டாடாவின் புது எலக்ட்ரிக் கார் இப்படி இருந்தால் மாருதி எல்லாம் காலி!! சிங்கிள் சார்ஜில் எவ்வளவு தொலைவு போகலாம்?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் காராக அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ள சஃபாரி இவி (Safari EV) மீண்டும் சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் கடந்த சில வருடங்களாக முனைப்புடன் உள்ளது. சமீபத்தில் கூட, டாடா நிறுவனத்தில் இருந்து பஞ்ச் இவி என்ற புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் வெர்சனாக இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கடுத்து எந்த எலக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யவுள்ளது என்பதுதான் தற்போது கேள்வியாக உள்ளது. ஏனெனில், டாடா அல்ட்ராஸ் இவி மற்றும் ஹெரியர் இவி என இரு எலக்ட்ரிக் கார்களும் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது சஃபாரி இவி காரும் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனால், சஃபாரி இவி காரின் அறிமுகமும் இந்த 2024ஆம் ஆண்டிற்கு உள்ளாக எதிர்பார்க்கப்படுகிறது. ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் 7-சீட்டர் வெர்சனாக அறிமுகம் செய்யப்பட உள்ள சஃபாரி இவி தற்போது நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கும்போது, சஃபாரி இவி காரின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.

எலக்ட்ரிக் காருக்கு கிரில் பகுதி தேவைப்படாது என்பதால், காரின் முன்பகுதி முழுவதுமாக மூடப்பட்டு உள்ளது. தற்போதைய பெட்ரோல்/ டீசல் சஃபாரி காரில் இல்லாத விதத்தில், சஃபாரி இவி காரில் பின்பக்க டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு உள்ளன. அத்துடன், காரின் பின்பக்கத்தில் ரியர் வைபர் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா உடன் ரூஃப்-இல் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றையும் தற்போது வெளியாகி உள்ள படங்களில் காண முடிகிறது.
சஃபாரி போன்ற அளவில் பெரிய எஸ்யூவி கார்களுக்கு உண்டான பெரிய வீல் ஆர்சுகள் மற்றும் கருப்பு டோர் கிளாடிங்கை சஃபாரி இவி காரிலும் எதிர்பார்க்கலாம். மாடர்ன் டாடா கார்களில் வழங்கப்படும் மெல்லியதான எல்இடி லைட் பார்ஸ் மற்றும் ஹெட்லேம்ப்களை புதிய சஃபாரி இவி காரிலும் எதிர்பார்க்கிறோம். சஃபாரி இவி எலக்ட்ரிக் கார் ஆனது முன் சக்கரங்களின் மூலம் செயல்படும் எலக்ட்ரிக் காராக இருக்கும்.

அத்துடன், கூடுதல் ஆப்ஷனாக ஆல்-வீல்-டிரைவ் வெர்சனிலும் சஃபாரி இவி அறிமுகம் செய்யப்படலாம். 60kWh திறன் கொண்ட பேட்டரி பேக் உடன் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சஃபாரி இவி காரின் ரேஞ்ச் 500கிமீ என்ற அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக 500கிமீ வரையிலான தொலைவிற்கு பயணிக்கலாம்.
இத்துடன், வைகல்-டூ-லோடு மற்றும் வைகல்-டூ-வைகல் சார்ஜிங் திறன்களையும் சஃபாரி இவி பெற்றிருக்கலாம். விலையை பொருத்தவரையில், டாடா சஃபாரி இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சம் வரையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், அறிமுகத்திற்கு பிறகு விலையுயர்ந்த டாடா எலக்ட்ரிக் காராக சஃபாரி இவி விளங்கவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற நிறுவனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்திவரும் டாடா மோட்டார்ஸ் ஓர் விலையுயர்ந்த எலக்ட்ரிக் காரை உருவாக்கினால் அதில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாமோ அவை அத்தனையையும் சஃபாரி இவி-இல் எதிர்பார்க்கிறோம். அதாவது, எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவதில் தனக்கு உள்ள உயர்ந்த திறன்களை பயன்படுத்தி சஃபாரி இவி எலக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் உருவாக்கும்.
Image Courtesy: Nag Shankar/Facebook


Click it and Unblock the Notifications









