வாடகை வாகன சேவையில் பயன்படுத்துவதற்கு ஏற்ற கார் மாடல்கள் இவைதான்.. இந்தியால நிறைய இருக்கு ஆனா இவைதான் பெஸ்ட்!
இந்தியாவில் பட்டதாரிகள் தொடங்கி படிப்பை பாதியில் விட்டவர்கள் வரை என பலருக்கு கஞ்சி ஊத்தும் (சோறு போடும்) தொழிலாக வாடகை வாகன சேவை தொழில் இருக்கின்றது. யாரிடமும் கை கட்டி நிற்காமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பவர்கள் பலரின் தேர்வாகவும் இந்த துறையே இருக்கின்றது.
இத்தகைய துறையில் லாபம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் இந்த பிரிவிலும் தற்போது போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இருப்பினும், நீங்கள் அதிகம் லாபத்தையும், போதுமான அளவு புக்கிங்கையும் பெற வேண்டும் என நினைக்கிறீங்களா?.. இதற்கு உதவக் கூடிய சில கார் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

அதாவது, கால் டாக்சி பிரிவில் பயன்படுத்துவதற்கு உகந்த டாப் 5 கார் மாடல்கள் எவை? மற்றும் அதன் விலை எவ்வளவு? மற்றும் அதன் மைலேஜ் விபரங்கள் ஆகியவை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஹூண்டாய் அவுரா (Hyundai Aura): இந்தியாவில் கால் டாக்சி சேவை பிரிவில் பயன்படுத்துவதற்கு உகந்த செடான் வகை கார் மாடல் இதுவாகும். இந்தியாவில் நல்ல எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் செடான் கார் மாடல்களில் ஒன்றாகவும் அவுரா காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடல் 2024 பிப்ரவரியில் 5,053 யூனிட்டுகள் விற்பனையாகி இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இது 2023 பிப்ரவரியைக் காட்டிலும் 8.5 சதவீதம் குறைவான விற்பனையாகும். இருப்பினும் இது சிறப்பான விற்பனை எண்ணிக்கையாகக் காட்சியளிக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 6 லட்சத்து 33 ஆயிரத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும்.
இதன் அதிகபட்ச மைலேஜ் திறன் 22.42 கிமீ தொடங்கி 23.56 கிமீ வரையில் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு பிரீமியமான ரைடிங் அனுபவத்தை இந்த கார் மாடல் தாராளமாக வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவேதான் சிலர் இந்த காரை தேடிப்பிடித்து புக்கிங்கைச் செய்கின்றனர்.
மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz): ஹூண்டாய் அவுராவிற்கு அடுத்தபடியாக நம்முடைய இந்த லிஸ்டில் நான்காவது இடத்தையே மாருதி சுஸுகியின் இந்த தயாரிப்பு பிடித்திருக்கின்றது. மிக மிக பிரீமியமான ரைடு அனுபவத்தை பெற இந்த கார் மிகுந்த உதவியாக இருக்கும்.
இதனால்தான் சில நட்சத்திர தனியார் விடுதிகள் தங்களின் விருந்தினர்களை அழைத்து வர இந்த கார் மாடலைப் பயன்படுத்துகின்றன. ஏன், இந்தியாவில் சில முக்கிய அரசு பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இந்த கார் மாடலே அதிகாரப்பூர்வமாக வாகனமாக வழங்கப்படுகின்றது. இத்தகைய கார் மாடலே கால் டாக்சி சேவையில் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களை அதிகம் கவர முடியும்.
இந்தியாவில் இந்த கார் ரூ. 9.30 லட்சம் தொடங்கி ரூ. 12.29 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. சியாஸ் செடான் கார் ஒரு லிட்டருக்கு 20.04 கிமீ தொடங்கி 20.65 கிமீ வரையில் மைலேஜ் தரும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): கால் டாக்சி பிரிவில் பயணிகளால் அதிகம் விரும்பிப் பயணிக்க கூடிய கார் மாடலாக டிசையர் இருக்கின்றது. இந்த காரில் டிரைவருடன் சேர்த்து ஐந்து பேர் வரை பயணிக்க முடியும். அப்படி என்றால் பயணிகளை நான்கு பேர் வரை இந்த காரில் அழைத்துச் செல்ல முடியும்.
அத்துடன், லக்கேஜ்களை பின்பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியும். ஆகையால், பேக்கேஜின் கீழ் வாடிக்கையாளர்களை லாங் டிராவல் அழைத்துச் செல்ல ஏதுவான கார் மாடலாகவும் டிசையர் காட்சியளிக்கின்றது. இந்த செடான் காரில் ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 22.41 கிமீ தொடங்கி 22.61 கிமீ வரையில் மைலேஜைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த கார் ரூ. 6.51 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் மலிவு விலை மற்றும் அதிக மைலேஜ் நல்ல லாபத்தை கால் டாக்சி சேவையில் பெற்றுக் கொள்ள உதவியாக இருக்கும். இதனால் பல கால் டாக்சி டிரைவர்களின் முதன்மையான தேர்வாக இந்த கார் மாடல் இருக்கின்றது.
மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga): இந்த காரில் நிறைய பேரால் பயணிக்க முடியும். இதனாலேயே கால் டாக்சி சேவை பிரிவில் புகழ்பெற்ற கார் மாடலாக எர்டிகா இருக்கின்றது. பலர் குடும்பத்துடன் பயணிக்க இந்த காரையே தேர்வுச் செய்கின்றனர். இந்த காரின் பராமரிப்பு செலவும் மிக மிக குறைவே ஆகும்.
இந்த கார் இந்தியாவில் ரூ. 8.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. இது ஓர் 7 சீட்டர் எம்பிவி வகை கார் மாடல் ஆகும். இதில் ஒரு லிட்டருக்கு பெட்ரோலுக்கு 20 கிமீ - 21 கிமீ வரையில் மைலேஜை பெற்றுக் கொள்ள முடியும். இதனால்தான் கால் டாக்சி மற்றும் வாடகை வாகன சேவை பிரிவில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கின்றது.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி (Toyota Innova Crysta MPV): என்றும் பெஸ்ட்டான டிராவல் கார் இதுவாகும். அதாவது, நீண்ட தூரம் குடும்பத்துடன் சொகுசாக பயணிக்க ஏற்ற கார் மாடலே இதுவாகும். எனவேதான் இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது.
குறிப்பாக, அரசியல்வாதிகள் பலர் இந்த காரையே இப்போது பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் இந்த காருக்கு கால் டாக்சி சேவை பிரிவிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பிரீமியம் கட்டணம் இந்த காருக்கு வசூலிக்கப்பட்டாலும் பலர் தங்களின் நெடுந்தூர பயணங்களுக்கு இந்த காரையே தேர்வு செய்கின்றனர்.
ஆகையால், இந்த கார் மாடலை கால் டாக்சி பிரிவிற்காக வாங்கிப் போட்டால் நல்ல வசூலை தாராளமாக பார்க்க முடியும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவின் ஆரம்ப விலை ரூ. 19.99 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இதில் ஒரு லிட்டருக்கு 15.60 கிமீட்டருக்கும் குறைவான மைலேஜை பெற முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் ஆகும். மேலும், மைலேஜ் விபரங்களும் தயாரிப்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டவை ஆகும். இதில் கொஞ்சம் முன்-பின் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இந்தியாவில் கால் டாக்சி சேவை பிரிவில் இந்த கார் மாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








