டாடா மோட்டார்ஸுக்கு அடி மேல் அடி விழுது! எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடியாமல் தவிக்குது!!
எலக்ட்ரிக் கார் (Electric Car), இந்தியா மட்டுமின்றி உலகளவில் எதிர்கால போக்குவரத்தாக மாறிவருகிறது. இதன் காரணமாகவே புது, புது எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைந்த வண்ணம் உள்ளன. மேலும் அவற்றின் விற்பனையும் சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதனை வெளிக்காட்டும் வகையில் நடந்து முடிந்த கடந்த நவம்பர் (November) மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போதைக்கு மொத்தம் 12 கார் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்கின்றன. அவை மொத்தமாக கடந்த நவம்பர் மாதத்தில் 8 ஆயிரத்து 668 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன. இது கடந்த 2023 நவம்பரை காட்டிலும் 14.58%, அதாவது 1,103 அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 7 ஆயிரத்து 565 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் சுமார் 10 ஆயிரத்து 609 எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அக்டோபர் மாதத்தில் தொடர்ச்சியாக வந்த பண்டிகை நாட்கள் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். வழக்கம்போல், கடந்த நவம்பர் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த மாதத்தில் டாடா விற்பனை செய்த எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 224 ஆகும். இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருப்பினும், வழக்கத்தை காட்டிலும் டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை சற்று குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 5 ஆயிரத்து 133 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.

இந்த 2024ஆம் ஆண்டு அக்டோபரில் இன்னும் அதிகமாக 6 ஆயிரத்து 152 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், 2023 நவம்பரை காட்டிலும் 900 எலக்ட்ரிக் கார்கள் குறைவாகவும், 2024 அக்டோபரை காட்டிலும் 1900 எலக்ட்ரிக் கார்கள் குறைவாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நவம்பரில் விற்பனை செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக 2வது இடத்தில் எம்ஜி மோட்டார் (MG Motor) 3,163 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் உள்ளது. 2023 நவம்பரில் 956 எலக்ட்ரிக் கார்களையும், 2024 அக்டோபரில் 2 ஆயிரத்து 530 எலக்ட்ரிக் கார்களையும் மட்டுமே விற்பனை செய்திருந்த எம்ஜி மோட்டாரின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை கடந்த மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது.

3வது இடத்தில் உள்ள மஹிந்திரா (Mahindra) 552 எலக்ட்ரிக் கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. 2023 நவம்பரிலும் மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை இப்படி தான் இருந்தது என்றாலும், 2024 அக்டோபரில் 907 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருந்தது. 4வது இடத்தில் சீன எலக்ட்ரிக் கார் நிறுவனமான பிஒய்டி (BYD) உள்ளது. இந்த நிறுவனத்தின் விற்பனையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை என்றாலும், கடந்த ஆண்டு நவம்பரில் வெறும் 140 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே பிஒய்டி விற்பனை செய்திருந்தது.
5வது மற்றும் 6வது இடங்களில் முறையே மெர்சிடிஸ் (Mercedes) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனங்கள் 98 மற்றும் 94 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் உள்ளன. இதில், பிஎம்டபிள்யூ 2023 நவம்பரில் 283 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 4 இடங்களில் முறையே சிட்ரோன் (82), கியா (68), வால்வோ (32) மற்றும் ஹூண்டாய் (21) நிறுவனங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எதிர்பார்த்ததை போன்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு வாடிக்கையாளர்களின் ரசனை மாறிவருவது முக்கியமான காரணம் என சொல்ல வேண்டும். அதேநேரம், எலக்ட்ரிக் கார் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய தொடர்ந்து முயற்சிக்கின்றன.


Click it and Unblock the Notifications









