நல்லா பார்த்துக்கோங்க... அடுத்த 20 வருஷத்தில் உலகம் முழுக்க ஓட போகும் கார் இதுதான்!!
"படுத்து தூங்கிக் கொண்டே போனாலும் உங்களுடைய இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்துவிடும்" என கூறியப்படி டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் 'ரோபோ டாக்ஸி' (Robotaxi) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளார். பார்க்கவே விசித்திரமாக இருக்கும் இந்த எலக்ட்ரிக் கார் எதிர்காலத்தில் இருந்து டைம் டிராவல் செய்து இந்தியாவிற்கு வந்தது போன்று உள்ளது. உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள புதிய டெஸ்லா ரோபோடாக்ஸி எலக்ட்ரிக் காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் உலகளவில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பது நம் எல்லாருக்குமே தெரியும். வித்தியாசமான மனிதரான எலான் மஸ்க் நிர்வகிக்கும் டெஸ்லா நிறுவனம் உருவாக்கும் எலக்ட்ரிக் கார்களும் வித்தியாசமானவை ஆக உள்ளன.

குறிப்பாக, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெஸ்லா ரோபோடாக்ஸி போன்றதான காரை இதுவரையில் பார்த்ததே இல்லை. முழுவதுமாக இரும்பில் செய்யப்பட்ட காரை போன்று சிம்பிளான டிசைனில் ரோபோடாக்ஸி காட்சியளிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்த காரின் பெரும்பான்மையான பாகங்கள் வளையாத இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
காரின் முன்பக்கத்தில் ஆரம்பிக்கும் காரின் மேற்கூரை பின் இறுதிமுனை வரையில் வளைவாக செல்வதை படங்களில் காணலாம். இந்த காரின் தோற்றத்தில் கொஞ்சம் டெஸ்லா சைபர்டிரக் வாகனத்தின் டச் இருப்பதை பார்க்க முடிகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த கார் தானாக இயங்கக்கூடியது ஆகும். தானாக இயங்கக்கூடிய கார்களை உருவாக்குவதில் கடந்த சில வருடங்களாகவே டெஸ்லா ஈடுப்பட்டு வருகிறது.

அதன் விளைவாக வெளிவந்துள்ள புதிய ரோபோடாக்ஸி பங்கு சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பை பல டிரில்லியன் டாலர்கள் உயர்த்தி, நிறுவனத்தை அசூர வளர்ச்சியில் கொண்டு செல்லும் என எலான் மஸ்க் நம்பிக்கை கொண்டுள்ளார். எலான் மஸ்க் 'சைபர்கேப்' என்றும் இந்த வாகனத்தை அழைக்கிறார். இதற்கு காரணம், டாக்ஸி உள்ளிட்ட போக்குவரத்துக்கு இந்த எலக்ட்ரிக் கார் மிகவும் பொருத்தமாக பார்க்கப்படுகிறது.
டிரைவர் யாரும் இல்லாமல், ஒடிபி சொன்னால் கதவை திறந்து பயணிகளை உள்ளே அனுமதித்து அவர்களது இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தும் வகையில் ரோபோடாக்ஸி உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகள் தவறாக நடந்துவிடக் கூடாது என்பதற்காக காரினுள் ஸ்டேரிங் சக்கரம், பெடல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால்தான், நீங்கள் படுத்து உறங்கிக் கொண்டே சென்றாலும் உங்களது இடத்தில் சரியாக நிறுத்தும் என இந்த காரை பற்றி எலான் மஸ்க் கூறியுள்ளார்.

ரோபோடாக்ஸியின் மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுவது அதன் விலை ஆகும். வெறும் 30,000 டாலர்களுக்கு இந்த தானியங்கி எலக்ட்ரிக் காரை டெஸ்லா விற்பனைக்கு கொண்டுவர உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. புதிய ரோபோடாக்ஸி அமெரிக்காவில் 2027ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனம் அதன் மாடல் 3 மற்றும் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார்களையும் தானாக இயங்கக்கூடிய வகையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால், ரோபோடாக்ஸிக்கு முன்னதாகவே அந்த தானியங்கி எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வந்துவிடும். இவ்வாறு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா எலக்ட்ரிக் கார்களில் சரியான திசையில் செல்வதற்காக கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கேமராக்களை கண்ட்ரோல் செய்ய ஒரு டெக்னாலஜியை டெஸ்லா பயன்படுத்துகிறது. இந்த டெக்னாலஜி அனைத்து விதமான சூழல்களிலும் சரியாக செயல்படுமா என்கிற கேள்வி எப்போதும் உள்ளது.

இந்த விஷயத்தில் 100% சரியானதை டெஸ்லா கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக தொழிற்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டெஸ்லாவின் தானியங்கி டிரைவிங் தொழிற்நுட்பத்தில் நம்பிக்கை இல்லாதவர்களால் டெஸ்லாவில் முதலீடு செய்ய முடியாது என எலான் மஸ்க் கூறுகிறார். 2040ஆம் ஆண்டிற்குள் உலகளவில் விற்பனையாகும் மொத்த கார்களின் மதிப்பில் 170 கோடி டாலர்கள் மதிப்பை தானியங்கி டாக்ஸிகள் கொண்டிருக்கும் என இந்திய வம்சாவளியான நிதி நிறுவன அதிகாரி டாம் நாராயண் தெரிவிக்கிறார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா ஏற்கனவே தானியங்கி டிரைவிங் டெக்னாலஜியை அதன் எலக்ட்ரிக் கார்களில் வழங்கி வருகிறது. ஆனால், அதில் நடக்கும் சிறு சிறு தவறுகள் கூட புதிய ரோபோடாக்ஸியில் இருக்காது என எதிர்பார்க்கிறோம். இதனால், உலகின் போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தை எழுத டெஸ்லா தயாராகி வருவதுபோல் தெரிகிறது. 2027ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே டெஸ்லா ரோபோடாக்ஸி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு விடும் எனவும் சில பேச்சுகள் அடிப்படுகின்றன.


Click it and Unblock the Notifications









