இந்த எலக்ட்ரிக் காரை கூவி கூவி விற்கும்போதே வாங்கியிருக்கலாம்! இனி வாங்க முடியாது... வேற கலரில் கிடைக்கும்!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம். இன்னும் சொல்லப்போனால், எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் மார்க்கெட்டை துவங்கி வைத்த நிறுவனம், டாடா மோட்டார்ஸ் என சொல்லலாம். டாடா நிறுவனம் அறிமுகப்படுத்திய தரமான எலக்ட்ரிக் கார்களுள் ஒன்று, டியாகோ இவி (Tiago EV) ஆகும். இருப்பினும் தற்போது, டியாகோ இவி எலக்ட்ரிக் காரில் ஒரு முக்கியமான வசதியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது. அது என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாடா இண்டிகா காரை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்த முதல் காரான இண்டிகாவிற்கு பலத்தரப்பட்ட மக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் இண்டிகா காரின் விற்பனையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அதன் இடத்தை நிரப்பும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்டதே டியாகோ ஆகும்.

பின்னர், எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டியாகோவிலும் எலக்ட்ரிக் வெர்சனை 'டியாகோ இவி' என்கிற பெயரில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இந்த 2024ஆம் ஆண்டு முடியவுள்ள நிலையில், டியாகோ இவி எலக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. காரில் பெரியதாக எந்த அப்டேட்டும் கொண்டுவரப் படவில்லை.
மாறாக, டியாகோ இவி எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுவந்த மிட்நைட் பிளம் (Midnight Plum) என்கிற அடர் கருப்பு நிற பெயிண்ட் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. இதனால், இனி டியாகோ இவி எலக்ட்ரிக் காரை அடர் கருப்பு நிறத்தில் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மிட்நைட் பிளம் கலர் ஆப்ஷனில் டியாகோ இவி கார் முழுவதுமாக அடர் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு வந்தது; காரின் அலாய் சக்கரங்கள் கூட.

எலக்ட்ரிக் கார் என்பதை குறிக்கும் வகையில், காரின் முன்பக்க கிரில் பகுதியில், ஹெட்லைட்களை இணைக்கும் வகையில் ஸ்கை ப்ளூ நிறத்தில் ஒரு லைன் கொடுக்கப்பட்டது. மிட்நைட் பிளம் நிறத்தில் டியாகோ இவி காரை தூரத்தில் இருந்து பார்த்தால்கூட இந்த ஸ்கை ப்ளூ கலர் லைன் தனியாக தெரிகிறது. மேலும், காரின் முன்பக்கத்தில் கிரில் பகுதியில் டாடா லோகோவிற்கு பக்கத்தில், 'EV' லோகோவும் ஸ்கை ப்ளூ நிறத்தில் வழங்கப்பட்டு வந்தது.
மிட்நைட் பிளம் கலர் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளதால், டாடா டியாகோ இவி எலக்ட்ரிக் கார் இனி பிரிஸ்டின் வெள்ளை, டீல் ப்ளூ, டேடோனா கிரே மற்றும் ட்ரோபிகல் மிஸ்ட் உள்ளிட்ட 4 கலர் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே மிட்நைட் பிளம் நிறத்தில் டியாகோ இவி காரை புக் செய்துள்ளவர்களிடம் வேறு நிறத்தை தேர்வு செய்யும்படி டீலர்ஷிப் அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிட்நைட் பிளம் கலர் ஆப்ஷன் நீக்கப்பட்டு இருப்பதை தவிர்த்து, புதிய டியாகோ இவி காரில் எந்த மாற்றமும் இல்லை. 5-கதவுகளுடன் இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக விளங்கும் டியாகா இவி -இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.99 லட்சத்தில் இருந்து ரூ.11.49 லட்சம் வரையில் உள்ளன.
தோற்றத்தை பொறுத்தவரையில், எலக்ட்ரிக் கார் என்பதால் டியாகோ இவி-இன் முன்பக்க கிரில் பகுதி மூடப்பட்டதாக உள்ளது. இருப்பினும் காரில் காட்சித்தரும் கிரில் பகுதி ஆனது சும்மா டிசைனுக்காக வழங்கப்பட்டதே ஆகும். புரோஜெக்டர் ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்-கள், ஸ்டைலிஷான இரும்பு சக்கரங்கள் மற்றும் பியானோ கருப்பு நிறத்திலான கதவு கைப்பிடிகள் உள்ளிட்டவை டியாகோ இவி காரில் குறிப்பிடத்தக்க வெளிப்பக்க அம்சங்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யும் வரையில், இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் கார் டாடா டியாகோ இவி ஆகும். இத்தகைய காரை இனி அடர் கருப்பு நிறத்தில் வாங்க முடியாது என்பது சற்று ஏமாற்றமே ஆகும். கருப்பு நிறத்தில் இந்த விலை குறைவான டாடா காரை வாங்க விரும்புபவர்கள் டேடோனா கிரே நிறத்தை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications









