பருந்தாகுது ஊர்க்குருவி.. கார் சேல்ஸில் 2வது இடத்தில் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ்! ஹூண்டாய்க்கு நேரம் சரியில்ல
இந்தியாவில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வழக்கம்போல் இலட்சக்கணக்கில் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த முதல் 10 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
வழக்கம்போல், கடந்த 2023 டிசம்பர் மாதத்திலும் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக விளங்கும் மாருதி சுஸுகி கடந்த மாதத்தில் மொத்தம் 1,04,778 கார்களை விற்பனை செய்து உள்ளது.

ஆனால், 2022ஆம் ஆண்டில் இதே டிசம்பர் மாதத்தில் 1,12,010 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மாருதி கார்களின் விற்பனை 6.46% குறைந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் கடைசி டிசம்பர் மாதத்தில் மட்டுமே இவ்வாறு மாருதி சுஸுகி கார்களின் விற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கடந்த டிசம்பர் மாத கார்கள் விற்பனையில் மற்றொரு ஆச்சிரியமும் நடந்துள்ளது. அதாவது, நீண்ட மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், மாருதி சுஸுகி உடன் ஒப்பிடுகையில் பெரிய இடைவெளி உடன் 2வது இடத்தில் டாடா உள்ளது.

ஏனெனில், கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் எண்ணிக்கை 43,471 ஆகும். 2022 டிசம்பரில் 40,045 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் உள்நாட்டில் விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கும்போது, டாடா கார்களின் விற்பனை 2022 டிசம்பரை காட்டிலும் 8.56% அதிகரித்துள்ளது.
வழக்கமாக இந்த வரிசையில் 2வது இடத்தை பிடிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் கடந்த டிசம்பர் மாத விற்பனையில் 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கை 42,750 ஆகும். ஆனால், 2022 டிசம்பரில் 40 ஆயிரம் ஹூண்டாய் கார்கள் கூட விற்பனையாகவில்லை. அப்படியென்றால், 2022 டிசம்பர் மாதத்திலும் கார்கள் விற்பனையில் ஹூண்டாயை டாடா முந்தி இருந்தது.

இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் மஹிந்திரா உள்ளது. 35,171 மஹிந்திரா கார்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு முந்தைய ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 28,333 கார்களை மட்டுமே மஹிந்திரா இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், கடந்த மாதத்தில் 6,838 மஹிந்திரா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
5வது இடத்தில் டொயோட்டா 21,372 கார்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2022 டிசம்பரில் 10,421 டொயோட்டா கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. 6வது மற்றும் 7வது இடங்களில் கியா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கடந்த டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 12,536 மற்றும் 7,902 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 3 இடங்களில் முறையே ஃபோக்ஸ்வேகன் (4,930), ஸ்கோடா (4,670) மற்றும் எம்ஜி மோட்டார் (4,400) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை மாருதி சுஸுகி பிடித்திருப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. ஆனால், 2வது இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருப்பது ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏனெனில், டாடா மோட்டார்ஸ் ஒரு பக்கா இந்தியன் கார் நிறுவனம் என்பது நமக்கு தெரியும். தென்கொரிய கார் நிறுவனம் ஹூண்டாயை டாடா நிறுவனம் கார்கள் விற்பனையில் முந்தியுள்ளது.


Click it and Unblock the Notifications









