சிங்கிள் சார்ஜில் 421 கிமீ ஓடும் கார் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டய பிச்சுக்கும் போட்டி நிறுவனங்கள்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான டாடா பன்ச் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் 18,949 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் வெறும் 11,124 ஆக மட்டுமே இருந்தது.
இது 70 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த மிக பிரம்மாண்டமான வளர்ச்சியின் மூலம் இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது. இது உண்மையில் சாதாரண விஷயமல்ல.

ஏனெனில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகிய பிரபலமான எஸ்யூவி கார்கள் எல்லாம், டாடா பன்ச் காருக்கு பின்னால் இருக்கின்றன. டாடா பன்ச் காருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
குறைவான விலைதான் இதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.20 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதற்கு அடுத்தபடியாக சிறப்பான மைலேஜ் (Mileage), இந்த காரை வாடிக்கையாளர்கள் நேசிப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. டாடா பன்ச் காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 20.09 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் பன்ச் காரின் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 18.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டாடா கூறியுள்ளது. இவை எல்லாவற்றையும் விட டாடா பன்ச் காரின் சிஎன்ஜி/மேனுவல் மாடல்கள் ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை மிக பிரம்மாண்டமானதாக இருப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் அந்த காரணம். ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா பன்ச் இவி (Tata Punch EV) என்ற பெயரில், இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனை செய்து வருகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 25kWh மற்றும் 35kWh ஆகியவை ஆகும். இதில், 25kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர் எனவும், 35kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 421 கிலோ மீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. அத்துடன் சிஎன்ஜி இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் இல்லை. இருப்பினும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் என்ற சாதனையை டாடா பன்ச் பிடித்துள்ளது.
டீசல், சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள் இல்லாவிட்டாலும் கூட, பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என 3 விதமான மாடல்களில் கிடைப்பதும், விலை மிகவும் குறைவாக இருப்பதும்தான், டாடா பன்ச் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்கள் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் இந்த காரில் வழங்கப்படும் அதிநவீன வசதிகளும், விற்பனை எண்ணிக்கையை பிரம்மாண்டமாக இருப்பதற்கு பலம் சேர்க்கின்றன.


Click it and Unblock the Notifications








