மறக்கவே முடியாத கார்! மீண்டும் வருகிறது டாடா சியரா! இதை பாக்க ரத்தன் டாடா நம்ம கூட இல்லாம போயிட்டாரே!
ஒரு காலத்தில் இந்திய சாலைகளை கலக்கிய கார்களில் ஒன்று டாடா சியரா (Tata Sierra). இந்திய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்ட முதல் ஆஃப் ரோடு எஸ்யூவி ரக கார் இதுதான். கடந்த 1991ம் ஆண்டு டாடா சியரா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செய்தியை படித்து கொண்டுள்ள பலர், அப்போது பிறந்திருக்கவே வாய்ப்பில்லை. சுமார் 12 வருடங்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டாடா சியரா காரின் உற்பத்தி, கடந்த 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இது நடந்து 20 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டன.
இடைப்பட்ட காலங்களில் இந்த கார் மீண்டும் விற்பனைக்கு வராதா? என நிறைய பேர் ஏங்கினர். இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. ஆம், டாடா சியரா கார் புதிய அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு வர தயாராகி விட்டது. கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், டாடா சியரா இவி (Tata Sierra EV) கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு, வரும் 2025ம் ஆண்டின் மத்தியில், அதாவது அடுத்த வருடம் மே அல்லது ஜூன் மாதத்தில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எலெக்ட்ரிக் கார் ஆகும். இதை தொடர்ந்து டாடா சியரா காரின் ஐசி இன்ஜன் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஐசி இன்ஜின் என்பது, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 2.0 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆகியவை ஆகும்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷன், 2025ம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முதலில் எலெக்ட்ரிக் வெர்ஷனும், அதை தொடர்ந்து ஐசி இன்ஜின் வெர்ஷனும் விற்பனைக்கு வரும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்பெல்லாம் முதலில் ஐசி இன்ஜின் வெர்ஷனைதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யும். அதற்கு பிறகுதான் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் தற்போது அந்த யுக்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாற்றங்களை செய்துள்ளது.
இதன்படி தற்போது எலெக்ட்ரிக் வெர்ஷன் முதலிலும், அதற்கு பிறகு ஐசி இன்ஜின் வெர்ஷனும் விற்பனைக்கு வருகின்றன. இதற்கு டாடா கர்வ் (Tata Curvv) ஒரு உதாரணம். முதலில் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் விற்பனைக்கு வந்தது. அதற்கு பிறகுதான் ஐசி இன்ஜின் வெர்ஷன் களமிறக்கப்பட்டது.
இதே யுக்தியை, டாடா சியரா விஷயத்திலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையாளவுள்ளது. கடந்த 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடலும், தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்படவுள்ள மாடலும் டிசைனில் நிறைய ஒற்றுமைகளை கொண்டிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








