யாராவது இடம் வச்சிருந்தா கொடுங்க.. இந்தியாவில் ஆலை அமைக்க இடம் தேடும் டெஸ்லா! தமிழகத்திற்கு அடிக்குமா ஜாக்பாட்
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla) இந்தியாவில் ஆலை அமைக்க இடம் தேடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. குறிப்பாக, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கின்றது என்பது பற்றிய முக்கிய விபரங்களையே பார்க்க இருக்கின்றோம்.
அமெரிக்காவின் ஆஸ்ட்டினை தலைமையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் டெஸ்லா. இது ஓர் உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். நிறுவனத்தின் சந்தை மூலதனம் 559.85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது 29 மார்ச் 2024 நிலவரப்படி வழங்கப்பட்ட தகவல் ஆகும்.

இந்த நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய கால்தடத்தைப் பதிக்க மிக ஆர்வமாக உள்ளது. எனவே இதற்கான பணிகளிலும் நிறுவனம் மிக தீவரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ஃபினான்சியல் டைம்ஸ்-ம் ஓர் தகவலை வெளியிட்டு இருக்கின்றது. டெஸ்லா நிறுவனம் தனது கார் உற்பத்தி ஆலையை அமைக்க இந்தியாவில் இடம் தேடிக் கொண்டிருப்பதாக அந்த தகவல் அது குறிப்பிட்டு இருக்கின்றது. அத்துடன், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்ய இருப்பதாகவும் கூறியிருக்கின்றது.
எனவே டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை இந்தியாவில் விரைவில் அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் இந்த மூன்று மாநிலங்களில் ஏதேனும் ஓர் மாநிலத்திலேயே டெஸ்லாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் ஆலை தமிழகத்தில் அமைவதற்கான சூழல் மிகப் பெரிய அளவில் உள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்கள் தொடங்கி இன்றைய ஆட்சியாளர்கள் வரை வெளிநாட்டு நிறுவனங்களை மாநிலத்திற்கு வரவேற்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். இதன் அடிப்படையில் ஏற்கனவே டெஸ்லாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை விசிட் செய்தார்.
அப்போதே நிறுவனத்தை தமிழகத்தில் கார் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான அழைப்பை விடுத்திருந்தார். இதேபோல், வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் பொருட்டு இப்போதைய முதலைச்சர் முக ஸ்டாலின் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாபெரும் மாநாட்டைச் சமீபத்தில் நடத்தினார். இதன் அடிப்படையில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களுடைய முதலீட்டைச் செய்த வண்ணம் இருக்கின்றன.
அந்தவகையில், வின்ஃபாஸ்ட் (VinFast) தன்னுடைய முதலீட்டை தமிழகத்தில் செய்திருக்கின்றது. இந்த நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை தென் தமிழகத்தில் (தூத்துக்குடியில்) அமைந்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஆலையில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமின்றி எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களையும் அது உற்பத்தி செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
உற்பத்தி ஆலையைக் கட்டமைக்கும் பணிகளோடு சில வாகனங்களுக்கான பேடண்ட் உரிமையையும் அது இந்தியாவில் பதிவு செய்திருக்கின்றது. விஎஃப்3 (VF3) குட்டி எலெக்ட்ரிக் கார் மற்றும் க்ளாரா எஸ் (Klara S) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றிற்கே அது பேடண்ட் பதிவை இந்தியாவில் செய்திருக்கின்றது. இதோபோல் விரைவில் டெஸ்லாவும் அதன் கார் உற்பத்தி ஆலையை கட்டமைத்தல் மற்றும் தயாரிப்புகளுக்கான வர்த்தக உரிமங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் நீண்ட காலமாக கால் தடம் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால், சில காரணங்களால் அது தடைப்பட்ட வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே தற்போது டெஸ்லா கார் உற்பத்தி ஆலைக்கான இடத்தை இந்தியாவில் தேடிக் கொண்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி, இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








