மாருதி சுஸுகி திணறுது... டாடா எஸ்யூவி கார்களின் விற்பனையை யாராலும் முந்த முடியல!!
இந்தியாவில் சமீப காலமாகவே எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2023 டிசம்பர் மாதத்திலும் கணிசமான எண்ணிக்கையில் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்களை பற்றி பார்க்கலாம்.
வழக்கம்போல், கடந்த 2023 டிசம்பர் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி காராக டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 15,284 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2022 டிசம்பர் மாதத்தில் வெறும் 12,053 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, நெக்ஸான் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 2022 டிசம்பரை விட கடந்த டிசம்பரில் 26,81%, அதாவது 3,231 யூனிட்கள் அதிகரித்துள்ளது. நெக்ஸானுக்கு அடுத்து 2வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் மற்றொரு பிரபலமான எஸ்யூவி காரான பன்ச் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா பன்ச் கார்களின் எண்ணிக்கை 13,787 ஆகும்.
2022 டிசம்பர் மாதத்திலும் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட அளவிற்கு இல்லை. 2022 டிசம்பரை காட்டிலும் கடந்த மாதத்தில் 3,201 பன்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா இந்த வரிசையில் 3வது இடத்தை தனதாக்கி உள்ளது.

12,844 பிரெஸ்ஸா கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால் 2022 டிசம்பர் மாதத்தில் 11,200 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, பிரெஸ்ஸா கார்களின் விற்பனை ஆனது 1,644 யூனிட்கள் அதிகரித்துள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது.
ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் கடந்த மாதத்தில் மொத்தம் 11,355 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெறும் 7,003 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

5வது மற்றும் 6வது இடங்களில் தென் கொரியன் ஸ்டைல் எஸ்யூவி கார்களான ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா செல்டோஸ் உள்ளன. ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 10,383 வென்யூ கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. கியா நிறுவனம் 9,957 செல்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இவை இரண்டின் விற்பனையும் 2022 டிசம்பரை காட்டிலும் கணிசமான எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன.
இந்த வரிசையில் 7வது மற்றும் 8 வது இடங்களில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 9,692 மற்றும் 9,243 ஆகும். இதில் ஃபிரான்க்ஸ் கார் கடந்த 2023 ஜனவரி மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 2 இடங்களில் மஹிந்திரா பொலேரோ (7,995) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (7,516) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டா காரை தவிர்த்து, மேற்கூறப்பட்ட அனைத்து கார்களின் விற்பனையும் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இதில் இருந்து எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை சீரான வேகத்தில் அதிகரித்து வருவதை அறிய முடிகிறது. இந்த 2024 ஜனவரி மாத விற்பனையில் எந்தெந்த எஸ்யூவி கார்கள் எந்தெந்த இடங்களை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









