குச்சி மிட்டாய் மாதிரி லட்சக்கணக்கில் கார்கள் விற்பனையாகுது!! இந்தியாவில் வீட்டுக்கு ஒரு கார் வந்துவிடும் போல!
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் கார்கள் விற்பனையாகும் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. அவற்றுள் கடந்த 2024 மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்கள் குறித்து ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த செய்தி தொகுப்பில், சில்லறையாக அதிக கார்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்களை பார்ப்போம். அதாவது, ஒரு கார்ப்பிரேட் நிறுவனத்திற்கோ அல்லது குழுவிற்கோ மொத்தமாக விற்பனை செய்யப்பட்டவை இல்லாமல், தனி நபர் பயன்பாட்டிற்காக அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த முதல் 10 கார் நிறுவனங்களை பற்றி இனி பார்க்கலாம்.
சில்லறை விற்பனையாகவும் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தில் மாருதி சுஸுகி உள்ளது. கடந்த 2024 மே மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 20,954 மாருதி சுஸுகி கார்கள் சில்லறையாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் 1 லட்சத்து 20,150 கார்களை சில்லறை விற்பனையாக மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகியின் சில்லறை விற்பனை ஆனது 0.67%, அதாவது 804 கார்கள் அதிகமாக இந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த மே மாதத்தில் 3 லட்சத்து 3,358 கார்கள் இந்தியாவில் சில்லறை விற்பனையாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதில் மாருதி சுஸுகியின் கார்கள் மட்டுமே 1 லட்சத்து 20,954 ஆகும். அதாவது, மொத்த கார்களில் மாருதி சுஸுகி கார்களின் பங்கு மட்டுமே 39.87% ஆகும்.
மாருதி சுஸுகிக்கு அடுத்து, வழக்கம்போல் 2வது இடத்தை ஹூண்டாய் பிடித்துள்ளது. கடந்த மே மாதத்தில் ஹூண்டாயில் இருந்து சில்லறை விற்பனையாக 44,456 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு மே மாதத்தில் 46,378 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், இந்தியாவில் ஹூண்டாயின் சில்லறை கார்கள் விற்பனை ஆனது இந்த ஆண்டு மே மாதத்தில் 1,922 கார்கள் குறைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தை சொந்தமாக்கி உள்ளது. டாடா மோட்டார்ஸில் இருந்து 2023 மே மாதத்தில் 42,516 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில் 41,550 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஹூண்டாயை போலவே டாடா மோட்டார்ஸின் கார்கள் சில்லறை விற்பனையும் கடந்த மாதத்தில் 966 கார்கள் குறைந்துள்ளது.
மஹிந்திரா இந்த வரிசையில் 33,024 கார்களின் விற்பனை உடன் 4வது இடத்தில் உள்ளது. ஆனால், 2023 மே மாதத்தில் சில்லறை விற்பனையாக 34,144 கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. ஆக, மஹிந்திரா கார்களின் சில்லறை விற்பனையும் கடந்த மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே கியா மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கார்கள் விற்பனை எண்ணிக்கைகள் உடன் உள்ளன.

கியாவில் இருந்து கடந்த மே மாதத்தில் 18,759 கார்கள் சில்லறை விற்பனையாக விற்கப்பட்டு உள்ளன. அதுவே, கடந்த ஆண்டு மே மாதத்தில் 17,278 கார்களை மட்டுமே கியா நிறுவனம் சில்லறை விற்பனையாக விற்பனை செய்திருந்தது. 6வது இடத்தில் உள்ள டொயோட்டா கடந்த மாதத்தில் 18,208 கார்களை விற்றுள்ளது. 2023 மே மாதத்தில் வெறும் 15,425 டொயோட்டா கார்கள் மட்டுமே சில்லறை விற்பனையாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இதற்கடுத்துள்ள கார் நிறுவனங்கள் 10 ஆயிரம் கார்களுக்கும் குறைவாக விற்பனை செய்தவை ஆகும். 7வது இடத்தில் உள்ள ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 6,278 கார்களை சில்லறையாக விற்பனை செய்துள்ளது. 8வது மற்றும் 9வது இடங்களில் ஹோண்டா மற்றும் எம்ஜி மோட்டார் உள்ளன. இவை இரண்டின் கடந்த மே மாத சில்லறை விற்பனை எண்ணிக்கைகள் முறையே 4,745 மற்றும் 4,323 ஆகும். கடைசி 10வது இடத்தில் ரெனால்ட் 3,627 கார்களின் விற்பனை உடன் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சில கார்ப்பிரேட் நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது புதிய கார்களை எக்ஸ்சேஞ்ச் முறையில் வாங்கிக் கொண்டே இருக்கும். ஆகையால், அவற்றை எல்லாம் சேர்க்காமல் தனி நபர் வாங்கும் கார்களின் எண்ணிக்கை தான் ஒரு கார் நிறுவனத்தின் உண்மையான கள நிலவரத்தை வெளிக்காட்டுவதாகும். இந்த லிஸ்ட்டிலும் மாருதி சுஸுகி முதலிடம் பிடித்திருப்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications









