மாருதி சுஸுகிக்கு இந்த விஷயத்தில் தண்ணி காட்டும் டாடா மோட்டார்ஸ்!! கஸ்டமர்களை மேக்னெட் மாதிரி ஈர்க்குது!
வழக்கமாக மாருதி சுஸுகி கார்களே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களாக இருந்துவந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் அதனை மாற்றி டாடா கார் ஒன்று இந்தியாவில் மக்கள் பலர் வாங்கும் காராக முதலிடத்தை பிடித்தது. அதேபோன்று, கடந்த ஏப்ரல் மாதத்திலும் அதே டாடா கார், சேல்ஸில் நம்பர் ஒன் இடத்தை தனதாக்கி உள்ளது. எந்த டாடா கார் அது? கடந்த ஏப்ரல் மாதத்தில் அது எத்தனை யூனிட்கள் விற்பனையாகி உள்ளது? என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக மாருதி சுஸுகி கடந்த பல வருடங்களாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு மாதத்திலும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் டாப்-10 கார்களின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால், அதில் நிச்சயமாக 5- 6 மாருதி சுஸுகி கார்கள் இருக்கும். குறிப்பாக, முதல் 3- 4 இடங்களை மாருதி சுஸுகி கார்களே பிடிப்பது வழக்கம்.

ஆனால், மாருதி சுஸுகியின் ஆதிக்கத்தை டாடா மோட்டார்ஸ் உடைத்து வருகிறது. அதாவது, இந்தியாவில் அதிக பேர் வாங்கும் காராக டாடா மோட்டார்ஸின் கார்கள் அவ்வப்போது இடம்பெற ஆரம்பித்துள்ளன. கடந்த வருடத்தில் ஒரு மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்து மாருதி சுஸுகிக்கு பெரிய ஷாக் கொடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து, இந்த வருடத்தில் கடந்த மார்ச் மாத விற்பனையில் இந்தியாவின் நம்பர் ஒன் சேல்ஸ் காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும், கடந்த ஏப்ரல் மாத விற்பனையிலும் இந்தியாவின் நம்பர் ஒன் ஃபேவர்ட் காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் மைக்ரோ-எஸ்யூவி காரான பஞ்ச் கடந்த 2024 மார்ச் மாதத்தில் மொத்தம் 17,547 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. கடந்த 2024 ஏப்ரலில் இன்னும் கொஞ்சம் அதிகமாக 19,158 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 20 ஆயிரம் விற்பனையை டாடா பஞ்ச் நெருங்கி கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக பஞ்ச் வளர்ந்து வருகிறது.
டாடா பஞ்ச் காரின் ஸ்பெஷலே அதன் விலை ஆகும். டாடா பஞ்ச் மிகவும் காம்பெக்ட்டான தோற்றத்தில் வடிவமைக்கப்படுவதால், அதற்கேற்ப விலையும் குறைவாக உள்ளது. டாடா பஞ்ச் பெட்ரோல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.13 லட்சத்தில் இருந்து ரூ.10.20 லட்சம் வரையில் உள்ளன. பெட்ரோல், சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வெர்சனிலும் பஞ்ச் இவி விற்பனை செய்யப்படுகிறது.

டாடா பஞ்ச் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 88 பிஎஸ் மற்றும் 115 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறலாம். பஞ்ச் சிஎன்ஜி காரிலும் இதே பெட்ரோல் என்ஜின் தான் கொடுக்கப்படுகிறது. ஆனால், இயக்க ஆற்றல் சற்று குறைவாக கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி கார் அல்லாத ஒரு கார் இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது என சொன்னவுடனே டாடா நெக்ஸான், ஹூண்டாய் கிரெட்டா கார்களை தான் நம்மில் பெரும்பாலானோர் நினைப்போம். இந்தியாவின் சிறந்த விற்பனை காராக டாடா கார் ஒன்று தொடர்ந்து இருமுறை முதலிடத்தை பிடிப்பது எங்களுக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறை.


Click it and Unblock the Notifications









