளைண்ட் வியூ மிர்ரர், மும்முனை பாயிண்ட் சீட் பெல்ட், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
டாடா பஞ்ச் இவி மலிவு விலையில் கிடைக்கும் அதிக ரேஞ்ஜ் தரும் எளெக்ட்ரிக் கார் மாடல் மட்டுமல்ல. அது அதிக பாதுகாப்பான கார் மாடலும்கூட. சமீபத்தில் குளோபல் என்சிஏபி இந்த கார் மாடலை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அதன் பாதுகாப்பு தரத்தை சோதித்தது. இந்த ஆய்வில் அது ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைக் குவித்து அதிக பாதுகாப்பான கார் என்கிற மகுடத்தைச் சூடியது.
இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 32 புள்ளிகளுக்கு 31.46 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளையும் பஞ்ச் இவி பெற்றிருக்கின்றது. இது பயணிகளைப் பாதுகாப்பதில் மட்டும் அல்ல உறுதித் தன்மையிலும் நல்ல மதிப்பெண்களையேப் பெற்று இருக்கின்றது.
அந்தவகையில், முன் பக்க உறுதித் தன்மைக்கான விஷயத்தில் 16 புள்ளிகளுக்கு 15.71 புள்ளிகளையும், பக்கவாட்டு பகுதிக்கு 16 புள்ளிகளுக்கு 15.74 புள்ளிகள் மதிப்பெண்ணையும் அது பெற்றிருக்கின்றது. இத்தகைய அதிகப்படியான புள்ளிகளின் காரணத்தினாலேயே பஞ்ச் இவி பாதுகாப்பு விஷயத்தில் மிக சிறந்தது என்பது தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் அதிக பாதுகாப்பான கார் மாடல் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருப்பதை வைத்து பார்க்கையில், இந்தியர்கள் மத்தியில் பாதுகாப்பான கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. டாடா மோட்டார்ஸின் நெக்ஸான்.இவி-யும் அதிக பாதுகாப்பானதே என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








