நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
டாடா நானோ (Tata Nano) காரை பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். 'ரூ.1 லட்சத்தில் கார்' என்கிற விளம்பரத்துடன் களமிறக்கப்பட்ட நானோ காரை ஒரு சமயத்தில் பலரும் போட்டி போட்டு வாங்கினர். இருப்பினும், மார்க்கெட்டில் டாடா நானோ கார் பெரிய தோல்வியை தழுவியது வேற கதை.
டாடா நானோ கார் தான் டாடா மோட்டார்ஸின் அளவில் சிறியதான கார் என இன்றைய நாள் வரை நம்மில் பெரும்பாலானோர் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், நானோவிற்கு முன்பே ஸிங் (Zing) என்கிற பெயரில் ஓர் சிறிய அளவிலான காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கியது. ஆனால், டாடா ஸிங் காரின் பெயர் கூட நம்மில் நிறைய பேருக்கு ஞாபகமில்லை.

நானோ காரை விட ஸிங் அளவில் சிறியது ஆகும். இத்தகைய காரை உருவாக்கும் முயற்சியில் ஆரம்ப கால கட்டத்திலேயே டாடா மோட்டார்ஸ் ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. அதாவது, முதல் டாடா காரான இண்டிகாவை வடிவமைத்து கொண்டிருக்கும் அதேநேரத்தில், மறுபக்கம் ஸிங் காரை வடிவமைக்கும் பணிகளிலும் டாடா மோட்டார்ஸ் ஈடுப்பட்டு கொண்டிருந்தது.
பணக்காரர்கள் தான் கார்களை பயன்படுத்த வேண்டும் என்றில்லாமல், அனைத்து விதமான மக்களும் வாங்கக்கூடிய விலையில் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற திட்டம் இண்டிகாவை அறிமுகம் செய்த காலக்கட்டத்தில் இருந்தே ரத்தன் டாடாவுக்கு இருந்தது. ஃபோக்ஸ்வேகன் பீட்லீ காரை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அளவில் மிகவும் சிறியதான பீட்லீ கார் ஐரோப்பாவில் மிக பிரபலமானது.
கிட்டத்தட்ட அதுமாதிரியான ஒரு காரை உருவாக்கும் முயற்சியிலேயே ஸிங் காரை டாடா மோட்டார்ஸ் வடிவமைக்க ஆரம்பித்தது. குறைவான விலையில், அதிக மைலேஜை வழங்கக்கூடியதாக மற்றும் நெரிசல் மிகுந்த போக்குவரத்துகளில் கூட எளிதாக கொண்டு செல்லக்கூடியதாக ஸிங் காரை டாடா நிறுவனம் வடிவமைத்தது. ஆனால் அதேநேரம், காருக்கு உள்ளே இடவசதியை சுருக்கிவிட கூடாது என்பதிலும் டாடா மோட்டார்ஸ் தெளிவாக இருந்தது.
இதற்காக, காரின் முன்பக்கத்திற்கு பதிலாக பின்பக்கத்தில் என்ஜின் வழங்கப்பட்டது. இதன் விளைவாக, டாடா ஸிங் காரின் முன்பக்கம் முற்றிலுமாக சிறியதாக இருந்தது. எந்த அளவிற்கு என்றால், டிரைவர் கொஞ்சம் எட்டி பார்த்தால் டாடா லோகோவை பார்த்துவிடலாம். இதன் மூலமாக, காரை ஹேண்டில் செய்வதும் எளிதாக இருந்தது. ஸிங் காரின் உற்பத்திக்காக போஸ்ச் நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணி சேர்ந்தது.

அளவில் சிறியதான காராக இருப்பினும் 4 கதவுகள் டாடா ஸிங் காரில் வழங்கப்பட்டன. பொருட்களை வைப்பதற்கான பின்பக்க கதவு எதுவும் கிடையாது. 2-சிலிண்டர் என்ஜினை இந்த காரில் டாடா மோட்டார்ஸ் பொருத்தியது. எளிமையான ஃப்யுல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை இந்த காரின் என்ஜின் கொண்டிருந்தது. காரின் எடை குறைவு என்பதால், மைலேஜ் மிக சிறப்பாகவே கிடைத்தது.
இப்படிப்பட்ட டாடா ஸிங் காரை எத்தனை பேர் வாங்கினர்? என்று கேட்டால், ஒருத்தர் கூட வாங்கவில்லை. ஏனெனில், கடைசி வரையில் டாடா ஸிங் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாமலே போய்விட்டது. இதற்கு முக்கிய காரணம், டாடா மோட்டார்ஸின் இயலாமை ஆகும். குறைந்த விலையில் ஸிங் காரை வழங்குவதில் டாடா நிறுவனம் உறுதியாக இருந்தது. ஆனால், அந்த விலையில் வலிமையான ஸிங் காரை டாடா மோட்டார்ஸால் கொடுக்க முடியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தங்களது அடுத்து தயாரிப்பு என கண்காட்சி ஒன்றில் டாடா காட்சிப்படுத்திய ஸிங் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. குறைந்த விலையில் காரை வழங்க வேண்டும் என்பதற்காக வலிமையற்றதாக ஏதோ ஒரு காரை அறிமுகம் செய்ய டாடா விரும்பவில்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இப்போது வரையிலும் தனது இந்த கொள்கையில் இருந்து மாறவில்லை. அதன் காரணமாகவே, டாடாவில் இருந்து 5-ஸ்டார் ரேட்டிங் கார்கள் தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
Source: AllCarIndex


Click it and Unblock the Notifications








